செடியிலிருந்து பிரித்த பின்னும்
மாலையாக தொடுத்த பின்னும்
மரணத்திற்கு வெகு அருகிலும்
மலர்ந்து பூ சிரிக்கும் சிரிப்பில்
பாடம் இருக்கு மனித குலத்திற்கு.
காற்றுப்போல கனமற்று இருப்பதில்
விசயமுண்டு குறித்துக்கொள்ள;
உருவு கண்டு எள்ளாமை எனபது,
செம்பருத்தி படித்த பாடம்-
மல்லிகை மலர்களிடமிருந்து;
இறுமாந்திருந்த
வண்ண மிகு மலர்கள்
இரவினில் கற்ற பாடம் -
"வண்ணத்தை விட
வாசனை சிறந்தது"
கதம்ப மாலையிடம்
உதிரிப்பூக்கள்,
கற்றுக்கொண்ட புதிய பாடம்-
ஒன்று சேர்ந்தால் மதிப்புயரும்;
வண்ணமும் வாசமும்
தந்த தலைக் கனத்தைத்
தட்டி வைக்க,
பாதியில் வந்ததுதானோ
ரோஜாவில் முள்.
உள்ளே இருக்கும் மது
வண்டுகளுக்கு மட்டும்தானென
புரிந்து கொண்டுள்ளதால்
தள்ளாடுவதில்லை மலர்கள்.
தண்ணீரிலேயே இருந்தாலும்
தலையை மட்டும்
தண்ணீருக்கு வெளியே வைத்திருக்க
அறிந்து வைத்திருக்கின்றன
அல்லியும் தாமரையும்.
கண்களையும் காதுகளையும்
விரியத் திறந்து வைத்தால்,
பார்க்கும் ஒவ்வொன்றிலிருந்தும்
பாடம் படிக்கலாம் என்பது
பூக்கள் புகட்டும் புதிய பாடம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக