4 ஜூன், 2010

சூரியின் டைரி-13: ஆன்மீகமும் பிரம்மச்சரியமும்



சில நாட்களுக்குமுன் ஒரு இரவில் வீட்டில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.  நீயா, நானா என்ற அந்த பாப்புலர் நிகழ்ச்சியைத் தொடர்ந்து திரு கோபிநாத் அவர்கள் வழங்கி வருகிறார்கள் என்று தெரியும்.  அன்றைக்கு போலிச் சாமியார்கள் பற்றி பலரும் தங்கள் கருத்துக்களைக் கூறினார்கள்.  எழுத்தாளர் சாரு நிவேதிதா மேலும் ஒரு எழுத்தாளர் (பாதியிலிருந்து பார்த்ததால் என்னால் அவர் பெயரைக் கண்டுபிடிக்க முடியவில்லை) போன்ற பலதரப்பினர் கலந்து கொண்டிருந்தனர்;  இன்னும் நித்தியானந்தருக்கு ஆதரவு தரும் சிலர் உட்பட!  நிகழ்ச்சி சுவையாக இருந்ததால் வீட்டாருடன் சேர்ந்து நானும் அதைப் பார்த்தேன்.  


நிகழ்ச்சி முடிந்து படுக்கைக்குச் சென்ற பின்னும் அது பற்றிய எண்ணங்கள் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.  

ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவன், அந்தப் பாதையில் தட்டுத் தடுமாறி பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவன் என்ற முறையில், நான் படித்த புத்தகங்கள் அடிப்படையிலும், எனது சிந்தனைகளையும் தொகுத்து இங்கே ஆன்மீகமும் பிரம்மச்சரியமும் பற்றி என் கருத்துக்களைப் பதிவு செய்கிறேன்.  

அன்று அந்தக் கருத்தரங்கில் கூறப்படாதது: ஆன்மீகப் பாதை மட்டுமல்ல வேறு எந்தப் பாதையில் சென்றாலும் அடிப்படைத் தேவையான ஒன்று "சரியான வழிமுறைகள்". எப்படியாவது குறிக்கோளை அடையலாம் என்று குறுக்குவழிகளைத் தேட ஆரம்பித்தால், அது எவ்வளவு உயர்ந்த குறிக்கோளாக இருந்தாலும் சரி,  பிரச்சினைதான்.  தவறான பாதையில்,  தவறான வழிமுறைகளைப் பின்பற்றி எப்படி சரியான முடிவை அடைய முடியும்?  நாட்டில், ஏன் உலகில், உள்ள அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அடிப்படை இந்த எப்படியாவது" (Somehow) என்ற எண்ணம்தான். "Ways and Means are more important  than goals themselves " என்றும் "Take care of your ways and means ,  the goal will take care of itself " என்றும் சொல்லப்படுவதன் பொருளை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.  

அடுத்து ஆன்மீகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு முக்கிய காரணம் துறவறத்திற்குப் பரிந்துரைக்கப்படும் அறிவுரைகளை இல்லறத்தார் போட்டு குழப்பிக்கொள்வது.  ஏனெனில் இல்லறத்தார்க்குப் பரிந்துரைக்கப்படும் பாதை வேறு,   துறவறத்தாற்குப் பரிந்துரைக்கப்படும் பாதை முற்றிலும் வேறு.  இந்தத் தெளிவில்லாமையே நிறைய குழப்பங்களுக்கு அடிப்படியாகிறது.  

பிரம்மச்சரியம் (Celibacy ) என்பது மிக மிகக் கடினமானது.  ஆகவேதான் அது இல்லறத்தாற்குப் பரிந்துரைக்கப்படவில்லை.  காமத்தின் பிடியிலிருந்து விடுபட அவர்களுக்கு ஒருவனுக்கு ஒருத்தி என்னும் இல்லறம் வழியாகிறது.   துறவிகளுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள்.  ஒரு இடத்தில் மூன்று நாட்களுக்கு  மேல் தங்காமை,  இயன்றவரை ஊரைவிட்டு விலகி, ஆள் நடமாட்டமில்லா வனத்தில் வாழ்தல், தலையை  மழித்துக்கொள்ளுதல்,  காவி உடை, உணவு விஷயத்தில் நிறைய கடுமையான  கட்டுப்பாடுகள்  போன்ற பல கட்டுப்பாடுகள்.   இந்தக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றாவிடில் சிக்கல்கள் ஏற்படுவதில் ஆச்சரியமில்லை. விசுவாமித்திரர் போன்ற மஹரிஷிகள் கூட பிறழுதல் பற்றிப் படித்திருக்கிறோம்.  

மேலும் கத்தோலிக்க மடாலயங்களில் உள்ள பாதிரியார்கள் இளம் பையன்களிடமோ அல்லது பெண்களிடமோ தவறாக நடந்து கொள்வது பற்றி நிறையப் புகார்கள்.  நம் நாட்டில் பிரேமானந்தா, நித்தியானந்தா போன்ற சாமியார்கள் மேல் பாலியல் புகார்கள்.  இவையெல்லாம் பிரம்மச்சரியம் என்பது எவ்வளவு கடினம், இயற்கைக்கு முரணானது என்பதை உணர்த்துகின்றன.  கிறித்துவ மதப்பிரிவான Protestants பிரிவில்  இந்தப்   பிரச்சினை இல்லை. அதன் பாதிரியார்கள் மனைவி, குழந்தைகுட்டி குடும்பம் என்று வாழ்கின்றனர்.  ஓஷோ போன்றவர்களும் ஆகவேதான் பிரம்மச்சரியத்தைப் போதிக்கவில்லை.  

எல்லாவற்றிற்கும் மேலாக இன்று வாழும் சமுதாயத்தில் எத்தனை இடையூறுகள்!  பாலுணர்வைத் தூண்டும் எத்தனை தடைகள்!!  திரைப்படங்கள்,  டிவி நிகழ்ச்சிகள்,  சஞ்சிகைகள், புத்தகங்கள், சாலையில் மக்கள் இன்று அணியும் உடைகள் போன்று பல நேரடியாகவோ  மறைமுகமாகவோ பாலுணர்வைத் தூண்டுபவையாக இருக்கின்றன.  செய்தித்தாட்களில் வரும் செய்திகளும் ஆண்-பெண் உறவு பற்றிய தொன்றுதொட்டு நிலவி வரும் கோட்பாடுகளை கேள்விக்குரியதாகவும்,  கேலிக்குரியதாகவும் ஆக்குகின்றன.  (சமீபத்திய செய்தி:  அண்ணன்-தங்கை முறை; ஆனால் காதல் கொண்டு ஜோடி ஊரை விட்டு ஓட்டம்!  தந்தையே மகளை கருவுறச் செய்தார்!)  வேதனைக்குரிய இச்செய்திகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமானது,  காமம் என்பது மிகப் பெரிய Biological Urge.  அது யாரை எப்போது, எப்படிக் கவிழ்க்கும் என்று கூற முடியாது.  

அமெரிக்காவில் நடந்த ஒன்று நினைவிற்கு வருகிறது.  முற்றிலும் மூளை வளர்ச்சியில்லாத மகன். கருவுருதலைத் தடுக்க தாங்கள் கைக்கொண்ட முயற்சிதான், மகனின் நிலைக்குக் காரணம் என்ற  குற்ற உணர்வினால் தாய் தந்தையர் இருவரும் தங்கள் வாழ்க்கையை முற்றிலும் அவனுக்காகவே வாழ்ந்து வருகின்றனர்.  பையன் வயதாக ஆக,  அவனிடம் மாற்றங்கள்.  அவனுக்கு தன தாய், தந்தை இவர்கள் என்ற உணர்வு கூடக் கிடையாது.  அவன் தன் தாயிடம் வித்தியாசமாக நடந்துகொள்கிறான். அங்கே தொடுகிறான், இங்கே தொடுகிறான், மூளை வளர்ச்சி இல்லாத அவனுள்ளிருந்து   மாறுபட்ட உந்துதல்கள்.  மருத்துவர் எச்சரிக்கிறார்.  அவன் எந்த நேரத்திலும் உணர்வால் உந்தப்பட்டு தன் தாயையே கற்பழிக்கலாம். அதனால் இதற்கு மேல் அவனை வீட்டில் வைத்திருப்பது  ஆபத்து.  மூளை வளர்ச்சியில்லாதவர்களுக்கான நிறுவனமொன்றில் அவனைச் சேர்த்துவிடும்படி அறிவுறுத்துகிறார் அதற்கு மனமில்லாத அந்தத் தந்தை தன் மகனையே சுட்டுக்கொன்று விடுகிறார்.  அமெரிக்காவையே உலுக்கிய வழக்கு அது.  

நான் வணங்கும் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காம உணர்வை, பக்தி உணர்வாக மடைமாற்றம் செய்வதையே சிறந்த வழி என்றுரைக்கிறார்.  காமினி காஞ்சனம் பற்றி எச்சரிக்கை செய்கிறார்.  பாக்தையானாலும் கூட பெண்களை விட்டு விலகி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.  

மகரிஷி மகேஷ் யோகி அவர்கள் கீதை விரிவுரைக்கு எழுதியிருந்த விளக்கவுரையில் "செய், செய்யாதே" (Yama , Niyama)  போன்ற ஆன்மீக அறிவுரைகள் பற்றிப் படிக்கும்போது  அவற்றை ஆரம்பப் பாடமாகக் கொள்வது எவ்வளவு சிக்கலானது என்று தெளிவு பெற்றேன்.  அவர் கூறுவது:  மனதை உள்முகமாகத் திருப்புங்கள்.  ஆழ்ந்தது செல்லச் செல்ல,  ஆன்மீக வாழ்விற்கு இடையூறானவை  தாமாகவே காய்ந்த சருகுகள் மரத்திலிருந்து உதிர்வதைப்போல், காணாமல் போய்விடும்.  அதைவிட்டுவிட்டு, அவற்றோடு போராடுவது நேரெதிரான பலனையே தரும்.  

வேதாத்திரி மகரிஷி அவர்கள் கூறிய ஒன்று நினைவிற்கு வருகிறது:  "மனதை அடக்க நினைத்தால் வெறி கொண்டு அலையும்;  அறிய நினைத்தால் அடங்கும்".  உன்னையே நீ அறிவாய் என்பதன் உட்பொருள் இதுதானோ!  

என் நண்பர் அவரது குருவைத் தேடிச் சென்று அவரது சொந்தப் பிரச்சினைகள் பற்றிப் பேச ஆரம்பித்தார்.  குருஜி அவரைத் தடுத்து நிறுத்தி கேள்விகள் எழுப்பினார்:  "உடல் நிலை சரியில்லை என்றால் யாரிடம் செல்வாய்?"  "மருத்துவரிடம்".  "மருந்த வாங்க எங்கே செல்வாய்?"  "மருந்துக் கடைக்கு".  "காய்கனி வாங்க எங்கே செல்வாய்?"  "காய்கறிக் கடைக்கு."  

அதன் பின் சொன்னார்:  இங்கே வந்தால் ஆன்மீக வாழ்க்கையில் சிக்கல்கள், பிரச்சினைகள், குழப்பங்கள் பற்றிக் கேள்.  சொல்கிறேன்.  லௌகீக விஷயங்களை இங்கே பேச வேண்டாம்.  

அடுத்து நான் பின் பற்றும் ஸ்ரீ இராமகிருஷ்ணா மடத்தில் "ஆச்சரியங்கள், அதிசயங்கள் புரிவதை அனுமதிப்பதில்லை"  (They oppose Miracle -mongering).  நிறைய போலிச்சாமியார்கள் வயிற்றிலிருந்து சிவலிங்கத்தை எடுக்கிறேன், கைமூடிக் கைதிறந்தால் விபூதி, மாலை அல்லது வேறு ஏதாவது பொருட்கள் என்றெல்லாம் சித்து வேலை செய்து மக்களை மயக்கி, பின்னர் அவர்களை இஷ்டம்போல் ஏமாற்றுகின்றனர்.  

மனம் உள்முகமாக ஆழ்ந்து செல்லச்செல்ல நம்முள்ளே நிறைய அறிய ஆற்றல்கள் வெளிப்படும்.  அவற்றில் மயங்காது தொடர்ந்து ஆன்மீக வாழ்வில் முன்னேறிச் செல்லவேண்டும்.  அவற்றின்பின் சென்றால் பாதை மாறி, படுகுழியில் விழுந்து விடுவோம்.  

பரமஹம்சர் தன் சீடர் விவேகானந்தரிடம் கேட்டார்:  "நரேன், எனக்கோ வயதாகி விட்டது.  எனக்குப்பின் நீதான் எல்லாம் செய்யப்போகிறாய்.  என்னுள்ளிருக்கும் அஷ்டமா சித்திகளை உனக்குத் தந்துவிடுகிறேன்; வாங்கிக் கொள்கிறாயா?  

விவேகானந்தரின் பதில்: "ஆன்மீக வாழ்வின் குறிக்கோளை அடைய அவை எந்த வகையிலேனும் உதவுமா?"  

"உதவாது.  சொல்லப்போனால், அவை தவறான பாதையில் செலுத்திவிடும்."

"அப்படியெனில், எனக்கு அவை வேண்டவே வேண்டாம்."

சீடனின் தெளிவு கண்டு, பரமஹம்சர் பரவசத்தில் ஆழ்ந்தார்.  


எல்லாவற்றையும் துறந்தவர்கள் - நம்மால் முடியாத ஒன்றைச் செய்பவர்கள் - ஆன்மீக வாழ்க்கைக்காகத் தன்னையே அர்ப்பணித்தவர்கள் என்ற முறையில் துறவிகளை மதிக்கிறோம், வணங்குகிறோம்;  அதற்காக, அவர்கள் என்ன சொனாலும், அதை ஆராயாது, சிந்திக்காது, அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அவர்களைத் தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடுவது என்பது ஆபத்தானது.


கண்ணை மூடிக்கொண்டு சாமியார்களைக் கொண்டாடுவதோ,  அல்லது வெறுப்பதோ தவறு.  திறந்த மனதுடன், ஒவ்வொருவரையும் ஆராய்ந்து, தெளிந்த பின்னரே ஏற்கவேண்டும்.  


விவேகானந்தர் பரமஹம்சரை எளிதாக ஏற்றுக்கொள்ளவில்லை.  அவரை பல முறையிலும் பரிசோதனை செய்தார்.  பரமஹம்சரும் அதனை ஆதரித்தார்.  இன்னும் சொல்லப்போனால் அதனாலேயே விவேகானந்தரிடம் பெரிதும் அன்பு கொண்டார். 


எல்லாவற்றிற்கும் மேலாக, பதவிவுயர்வு, சொத்து சுகம்,  வீடுமனை வாசல்,  நினைத்ததெல்லாம் அடைய, எதிரிகளை அழிக்க, பிள்ளைப்பேறு போன்றவற்றிற்காக சாமியார்களை நாடுபவர்கள் இருக்கும்வரை போலிச்சாமியார்கள் இருந்துகொண்டேதான் இருப்பார்கள். அற்புதங்கள் புரிபவர்கள், அதிசயங்கள் புரிபவர்கள் என்று வாய் பிளந்து பின்செல்பவர்கள் இருக்கும்வரையும் போலிச்சாமியார்கள் இருக்கத்தான் செய்வார்கள்.  உண்மையான சாமியார்கள் நீதி, நேர்மை, எளிமை, உண்மை, பணிவு, அர்ப்பணிப்பு மனம்,  சுய விளம்பரமின்மை போன்ற மேன்மையான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். 


ஆன்மிகம்   என்றால்  என்ன, குரு  என்பவர்  எப்படி  இருக்கவேண்டும்  என்ற  தெளிவு  நமக்கிருந்தால்   போலிச்  சாமியார்களிடம்  ஏமாறுதல்  என்ற  பேச்சுக்கே  இடமில்லை.  நாம் யார்,  இந்த பூமிக்கு எதற்கு வந்திருக்கிறோம், நம் வாழ்வின் குறிக்கோள் என்ன, வாழ்வில் எப்படி முழுமை பெறுவது, பிறவிப்பயனை அடைவது எப்படி போன்ற கேள்விகளுக்கு விடைதேடிச் செல்லும் பயணம்தான் ஆன்மிகம்.  இந்தப் பயணத்திற்கு வழிகாட்டுபவர், நம் கேள்விகளுக்கு விடைதேட உதவுபவர், நம் ஐயங்களைத் தீர்க்க உதவுபவர், இந்தப் பயணத்தில் சோர்வுறும்போது நம்மைத் தட்டிக்கொடுத்து நம்பிக்கை ஊட்டி உதவுபவர்தான் குரு.   


இதைப் படிக்கும் அன்பர்கள் தங்களது கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.  

கருத்துகள் இல்லை: