இன்று திருவள்ளுவர் தினம். அய்யன் என்றும், செந்நாப்போதார் என்றும், தெய்வப்புலவர் என்றும் அவர் புகழ் பாடுகிறோம். தமிழ் மறை என்றும், உலகப் பொது மறை என்றும் அவர் படைத்த திருக்குறளைப் போற்றி மகிழ்கின்றோம். அவருக்குச் சிலைகள் சமைத்தும், நினைவுச் சின்னங்கள் எழுப்பியும் கொண்டாடுகின்றோம். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பெருமிதப்படுகிறோம். அனைத்தும் நன்று. அதில் மாறுபட்ட கருத்த இருப்பதிற்கில்லை. ஆனாலும் அடிப்படையாக ஒன்றை நாம் மறந்துவிட்டோமோ?
மாணவர்களை, குழந்தைகளை திருக்குறளை மனப்பாடம் செய்வித்து அவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டுகின்றோம். 1330 குறளையும் மனப்பாடம் செய்யும் திறன் படைத்த குழந்தைகளைப் பெரிதும் பாராட்டிப் பரிசுகள் வழங்குகின்றோம். (ஆமாம், குழந்தைகள் ஏன் காமத்துப்பாலையும் படிக்க வேண்டும், மனப்பாடம் செய்யவேண்டும்? உரிய வயதில், உரிய காலத்தில் படித்தால் போதாதா? ).
அவர் நினைவைப் போற்ற இவற்றைவிட வேறு சிறந்த வழியில்லையா?
தமிழ் மறை என்கிறோம், அதை ஓதி உணர்ந்தோமா? சரியாகப் புரிந்துகொண்டு அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கிறோமா? திருக்குறள் ஒரு வாழ்கலை நூல். அன்றாட வாழ்க்கையை நாம் எப்படி வாழவேண்டும் என்று வழிகாட்டும் ஒப்பற்ற நூல். அப்படி இருக்க நாம் ஏன் அதன் மேன்மையான கருத்துக்களை மனதிற்கொண்டு, அவற்றின்படி ஒழுகுவதில்லை? இந்தக் கேள்வி அனைத்துத் தமிழருக்கும்தான், நான் உட்பட.
ஒரு சில ஒப்பற்ற குறள்களை மட்டுமாவது சரியாகப் புரிந்துகொண்டு, அவற்றின்படி நடந்தால் மட்டுமே திருவள்ளுவருக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்க முடியும்.
வெறுமனே மேலோட்டமாக அவர் புகழ் பாடிவிட்டு, எதிர்மறையாகச் செயல்படுவது அவரைக் கேலி செய்வதாக ஆகாதா? உதாரணமாக,
"அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்"
அறவழியில், தம் திறமையினால், யாருக்கும் தீங்கிழைக்காது ஈட்டிய பொருள் மட்டுமே இன்பத்தைத் தரும். சரிதானே?
ஆனால் நம்மில் எத்தனை பேர் இதைக் கடைப்பிடிக்கிறோம்? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
காலம் தாழ்ந்துவிட்டது, என்றாலும் நான் சிந்திக்க ஆரம்பித்துவிட்டேன். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக