11 ஜூலை, 2009

நினைத்துப் பார்க்கிறேன்-7: "சாருமுகம்"

நெல்லையில் நான் பதினோராம் வகுப்பு படிக்கையில் அறிமுகமானான் ஆறுமுகம். எனக்கு இரண்டு-மூன்று வயது இளையவன் என்று நினைக்கிறேன். அவன் எங்கள் பள்ளியில் எட்டாவதோ, ஒன்பதாவதோ படித்துக் கொண்டிருந்தான். அது மட்டுமல்ல, என் வீட்டிற்கு அருகில், எதிர் வரிசையில் அவன் வீடு. அப்போது அவன் பெற்றோருக்கு அவன் ஒரே பிள்ளை. (பல வருடங்கள் கழித்து அவனுக்குத் தம்பி பிறந்ததாகக் கேள்விப்பட்டேன். ஆனால் நான் அவனைப் பார்த்ததில்லை).

நாங்கள் இருவரும் 'புத்தகப் பைத்தியங்கள்'. அப்போது நான் 'அமுதம்' என்ற பெயரில் ஒரு கையெழுத்து இதழை நடத்திக் கொண்டிருந்தேன். அதில் எனக்கு அவன் உறுதுணை. நாங்கள் இருவரும் எழுதுவோம். நண்பர்களிடம் படிக்கக் கொடுப்போம். 'சாருமுகம்' என்ற புனைப்பெயரில் எழுதுவான் அவன். (அவனது பெயர் எஸ்.ஆறுமுகம்). ஓராண்டிலேயே நாங்கள் பிரிய நேரிட்டது. இரயில்வேயில் வேலை பார்த்துவந்த என் அப்பாவிற்கு மாற்றலாகி நாங்கள் மானாமதுரை சென்று விட்டோம். இருப்பினும் உறவினர்களைப் பார்க்க நான் நெல்லை வரும்போதெல்லாம் அவனைப் பார்ப்பேன். நாளடைவில் அதுவும் இல்லாமல் போனது.

நான் காரைக்குடியில் வேலைக்குச் சேர்ந்து காரைக்குடி வந்துவிட்டேன். அவன் தமிழக அரசின் வருவாய்த்துறையில் செங்கோட்டையில் வேலை பார்ப்பதாகக் கேள்விப்பட்டேன்.

திடீரென்று ஒருநாள் அவனிடமிருந்து கடிதம் வந்தது. என் உறவினர்களிடமிருந்து என் முகவரியைப் பெற்று எனக்கு எழுதியிருந்தான். எனக்கு 'இலக்கிய தாகத்தையும், எழுத்தார்வத்தையும் ஊட்டியவன் நீ" என்றெல்லாம் எழுதியிருந்தான். மகிழ்ச்சியாக இருந்தது. பதவி உயர்வு பெற்று மதுரையில் இருப்பதாக அறிந்து, ஒரு முறை அவன் வீட்டிற்குச் சென்று அவனைப் பார்த்தேன். அவனது துணைவியையும், மகளையும் அறிமுகப் படுத்தி வைத்தான்.

அதன் பிறகு ஓரிரு கடிதப் பரிமாற்றங்கள். அப்புறம் மறுபடியும் தொடர்பு விட்டுப்போனது.

பல ஆண்டுகள் கழித்து ஒரு நாள் இரவு அமெரிக்காவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு. ஆறுமுகத்தின் மகள் தன்னை அறிமுகப் படுத்திக்கொண்டு என் அலுவலகம் தொடர்பாக தகவல் கேட்டாள் ஒரு பெண். அப்போது பேச்சோடு பேச்சாக, "மாமா, அப்பா தற்போது இல்லை, தெரியுமா?" என்றாள். எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. "என்னம்மா, சொல்கிறாய்?" என்றேன் அதிர்ச்சியோடு. சில ஆண்டுகளுக்கு முன் ஓரிரவு மாரடைப்பால் திடீரென ஆறுமுகம் மறைந்ததை தெரிவித்தாள் அவள். (அதன் பின்னர் திருமணம் நடந்து, அவன் தன் கணவருடன் அமெரிக்கா சென்றிருக்கவேண்டும்.) எனது வேதனையை அவளிடம் தெரிவித்தேன். அன்றிரவு முழுவதும் அவனைப் பற்றிய நினைப்பும், வருத்தமும்தான். அதன் பிறகு அவனைப் பற்றி நினைக்க வாய்ப்பே இல்லாமல் போனது.

என்னுடைய இள வயதிலோ, பள்ளிப்பருவத்திலோ நடந்த எதுவுமே நினைத்துப் பார்க்கக் கூடியதாகவோ, பெருமைப் படக்கூடியதாகவோ இல்லை என்றெண்ணியிருந்தேன். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன் திடீரென அவன் நினைவு வர, அந்த நாட்களை நினைந்து, அந்த நினைவுகளை வேதனையுடன் இங்கே பதிவு செய்கிறேன்.

கருத்துகள் இல்லை: