பி.டி. கத்திரிக்காய் பற்றி ஏகப்பட்ட சர்ச்சை. அரசுத்தரப்பும், அறிவியலார் பலரும் நல்லதுதான் என்று மொட்டையாக, எந்தவித ஆதாரமின்றிக் கூற, அதை எதிர்ப்போர் பலர் சரியான அறிவியல் மற்றும் பொதுநலக் கருத்துக்களுடன் அதை திட்டவட்டமாக எதிர்கின்றனர். முற்றிலும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், விவசாயிகள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கருத்தைத் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்க்கு பச்சைக்கொடி காட்ட அரசு பரபரப்பது ஏன்? இதனால் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன. இருக்கட்டும்.
அவள் விகடன் பிப்ரவரி 26, 2010 இதழில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துக்களை திரு ஜி.பழனிச்சாமி அவர்கள் கட்டுரை வடிவில் தந்துள்ளதைப் படித்தேன். அதிலிருந்து சில முக்கிய கருத்துக்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்:
"மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதித்தால் மண்ணை மலடாக்குவதொடு, மனிதகுலத்துக்கே கேடாக அமையும். மரபணு மாற்றுக் கத்திரியை புழு, பூச்சிகள் கூட சாப்பிடாது என்கிறார்கள். அப்படிப்பட்ட விஷக் கத்திரிக்கையை மக்கள் எப்படி சாப்பிட முடியும்?
மண், சுற்றுச்சூழல், ஆரோக்கியம் என்று எல்லாவற்றையும் கெடுக்கக்கூடிய இந்த பி.டி. கத்திரியை இங்கே பயிரிட ஆர்வம்காட்டுவதன் பின்னணியில் வியாபார நோக்கம் இருக்கிறது. இதை அனுமதித்தால், நாட்டு ரக விதைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விடும். இதனால், முதலில் விவசாயிகள் அடிமைப்படுத்தப்படுவார்கள். அதன் தொடர் விளைவாக, நுகர்வோர்கலான நாமெல்லாம் பாதிக்கப்படுவோம். மக்களின் உணவு பாதுகாப்புதான் ஒரு அரசாங்கத்தால் மிக மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அத்தகைய உணவுப் பாதுகாப்பை பி.டி. ரக விதைகள் நிச்சயமாக அழித்துவிடும்.
உலக அளவிலேயே பல்வேறு துறையிலிருக்கும் மெஜாரிட்டியான விஞ்ஞானிகள் இதை எதிர்த்து வருகிறார்கள். சுகாதார ஆய்வு சம்மந்தப்பட்ட விஞ்ஞானிகள் அந்த ரகத்தைப் புறந்தள்ளுகிறார்கள். ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில் நாம் மட்டும் நம்முடைய மக்களின் வாழ்க்கையோடு விளையாடலாமா?
நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ், திரு ஜி.பழனிச்சாமி மற்றும் அவள் விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக