என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
4 மே, 2010
பயணங்கள்-10: மாமல்லபுரம்
நெல்லையப்பன் திருப்போரூர் வந்தபிறகு சென்ற ஏப்ரல் மாதம் நான் இரண்டாம் முறையாக அங்கு சென்றேன். அப்போது நெல்லையப்பன் சொன்னான்: மாமல்லபுரம் பதினான்கு கிலோமீட்டர்தான். அதிகாலையில் என் வண்டியிலேயே போய்விடலாம் என்று. நானும் நல்ல வாய்ப்பு என்று சரி சொன்னேன்.
அதிகாலையில் எழுந்து காலைக்கடன் முடித்து, டீ குடித்துவிட்டு, நாங்கள் திருப்போரூர் அவுட்டரைக் கடந்தபோது மணி ஐந்து. மாமல்லபுரம் கடற்கரையை நாங்கள் வந்தடைந்தபோது விடிந்தும் விடியாமலும் இருந்தது. ஆனாலும் பார்வையாளர் கூட்டத்திற்குக் குறைவில்லை. சூரிய உதயக் காட்சியைக் காண அனைவரும் காத்திருந்தோம். கதிரவன் உதயமானதும் எனது கேனன் கேமராவில் பதிவு செய்தேன்.
என்ன ஒரு குறை என்றால் கடலோரக் கோவிலின் கோபுரங்கள் மஞ்சள் கலர் டார்ப்பாலினால் பாதி மூடப்பட்டிருந்தது. மாமல்லபுரம் என்றாலே அந்தக் கோபுரங்களின் படங்களைத்தான் நினைப்போம். வெளியிடப்பட்ட அந்தப் பகுதியைச் சுற்றிலும் ஒரே குப்பை கூளம்; குறிப்பாக எங்கு பார்த்தாலும் பாலிதீன் கழிவுகள். திருவள்ளுவரின் காவலில் மக்கள் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தனர். கடற்கரையோரம் நடப்போமென்றால் எங்கு பார்த்தாலும் குப்பை, மேலும் திறந்த வெளி கழிப்பிடமாக மக்கள் பயன்படுத்துவதை உணர முடிந்தது. உலகப் புகழ் பெற்ற, வரலாற்றுப் புகழ் பெற்ற, உலகம் முழுவதும் பலர் வந்து பார்க்கும் இடத்தைக்கூட நம்மால் துப்புரவாக வைத்துக் கொள்ளமுடியவில்லை. வேதனைதான்!
எவ்வளவுதான் பார்த்தாலும் அலுக்காத கடலைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, சுகமான கடற்காற்றை அனுபவித்துவிட்டு, சாலையோரமிருந்த சிற்பக்கூடங்களிளிருந்த சிற்பங்களைப் படம் பிடித்தேன். கடற்கரையிலேயே நிறைய நேரத்தைச் செலவிட்டபடியால் மற்ற இடங்களைப் பார்க்க நேரமில்லாமல் போனது. பரவாயில்லை, மறுபடியும் வரலாம் அருகில்தானே என்று சமாதானம் சொல்லிக்கொண்டு கிளம்பினோம்.
இந்தத் தடவை பிடித்த படங்களில் சிலவற்றை மேலே பதிவு செய்துள்ளேன். (நேற்றிரவு "மாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள்" என்ற பெயரில் தற்காலத்திலும் சிற்பிகள் வடித்துக் குவிக்கும் சிற்பங்கள் பற்றி மூன்று பதிவுகள் செய்துள்ளேன். மகேந்திர வர்மன், நரசிம்ஹ வர்மன் காலத்து, வரலாற்றுப் புகழ் பெற்ற சிற்பங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக