29 நவ., 2009

கருத்துக்கள்-18: "பரிசுகள்"



பரிசுகள் வழங்கும் பழக்கம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானது. திருமணம், பிறந்தநாள், மணிவிழா, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்று பல சமயங்களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் போட்டிகளுக்கும், மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.

இதில் பிரச்சினை என்னவென்றால் பரிசுப் பொருளை தேர்ந்தெடுப்பது. என் நண்பர் ஒருவர் கூறினார்: "என் வீட்டில் கழிப்பறை தவிர எல்லா அறைகளிலும் சுவர்க்கடிகாரம் உள்ளது. அத்தனையும் பரிசாக வந்தது." ஒரு சமயத்தில் பல பேர் ஒரே பொருளை பரிசாக வழங்கி, பெற்றவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்து வரும் வாய்ப்பில் அதை அவர் மற்றவர்க்கு பரிசாக வழங்கி, அப்பாடா என்று பெருமூச்சு விடலாம்.

இந்த பிரச்சினைக்கு விடையாக சிலர் பணமாகவே பரிசுகளை வழங்கி விடுகின்றனர். இதிலும் வேடிக்கை இருக்கிறது. ஒரு பெரும் பணக்காரருக்கு ஒன்றுமே இல்லாத சாதாரண மனிதர் பணம் பரிசாகக் கொடுப்பது.

நானறிந்தவரை இதற்கு சரியான விடை நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவதே. பெறுபவரின் விருப்பு வெறுப்புகளை ஓரளவு அறிந்திருந்தால் சரியான புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடியும்.

காரைக்குடியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம் அளித்தோம். பள்ளிகளில் வழங்கப்படும் பரிசுகள் அனைத்தும் புத்தக வடிவில் இருக்க வேண்டும். பல பள்ளிகள் பிளாஸ்டிக் சாமான்கள், பாத்திரங்கள் என்று பரிசு வழங்கியதை மாற்றி, புத்தகங்களைப் பரிசாக வழங்கினர்.

சமீபத்தில் நடந்த எனது மணிவிழாவில் இரண்டு அன்பர்கள் மட்டும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். ஒரு அன்பர், சிரிக்க வேண்டாம், இரயில்வே கால அட்டவணையைப் பரிசாக வழங்கினார்! இன்னொரு நண்பர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிந்தனைத் தொகுப்பான, "ஆயிரம் ஜன்னல்" என்ற அற்புதமான நூலையும், சுஜாதாவின் "கடவுள்" என்ற நூலையும் அன்புப் பரிசாக வழங்கினார்.

ஒன்று இரண்டுமே என்னிடம் இல்லாத புத்தகங்கள். இரண்டாவது இரு நூலாசிரியர்களும் நான் பெரிதும் மதிப்பவர்கள். ஆயிரம் ஜன்னலில் முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். என் மனதிற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது. அற்புதமான புத்தகம் என்பதை அவை கட்டியம் கூறுகின்றன. ஏற்கனவே சத்குரு அவர்களின் "அத்தனைக்கும் ஆசைப்படு" புத்தகத்தை மூன்று முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தேர்ந்தெடுத்த பகுதிகளை எனது குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறேன். ஈடு இணையற்ற நூல் அது.

இந்த இரு புத்தகங்களை வழங்கிய அன்பர் பணத்தைச் செலவு செய்தது மட்டுமல்லாமல், நேரத்தை செலவு செய்து, சிந்தனை செய்து, எனக்கு என்ன பிடிக்கும் என்று யூகித்து, புத்தகக் கடையைத் தேடிச் சென்று அருமையான இந்த இரு புத்தகங்களை வாங்கியிருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இத்தருணத்தில் எனது மணிவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அன்பர்கள், சிறப்பாக நடக்க உதவிய அன்பர்கள், பரிசுகள் வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

கருத்துகள் இல்லை: