"ஒளிப்பறவை" எனும் சிற்பியின் இந்த நூல் ஒரு பழைய புத்தகக் கடையில் கிடைத்தது. 24.8.96 அன்று கவிஞர் சிற்பி அவர்கள் கைப்பட நல்லாசி வழங்கி ஒரு வாசகருக்கு எழுதி வழங்கிய சிறப்புப் பிரதி அது. புத்தகப் பிரியர்களுக்கு இது போன்று எதிர்பாராமல் நல்ல புத்தகங்கள் கிடைக்கும்போது லாட்டரி விழுந்ததுபோல் ஒரு மகிழ்ச்சி. இந்த நேரத்தில் நாங்கள் எங்களது மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் மூலம் நடத்திய பாரதி விழாவிற்கு காரைக்குடி வந்து, சிற்பி அவர்கள் சிறப்புரையாற்றி, செவிக்கும் சிந்தனைக்கும் விருந்தளித்ததை நினைத்துப் பார்க்கிறேன். இந்நூலிலிருந்து எனக்குப் பிடித்த கவிதையொன்று:
சருகு
வாழ்க்கைப் புத்தகம் விரிந்து கிடந்தது
வரிக்கு வரி படித்தேன்
வளர்ந்தது வளர்ந்தது முடிவே இல்லை
உணர்ந்தவன்போல் நடித்தேன்
சொட்டும் மழைத்துளி ஒன்றின் சரித்திரச்
சூத்திரம் அறியாதேன்
வட்டமிட் டலைந்து பூமியை அளந்து
முடித்தவன்போல் திரிந்தேன்.
அருகம் புல்லின் பச்சை மொழிக்கோர்
அரும்பொருள் தெரியாமல்
இருளின் குரலும் ஒளியின் பேச்சும்
இவையெனக் கூறுகின்றேன்
நாதப்புனலில் மோதிடும் ஆன்மா
கதறுதல் உணராமல்
காதற்கனவின் பேதைப் புலம்பல்
கதையை அளக்கின்றேன்
ஆளைமுகட்டில் கோலமிடும் புகை
அடிவாரக் கனலைச்
சோலை நிழலின் சுகத்தில் இருந்து
சோடனை புரிகின்றேன்
இயந்திர உலகம் இருகரம் நீட்டும்
இயற்கை முந்திவரும்
மயக்கிடும் நெரிசல் வேகத்தில் எனது
மனதைப் பிளந்துவிடும்!
சுவடுகள் பதிக்கும் காலத்தை ஓடித்
தொடநான் விரைவேனோ!
தவிடாய் உமியாய்க் கவிச்சருகு உதிர்த்து
வெறுமையில் கரைவேனோ?
1 கருத்து:
சருகு என்னும் இந்த கவிதை எனக்கு மு.மேத்தாவின்
"செருப்புடன் ஒரு பேட்டி" என்ற கவிதையை ஞாபகப் படுத்துகிறது.
செருப்பைப் பார்த்து "உங்களுக்கென்று ஏதேனும் தத்துவப் பார்வை
உண்டா?" என்று வினவுவார். அதற்க்கு செருப்பு சொல்லும்
"- உண்டு:
சருகை மிதிக்கும் போது
சப்திக்கும் நாங்கள்,
மலர்களை மிதிக்கும் போது
மெளனமாய் இருக்கிறோம்" என்று.
அந்த முழுக்கவிதையும் மிக நன்றாக இருக்கும்.
-நெல்லை.
கருத்துரையிடுக