5 மே, 2010

பயணங்கள்-11: மாமல்லபுரத்து பல்லவகாலச் சிற்பங்கள்
































இரண்டாவது நாளும் அதிகாலையிலேயே புறப்பட்டு மாமல்லபுரம் சென்றுவிட்டோம். இம்முறை கடற்கரைக்குச் செல்லாது, அருள்மிகு ஸ்தல சயனப் பெருமாள் கோவிலிலிருந்து தொடங்கினோம். 108 திவ்ய தேசங்களில் ஒன்று - 108 திருப்பதிகளில் ஒன்று - மாமல்லபுரம். திருமங்கையாழ்வாரால் மங்கள சாசனம் செய்யப்பெற்ற கோவில். மேலும் மாமல்லபுரம் பூதத்தாழ்வார் அவதரித்த திருத்தலம் போன்ற செய்திகள் கோவிலின் மதிலில் தரப்பட்டிருந்தது. நரசிம்ம பல்லவரின் காலத்திற்கு முன்பே இந்த ஊர் ஒரு சிறந்த வைணவத் தளமாக விளங்கியிருக்கிறது.

ஏற்கனவே மாமல்லபுரத்து இன்றைய சிற்பங்கள் - நவீன சிற்பங்கள் - பற்றி எழுதியிருந்தேன். தற்போது பல்லவ காலத்து வரலாற்றுச் சிற்பங்களைக் கண்டோம். அவற்றை என் கேமராவில் பதிவு செய்தேன். (அந்தப் படங்களை மேலே தந்துள்ளேன்).

தொடர்வதற்குமுன் வரலாற்றையும் சற்று புரட்டிப் பார்க்கலாம். பல்லவர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகவும், மாமல்லபுரத்தைத் தங்கள் முக்கிய துறைமுகமாகவும் கொண்டு ஆண்டு வந்தனர். மகேந்திர பல்லவனும், அவரது மகன் நரசிம்ம பல்லவனும் ஆண்ட காலம் பல்லவர்களின் பொற்காலம். மகேந்திர வர்மன் கிறிஸ்து பிறப்பதற்கு 630 முதல் 580 வருடம் வரையும், நரசிம்ம வர்மன் கிறிஸ்து பிறப்பது முன் 668 ஆண்டு முதல் 630 ஆண்டு வரையும் வாழ்ந்தனர் என்று வரலாறு கூறுகிறது. நரசிம்ம பல்லவன் மற்போரில் சிறந்தவன், மாமல்லன் என்று போற்றப்பட்டவன். அவனது பெயராலேயே இந்த ஊர் அமைந்தது. சிற்பக்கலையில் தலை சிறந்து விளங்கியது மாமல்லபுரம். இயற்கையாகவே நிறைய குன்றுகளும், பாறைகளும் அமைந்திருந்தது ஒரு காரணம்.

கடல் மலை, அர்த்த சேது, மல்லாவரம், மலை, மாமல்லை போன்ற பல பெயர்களால் விளங்கியது மாமல்லபுரம்.

வரலாற்றுப் புகழ் பெற்ற யுவான் சுவாங் மாமல்லபுரத்தைப் பற்றியும் பல்லவர்களைப் பற்றியும் எழுதியிருக்கிறார். மேலும் மேலைநாட்டு வரலாற்று அறிஞர்கள் பெர்குசன், போகல் மற்றும் டவ்வீன் ஆகியோரும் மாமல்லையின் சிறப்பைப் பற்றி எழுதியுள்ளனர். சீனம், பாரசீகம், ரோமாபுரியைச் சேர்ந்த காசுகள் மாமல்லையில் கிடைத்துள்ளது, மாமல்லை ஒரு புகழ் பெற்ற வெளிநாட்டுத் துறைமுகமாக விளங்கியதை உறுதி செய்கிறது.

மேலே உள்ள சிற்பங்கள் மாமல்லபுரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்பக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. ஏனெனில் மாமல்லையின் பெறும் பகுதியைக் கடல் கொண்டதாக வரலூறு கூறுகிறது. ஏழு கோவில்களில் ஆறு கோவில்கள் காணாமல் போய்விட்டன. கடலுக்குள் இன்னும் எவ்வளவு அறிய பொக்கிஷங்கள் மறைந்திருக்கின்றனவோ!

கருத்துகள் இல்லை: