18 ஆக., 2009

எனக்குப் பிடித்த கவிதை-55: "எல்லாம் வசப்படும்" - நாஞ்சில் நாடன்

குற்றாலத்து அருவியின் பாய்ச்சலை
அறைக்குள் நிறுத்தலாம்
வங்காளத்து விரிகுடா ஓசையை
அகழ்ந்து கொணரலாம்
சுந்தர் வனத்து காட்டின் இருட்டை
முன்றில் படர்த்தலாம்
பெரிய கோயில் பிரகாரக் குறிகளைப்
படுக்கையில் புணரலாம்
சிங்கக் குட்டியின் செவியைத் துளைத்து
சங்கிலி கோர்த்து நடத்தித் திரியலாம்
ஆதிகேசவன் கோயிலில் பெயர்த்த
பாளம் பதித்து அழுக்குத் துவைக்கலாம்
கனகவிசயர் சுமந்த கல்லில்
அம்மியும் குழவியும் அடித்துப் போடலாம்
சந்தனக் காட்டின் வைரம் இழைத்து
கக்கூசுக்கு கதவு பூட்டலாம்
வரவேற்பறையின் வளைவில் நிறுத்த
ரோடின் சிற்பம் செதுக்கித் தருவார்
உணவுக் கூட அகலத்துக்கென
சால்வடர் டாலி வரைந்ததும் தருவார்
அடிப்படையாக அறிக நீ ஒன்று
பொருள் மேல் பொருள் செயும் ஆறு
எதுவென

- மண்ணுளிப் பாம்பு
நாஞ்சில் நாடன் கவிதைகள்
விஜயா பதிப்பகம், கோவை
பக்கங்கள் 64
விலை ரூ.30/-

நன்றி: திரு நாஞ்சில் நாடன் அவர்கள் & விஜயா பதிப்பகம்

கருத்துகள் இல்லை: