இரண்டு நாட்களாக மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். 'ஆன்லைன்' (online) நூலகமான, 'உலகப் பொது நூலகத்தில்' (World Public Library: http://worldpubliclibrary.org/) உறுப்பினரானேன் நேற்று. வெகுநாட் கனவு நேற்றுத்தான் நிறைவேறியது. இன்னும் ஓராண்டு காலத்திற்கு ஐந்து லட்சம் புத்தகங்களை 'டௌன்லோட்' (download) செய்யவும், படிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நினைத்தாலே இனிக்கிறது! அதுமட்டுமல்ல, 'உலக இ-புத்தகத் திருவிழா' (World eBook Fair) தொடங்கும் ஜூலை 4-ம் நாள் முதல் ஒரு மாதகாலம் இருபத்திரண்டு லட்சம் புத்தகங்களுக்கு மேல் 'டௌன்லோட்' செய்யலாம், படிக்கலாம்! ஒரு புத்தகப்பிரியனுக்கு இதைவிட மகிழ்ச்சியான சேதி என்ன இருக்க முடியும்?
'கிரிடிட் கார்டு' மூலம் 8.95 அமெரிக்க டாலர்கள் ஆண்டுச் சந்தா செலுத்தியவுடன் இந்தப் புத்தகப் பொக்கிஷ அறையைத் திறக்கும் சாவி என் கையில் வந்தது.
முதலில் கிடைத்த ஜாக்பாட் 'ப்ராஜெக்ட் மதுரை' (Project Madurai: http://www.infitt.org/pmadurai/index.html). சங்கத் தமிழ் இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மற்றும் ஜெயகாந்தனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகள், கல்கியின் நாவல்கள், ஈழத் தமிழரின் படைப்புகள் என்று எவ்வளவோ!
கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் 'டௌன்லோட்' செய்வதிலேயே கழிந்தது. அதற்காக ஒன்றுமே படிக்காமல் விட்டுவிட முடியுமா? முதல் நாளே ஏதாவது படிக்க வேண்டாமா? படித்தேன் ஜெயகாந்தனின் 'யுகசந்தி' என்ற சிறுகதையை. என்னவொரு அற்புதமான படைப்பு! பொறுமையின் இலக்கணமாய், சகிப்புத்தன்மையின் சிகரமாய், பார்ப்பதற்கு சென்ற நூற்றாண்டின் சின்னமாய்த் தோன்றினாலும், இந்தக் காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் ஆற்றல் மிகுந்த கௌரிப்பாட்டி ஒரு வித்தியாசமான படைப்பு. (...நேற்றுப் பிறந்த குழந்தைகளெல்லாம் அதோ ரிக்ஷாவிலும், ஜட்காவிலும், சைக்கிளிலும் பரந்து, பரந்து ஓடுகிறார்கள். மழையும், வெயிலும் மனிதனை விரட்டுகின்ற கோலத்தை எண்ணி பாட்டி சிரித்துக்கொண்டாள். அவளுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டா? வெள்ளமாய்ப் பெருகிவந்த வாழ்வின் சுழிப்பிலும், பின் திடீரென வறண்ட பாலையை மாறிப்போன வாழ்க்கை நெருப்பிலும் பொறுமையாய் நடந்து பழகியவளை, இந்த வெயிலும் மழையும் என்ன செய்யும்? ...)
இந்த நேரத்தில் சில வருடங்கள் பின்னே சென்று, நினைத்துப் பார்க்கிறேன். காரைக்குடி புத்தகத் திருவிழாவை நடத்துவது என்று காலை முன்வைத்தாகிவிட்டது. 'கையைச் சுட்டுக்கொள்ளப் போகிறாய்! சிக்கலில் மாட்டிக்கொள்ளப் போகிறாய்! என்று அனைவரும் எச்சரித்துக் கொண்டிருந்த நேரம். அதற்கு என் உள்மனதில் இருந்து கீதை பதில் சொல்லிக் கொண்டிருந்தது: "The doer of good never comes to harm." "No effort is ever wasted." "My devotee never perishes."
முன்னனுபவம் இல்லாமல் இப்படி ஏதோ தைரியத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். நகரின் முக்கிய பொதுநல அமைப்புக்களும், பிரமுகர்களும் ஆதரவு தர முன்வந்தனர். அதுவே ஓரளவு தைரியத்தைக் கொடுத்தது. இருந்தாலும் உதறல்தான், எல்லாம் நல்லபடியாக அமையவேண்டுமே!
முதல்கோணல் முற்றிலும் கோணலாகிவிடுமே! எனவே துவக்க விழா மிகச் சிறப்பாக அமைய வேண்டும், மிகச் சிறந்த எழுத்தாளர் ஒருவர் வந்து துவக்கி வைத்தால் சிறப்பாக இருக்குமே என்று சிந்தித்துக் கொண்டிருந்தோம் . நிறைய ஆலோசனைகள். ஆனால் என் மனதில் திரு ஜெயகாந்தன் அவர்களை எப்படியாவது அழைத்துவந்து, சிறப்புரையாற்ற வைக்கவேண்டும் என்ற ஆசை. என் உள்ளக்கிடக்கையை கவிதா பதிப்பகம் திரு சேது.சொக்கலிங்கம் அவர்களிடம் கூறினேன். 'எனக்கு இந்த உதவியை மட்டும் செய்யுங்கள். நீங்கள் வேறெதுவும் செய்யவேண்டாம்' என்றேன். 'கவலைப்படாதே சூரி! நான் ஏற்பாடு செய்கிறேன்' என்று நம்பிக்கை தந்தார் அவர். அப்போது அவர் ஜெகேயின் புத்தகங்களை தொகுத்து வெளியிட்டிருந்தார். அவர் சொன்னபடியே செய்தது மட்டுமல்ல, ஜேகேயை காரைக்குடிக்கு அழைத்து வரும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
இங்கே நான் ஒன்றைப் பதிவு செய்யவேண்டும்: காரைக்குடி புத்தகத் திருவிழா நிறைய அற்புதமான, ஆற்றல்மிக்க மனிதர்களுடன் (எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள்) நெருங்கிப் பழகும் வாய்ப்பைத் தந்தது. மேலும் அவர்களது அன்பிற்கும், நட்பிற்கும் ஆளாக்கியது. அப்படிக் கிடைத்த ஒரு அரிய நண்பர்தான் திரு 'கவிதா' சொக்கலிங்கம் அவர்கள்.
திறப்புவிழாவில் ஜேகேயின் சொற்பொழிவு அற்புதமாக அமைந்தது. வாசகர் கூட்டம் ஆடாமல், அசையாமல் கட்டுண்டு அவரது தெளிவான சிந்தனையில் வடிந்த சிறப்புரையில் மயங்கிக் கிடந்தது.
பிறகு கேட்பானேன்? தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளும் அமைய, முதல் காரைக்குடி புத்தகத் திருவிழாவே வெற்றிகரமாக அமைந்தது. இன்று அது ஏழாவது புத்தகத் திருவிழா வரை நீண்டுவிட்டது; இன்னும் நீளும். இவ்வாறு கம்பன் விழா போல், காரைக்குடி புத்தகத் திருவிழாவும் காரைமா நகருக்கு மேலும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் அசைபோட மனதில் மகிழ்ச்சி பொங்குகிறது. இந்த நேரத்தில் புத்தகத் திருவிழா வெற்றி பெற கடும் உழைப்பையும், ஆதரவையும் நல்கிய அனைத்து உள்ளங்களையும் நன்றியுடன் போற்றி மகிழ்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக