என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
30 நவ., 2009
இன்று படித்தவை-13: நவம்பர் 28, 2009
படிக்கவேண்டும் என்று புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், சஞ்சிகைகளையும் மேஜை மேல் அடிக்கிக்கொண்டே போகிறேன். பத்து புத்தகம் அல்லது பத்திரிக்கை வாங்கி, ஒன்றை எடுத்துப் படித்து முடிப்பதற்குள் அடுத்த பத்து வந்து சேர்ந்துவிடுகின்றன. என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு காலத்தில் ஹேரி லோரைன் வேகமாகப் படிக்கும் முறையை (Harry Loraine Speed Learning Technique) ஓரளவு பயின்று அதைப் பின்பற்றியும் இந்த நிலை.
புதிய தலைமுறை, வார இதழ், அக்டோபர் 15, 2009:
-------------------------------------------------------------
புதிய தலைமுறை வார இதழ் மெருகேறிக்கொண்டே போகிறது. தமிழில் இப்படி ஒரு இதழ் இருப்பது பேரு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மிகவும் பின்தங்கியிருக்கிறேன் - நான்கு இதழ்கள் சேர்ந்துவிட்டது!
இந்த இதழில் என்னைத் தொட்ட சில மட்டும்:
1. தேவை: சிகரெட் உற்பத்திக்குத் தடை
பொது இடங்களில் புகைக்க தடைச் சட்டம் வந்து ஓராண்டைத் தாண்டியும் எதிர்பார்த்த பலன் இல்லை. நிறையப் பேர் பொது இடங்களில் புகைக்கின்றனர். அவர்களை யாரும் எதுவும் செய்வதில்லை. இதைப் பற்றிய மாலன் அவர்களது கட்டுரை.
2. பத்தாயிரம் மைல் பயணம்
வெ.இறையன்பு அவர்களின் இனிய கட்டுரை. பல பயனுள்ள, சுவையான தகவல்கள் அடங்கியது. முதல் வரியே அருமை: "சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. "ஒருவன் மரணமடைவதற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்". பத்தாயிரம் மைல் நடக்கிறேனோ என்னவோ, பத்தாயிரம் புத்தகங்கள் நிச்சயம் படித்திடுவேன்.
"பயனங்கலால்தான் வரலாற்று நூல்கள் உருவாயின. முதல் வரலாற்று நூலை எழுதியவர் ஹிரோடட்டஸ். அவர் சரித்திரங்கள் என்ற பெயரில் ஒன்பது புத்தகங்களை எழுதினார். ஒரு சுற்றுலாப் பயணியைப்போல ௨௪௩0 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டிலிருக்கும் மூன்று பிரமிடுகளைப் பார்வையிட்டார். பயணத்தின்போது அவர் பார்த்தவையும், கேட்டவையும் அவரை நூலாசிரியராக மாற்றியது. பயணம் நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகின்ற ஒளிச்சாதனமாய்த் திகழ்கிறது."
"பயன்களால் தேசங்கள் இணையும். தடுப்புச் சுவர்கள் உடையும். அன்பு பெருகும். பண்பாடு பரிமாறப்படும். விஞ்ஞானம் செழிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும்..."
இப்படி பல சுவாரஸ்யமான, சுவையான செய்திகள்.
3. அன்று பத்தாம் வகுப்பு தவறியவர் இன்று பிஎச்.டி.
கல்வி தடைப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்று தன்னம்பிக்கை ஊட்டும் முனைவர் பரசுராம் அவர்களைப்பற்றிய யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரை.
4. தெய்வம் தந்த பூ!
இந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டுத்தான் நானும், தம்பி நெல்லையும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை எல்லாம் சென்று வந்தோம். மறக்க முடியாத அனுபவங்கள். ஏற்கனவே இந்த வலைப்போவில் தனியே பதிவு செய்துள்ளேன் படங்களுடன்.
5. உருப்பட ஒரு புத்தகம்: "உன்னதம் உங்கள் இலக்கா?"
"நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சி கொண்டிருப்பவரா? "
உன்னத நிலையை அடைவதற்கான வழிகளைக் கூறும் பா.ராகவன் அவர்கள் எழுதிய "எக்ஸலன்ட்" என்ற சுய முன்னேற்ற நூலைப் பற்றிய கட்டுரை.
இன்னும் பல கட்டுரைகள், பயனுள்ள செய்திகள், தகவல்கள். குறிப்பாக இளைஞர்கள் வாங்கிப் படித்து, தொக்குத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக