24 ஜூலை, 2009

கற்பனைச் சிறகுகள்-1: "வாடகை வீடு"

"ஆத்மபாலன், ஆத்மபாலன்!"

யார் அழைப்பது? பெரும்பாலும் என்னை "பாலு" அல்லது "பாலன்" என்றுதான் அழைப்பார்கள். எங்கள் வீட்டுக்காரர் ஒருவர்தான் என்னை முழுப்பெயர் சொல்லி அழைப்பவர்.

மாடியிலிருந்து மாயா டீச்சர் எட்டிபபார்த்துவிட்டு, அதை உறுதி செய்யும் வண்ணம், "சார், வீட்டுக்காரர்! ஜாக்கிரதை!" என்று சொல்லிவிட்டு மாயமானார்.

வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் படும் பாடு சொல்லி முடியாது. வீட்டுக்காரர் அடிக்கடி வீட்டு வாடகையை உயர்த்துவது, அல்லது வீட்டைக் காலி செய் என்று உயிரை எடுப்பது அல்லது வீட்டை நன்றாக வைத்துக் கொள்ளவில்லை குறைகூறுவது என்று பலப் பல தொல்லைகள். ஆனால் எங்கள் வீட்டுக்காரர் அப்படியெல்லாம் தொல்லை கொடுத்தது இல்லை. அறுபது ஆண்டுகளாய் இந்த வீட்டில் வசித்து வருகிறேன். சிறு சிறு தொல்லைகள் உண்டு. ஆனால் காலி பண்ணு, வாடகை அதிகம் கொடு என்று தொல்லை பண்ணியதில்லை. அப்படி இருந்தவர் அண்மையில் சில காலமாக வீட்டைக் காலி பண்ணச் சொல்லி தொல்லை கொடுக்க ஆரம்பித்து விட்டார்.

எங்கள் வீட்டின் ஒரு புற மாடியில் என்னுடைய இரட்டைப் பிறவி (ஒரு சில விநாடிகள் முன் பிறந்ததால், அண்ணன்) ஆத்மநாதனும், இன்னொரு மாடியில் இன்னொரு ஒண்டிக் குடித்தனமாக ஒரு டீச்சரும் இருந்தார்.

மெதுவாக வாசல் கதவைத் திறந்து, "வாங்க சார், வாங்க! என்ன அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டீர்கள்" என்றேன்.

அதற்குப் பதில் சொல்லாமல், மேலும் கீழும் பார்த்துவிட்டு, அடுத்து அவர் என்ன சொல்வார் என்று நான் நினைத்தேனோ அதையே சொன்னார்.

"என்னப்பா! வீட்டைக் குப்பைத்தொட்டி மாதிரி வச்சிருக்கே! அழுக்கடைந்து, துர்நாற்றம் எடுக்குது! இப்படிச் சிதைந்து போய் இருக்கு! கண்டுகொள்ளாமல் இருக்கியே? இப்படியே விட்டு விட்டால் வீடு தானே படுத்து விடும் போல் இருக்கே!"

இதில் சிக்கல் என்னவென்றால் ஆரம்பத்திலேயே பராமரிப்புச் செலவை என்தலையில் கட்டி விட்டார். நானும் அப்போது அதை ஏற்றுக் கொண்டேன். பராமரிப்பு என்னுடைய பொறுப்பாகையால் என்னால் பதில் பேச முடியவில்லை. இருந்தாலும், விடாமல், நீங்கள் கொடுத்த வீட்டை எப்படியெல்லாம் மேம்படுத்தி, எப்படியெல்லாம் வசதி படுத்தியிருக்கிறேன். அப்போதெல்லாம் சந்தோஷப்பட்ட நீங்கள் இப்போது குறைகூறுகிறீர்கள். இது நியாயமா என்றேன்.

"புத்தம் புது வீடாக உன்னிடம் கொடுத்தேன். ஆரம்பத்தில் ஒழுங்காய்த்தான் வைத்திருந்தாய். ஆனால் சில ஆண்டுகளாக கண்டுகொள்வதேயில்லை. தற்போது பழுது பார்க்கும் நிலையையும் தாண்டி, இடித்து புதிதாகக் கட்டவேண்டிய நிலைக்கு கொண்டுவந்துவிட்டாய். எனவேதான் சொல்கிறேன், வீட்டைக் காலி பண்ணு!"

"வீட்டை இடித்து புதிதாகக் கட்டும் வரை நான் எங்கே போவது? வீடு கிடைப்பது எவ்வளவு சிரமம் என்று உங்களுக்குத் தெரியுமா?"

"வேண்டுமானால் கீழூரில் எனக்கு ஒரு சிறு வீடு இருக்கிறது. தாற்காலிகமாக அங்கே போய் இரு. புது வீடு கட்டி முடித்தபின் மறுபடியும் இங்கே வந்து விடலாம்."

அவர் சொல்லும் வீட்டை டீச்சருக்குத் தெரியும். ஆறடிக்கு இரண்டடி வீடு. போய் மாட்டிக் கொள்ளாதீர்கள் என்று எனக்கு ஏற்கனவே எச்சரிக்கை செய்திருந்தார்.

"அந்தப் பேச்சே வேண்டாம்" என்றேன் நான்.

"இல்லையென்றால் மேலூரில் ஒரு வீடு இருக்கிறது. அங்கே போகிறாயா?"

"முடியவே முடியாது. இந்த ஊரில் நான் செய்யவேண்டிய வேலைகள் நிறைய இருக்கின்றன. அங்கே போனால் இங்கே வேலைகள் கெட்டுவிடும்"

"உன் அண்ணன் எதிலும் பட்டுக் கொள்ளாமல் ஒரு சாமியார் மாதிரி இருக்கிறான். இந்த மாயா டீச்சர் வாடகையும் கொடுப்பதில்லை. உன்னை எனக்கு எதிராக திருப்பி, உனக்கு துர்போதனை வேறு செய்கிறாள். நான் வந்தால் எங்காவது ஓடி ஒழிந்து கொள்கிறாள். அவளை என்னைக் கேட்காமல் ஒண்டிக் குடித்தனம் வைத்ததும் நீதான்."

"என்னைக் குற்றம் சொல்வதை விடுங்கள் . என்னால் தற்போது வீட்டைக் காலி செய்ய முடியாது . எனக்கு அவகாசம் வேண்டும்."

"எவ்வளவு நாள் அவகாசம் என்பதையாவது சொல்லு"

"அதெல்லாம் என்னால் சொல்ல முடியாது. காலி செய்துவிடுவேன். அவ்வளவுதான் என்னால் சொல்ல முடியும்."

"நான் இப்படியே வெறும் பேச்சோடு நின்றுவிடுவேன் என்று எண்ணாதே. என்னால் உன்னை வீட்டைக் காலிபண்ணவைக்க முடியும். அந்த நிலைக்கு என்னை ஆளாக்கி விடாதே" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

அவர் அகன்றததுதான் தாமதம், "அவர் பேசியது அனைத்தையும் கேட்டுக்கொண்டுதான் இருந்தேன். பிடி கொடுக்காதீர்கள். அவரால் ஒன்றும் செய்ய முடியாது இப்படியே காலத்தை ஓட்டிவிடலாம்" என்றபடி வந்தார் மாயா டீச்சர்.

அடுத்த முறை வரும்போது வீட்டுக்காரருக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களிடம் நல்ல ஐடியா ஏதாவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்.

கருத்துகள் இல்லை: