13 பிப்., 2010

சூரியின் டைரி-4: ஃ பிப்ரவரி 13, 2010



காலை ஐந்து மணிக்கு எழுந்தேன். எழுந்தது முதல் சிந்தனை எல்லாம் நேற்று துவங்கிய காரைக்குடி புத்தகத் திருவிழா பற்றித்தான். அரவிந்தை விரட்டி அனைத்து செய்தித்தாட்களையும் வாங்கி வரச் செய்தேன். புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளைத் தேடினேன். தினமணியில் புத்தகத் திருவிழா ஊர்வலப் படம் கருப்பு வெள்ளையிலும், தினத்தந்தியில் வண்ணத்திலும் வெளியாகி இருந்தது. வேறு செய்தி எதுவும் இல்லை.

எனவே நண்பர் ராஜசேகரன் அவர்களை அலைபேசியில் அழைத்தேன். துவக்க விழாவுக்குச் சென்றிருந்த அவர் மூலம் செய்திகள் அறிந்தேன். மாலை 6.30 மணி அளவில் விழா தொடக்கி இரவு 9 மணி அளவில் நிறைவுற்றதை அறிந்தேன். விழாவில் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களது இருபது நிமிட உரை மிகச் சிறப்பாகவும், திருமதி சாரதா நம்பி ஆரூரன் அவர்களது கிட்டத்தட்ட ஒரு மணி நேர இலக்கிய உரை இனிமையாக இருந்ததையும் அறிந்தேன். மேலும் அவர் திருமதி ஆரூரன் அவர்கள் மறைமலையடிகள் அவர்களது பேத்தி என்ற தகவலையும் தந்தார். மற்றபடி கடைகள் நிறைய சிறப்பாக அமைந்துள்ளதையும் தெரிவித்தார்.

செய்தித்தாட்களில் வெளியாகி இருந்த படங்களை மேலே தந்துள்ளேன். ஏனோ படங்கள் சரியாக அமையவில்லை. மன்னிக்கவும். புகைப்படக்கலையில் நான் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது. நேரில் செல்லும்போது நிறைய படங்கள் எடுத்து, இவ்வலைப்பூவில் பதிவு செய்யவேண்டும்.

முடிந்தால், நாளை ஞாயிறு அன்றோ அல்லது பிறிதொரு நாளிலோ கம்பன் மண்டபம் சென்று புத்தகக் கண்காட்சியை அவசியம் பார்க்க வேண்டும். உடல்நிலை ஒத்துழைக்க வேண்டும், பார்க்கலாம்.

நன்றி: தினத்தந்தி நாளிதழ், தினமணி நாளிதழ் மற்றும்
நண்பர் திரு RM.R.இராஜசேகரன் அவர்கள்.

கருத்துகள் இல்லை: