16 நவ., 2009

எனது மணி விழா (சஷ்டியப்தபூர்த்தி)

கிரிகோரியன் கேலண்டர்படி (Gregorian Calendar) நான் சென்ற அக்டோபர் இருபத்தோராம் நாள், அறுபத்து ஒன்றாவது வயதில் அடி எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் நம்மவர்கள் நட்சத்திரக் கணக்குப்படி, தமிழ் கணக்குப்படி, அறுபது ஆண்டுகள் என்ற சுழற்சி. எனவே அறுபது வயது முடிந்தபின் பிறந்த அதே வருடம் மறுபடியும் வரும்.

நான் பிறந்த 'விரோதி' வருடம் மறுபடியும் வந்திருக்கிறது. விரோதி வருடம் ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தேன். அன்று தீபாவளி. தற்போது
நவம்பர் பதினான்காம் நாள் எனது ஜன்ம நட்சத்திரம்.

என் பிள்ளைகள் மணிவிழா எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லாததற்கு காரணங்கள் உண்டு.

1. அந்தக் காலத்தில் அறுபது வயது வரை வாழ்வது பெரிய சமாச்சாரம். இன்று அறுபது, எழுபது என்பது சர்வ சாதாரணம். எனவே அறுபது வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

2. சொத்துபத்து, வசதி வாய்ப்பு உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கொண்டாடலாம். தங்கள் பேரன் தும்மல் போட்டால்கூட அதைக் கொண்டாடலாம். என்னிடம் சொத்து பத்து எதுவும் கிடையாது. எனவே நான் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

3. வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்கள் மணிவிழாவில் எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. என் வாழ்வில் அது போன்ற சாதனைகள் எதுவம் இல்லை. எனவே நான் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

மாற்றுக் கருத்து: என் பிள்ளைகள் என் திருமணத்தைப் பார்க்கவில்லை. தற்போது அதைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஹோமம் வளர்த்து, மந்திர ஜபங்கள் ஒலிக்க, தோஷங்கள் நீங்கி, வாழ்வின் கடைசிப் பக்கங்களை நிம்மதியாகக் கழிக்கலாம்.

எனவே இறுதியில் மிக எளிய விழாவிற்கு உடன்பட்டேன். அவ்வளவுதான். அதற்கப்புறம் அது படிப்படியாக விரிந்துகொண்டே போய் பெரிதாகிவிட்டது. மாட்டிக்கொண்டோம் என்ற உணர்வுதான் இருந்தது.

விழா முடிந்தபின் இந்த உணர்வு முற்றிலுமாக மறைந்து மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. நம் மேல் பேரன்பு கொண்டவர்கள், நெருக்கமானவர்களுடன் கூடி உறவாடியது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.

அன்பை அபரிமிதமாக வெளிப்படுத்த, அன்பைப் பரிமாறிக்கொள்ள, அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. கலந்துகொண்டு அன்பைப் பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விழாவில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
































கருத்துகள் இல்லை: