சென்ற ஞாயிறன்று இரவு வெளியே சென்றுவிட்டு வீட்டில் நுழைந்தேன். விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் பற்றிய விவாத மேடை அரங்கேறிக் கொண்டிருந்தது. வழக்கம்போல் கோபிசார் வெளுத்துக் கட்டிக் கொண்டிருந்தார். தனியார் பள்ளிகள் பள்ளிக்கட்டணம் என்ற பெயரில் அட்டைபோல் பெற்றோர்களின் ரத்தத்தை உறிஞ்சுவது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு சொற்ப சம்பளம் வழங்குவது, பெற்றோர்களை சாதாரண மரியாதைகூடத் தராமல் துன்புறுத்துவது, அரசு நிர்ணயித்த விதிகள் - குறிப்பாக ஒரு வகுப்பில் எத்தனை மாணவர்கள் இருக்கலாம், எவ்வளவு கட்டணம் வசூலிக்கலாம் என்ற விதிமுறைகளை - காற்றில் பறக்கவிட்டது போன்ற பல குற்றச்சாட்டுக்கள். பள்ளிகள் சார்பில் பேசியவர்கள் பூசிமொழுக முயன்றபோது, கோபிசார் சூடாகிக் குடுகுடு என்று கொடுத்தார். மிகவும் ரசிக்கும்படி இருந்தது. பொதுமக்கள் சார்பில் ஒரு பெண்மணியும், ஒரு ஆடவரும் மிகத் தெளிவாக ஆதாரங்களுடன், உண்மையில் நடைபெற்ற சம்பவங்களுடன் நெத்தியடி அடித்தனர். மிகவும் பாராட்டத்தக்கதாக இருந்தது. அதே நேரத்தில் பல தனியார் பள்ளிகளின் அராஜகப் போக்கு வேதனையளிப்பதாகவும் இருக்கிறது. அரசுப்பள்ளிகளுக்கு எதிராக பொதுவாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்: நிறையப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; ஆசிரியர்கள் சரியாக வகுப்புகளுக்கு வருவதில்லை; அப்படியே வந்தாலும் மெத்தனப்போக்கு, ஈடுபாடின்மை. (ஆனால் இந்த ஆண்டு பத்தாவது பன்னிரண்டாவது பொதுத் தேர்வுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை படைத்ததாக அறிகிறேன். அப்படியெனில் நிலைமை சீரடைந்து விட்டதா, அல்லது சீரடைந்து கொண்டிருக்கிறதா?) (இங்கே நான் பதிவு செய்யவிரும்பும் இன்னொரு விஷயம்: பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களின் செயல்பாடுகளை செய்த்தித்தாட்கள் வழியாகவும், பிற ஊடகங்கள் வழியாகவும் கவனித்து வருகிறேன். அவரது செயல்பாடுகள் பாராட்டத்தக்கவையாக இருக்கின்றன. எக்கச்சக்கமாகக் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களை பதவிக்கு வந்த குறுகிய காலத்தில் எந்தவிதப் புகாரும் எழாமல் நிரப்பியது; ஊர் மாற்றங்களையும் அதுபோல் எந்தவிதப் புகாரும் எழாமல் கலந்தாலோசனை மூலம் செய்தது; (ஒரு காலத்தில் ஊர் மாற்றம் என்று அச்சமூறுத்தியே அரசு ஊழியர்களிடமிருந்து பணம் பிடுங்கிக் குவித்ததெல்லாம் நாடறிந்ததே!). அடுத்து தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணம் என்ற பெயரில் பகற்கொள்ளை அடித்ததைத் தடுக்க நடவடிக்கை எடுத்தது. அதுவும் தன்னிச்சையாக எதுவும் செய்யாமல், முறைப்படி நீதிபதி சிவசுப்பிரமணியன் கமிஷனை நியமித்து, பள்ளிகளிடமிருந்து வரவு-செலவுத் தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையில், மேலும் சிறிது லாபமும் வைத்து ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்தது. இப்படிபல. அவருக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள். என்ன, தனியார் பள்ளிகளின் மிரட்டல்களுக்கும், அடாவடித்தனத்திற்கும் இறுதிவரை மசியாது உறுதியுடன் இருக்கவேண்டும்; அதைமட்டும் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.)
நிகழ்ச்சி முடிந்தபின் படுக்கையில் உறக்கம் வராமல் கல்வி பற்றிய சிந்தனைகள் மனதில் ஓடின. மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட ஆரம்பித்த காலத்திலிருந்தே கல்வித்துறை மேல் ஈடுபாடு தோன்ற ஆரம்பித்தது. கல்வி பற்றிய பல புத்தகங்களை-சிந்தனைகளை படித்து மனதில் அசை போட்டிருக்கிறேன். அவற்றில் சில: விவேகானந்தரின் கல்விச் சிந்தனைகள், Values in Education , Education in Values, Value Education (இந்தக் கடைசி மூன்று நூல்களையும் எழுதியவர் நான் பெரிதும் மதிக்கும் பேராசிரியர் கே.சுப்பிரமணியம் அவர்கள் - முன்னாள் முதல்வர், விவேகானந்தா கல்லூரி, திருவேடகம்) அதன் பயனாக எனக்கு கல்வி பற்றி ஓரளவுக்கு தெளிவான சிந்தனைகள் உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன், for whatever they are worth . (இந்த அற்புதமான நூல்களிலிருந்து தெறித்த வைரங்களை தனியே பின்னர் இவ்வலைப்பூவில் பதிவு செய்வேன்.)
கல்வி என்பது நிறைய மதிப்பெண்கள் பெறுவது, நல்ல வேலைக்குப் போவது, கைநிறையச் சம்பாதிப்பது, சொத்து சுகம் சேர்ப்பது என்று முடிந்துவிடுவதல்ல. கல்வி நமக்கு உயர்பண்புகளை ஊட்டுவதாக, சிந்தனை ஆற்றலை வளர்ப்பதாக, விரிந்த மனதை உருவாக்குவதான, சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு பொறுப்புள்ள பிரஜையை உருவாக்குவதாக, எதிர்கால வாழ்வில் சிக்கல்களை-பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆற்றலை-தைரியத்தைத் தருவதாக இருக்கவேண்டும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்வில் முழுமை பெறுதல், பிறவிப்பயனை அடைதல் போன்ற மேன்மையான இலக்குகளை அடைய உதவும் ஒரு சாதனமாகவும் இருக்கவேண்டும். அதனால்தான் மாதா, பிதா, குரு தெய்வம் என்று கல்வியை வழங்கும் ஆசிரியர்க்கு பெற்றோருக்கு அடுத்த இடத்தை வழங்கி, அவரை தெய்வமாகக் கண்டனர் நமது முன்னோர்.
இந்த அடிப்படைகளை மனதில் கொண்டால் கல்வி வியாபாரமாவதை ஒருபோதும் ஏற்க முடியாது. ஆனால் நாட்டில் இன்று பிரச்சினையே இந்தத் தெளிவு இல்லாததுதான். கல்வி நிறுவனங்களை அரசும், தொண்டுள்ளம் கொண்ட வள்ளல் அழகப்பர் போன்ற செல்வந்தர்களும் சேவை நோக்கில், சமுதாயப் பிரக்ஞையுடன், நிறுவி, நடத்தியது அந்தக்காலம். ஆனால் காலப்போக்கில் தவறான பலர் இத்துறையில் நுழைந்து அதை முற்றிலும் வியாபாரமாக, பெரும் லாபம் சம்பாதிக்கும் ஒரு தொழிலாக மாற்றியது பெரிய துரதிருஷ்டம். அதை அப்போதைய அரசுகள் கண்டுகொள்ளாமல் இருந்தது அதைவிட பெரிய துரதிருஷ்டம். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் நுழைந்தபின் கல்வியின் நிலை கவலைக்கிடமாகியது.
மாணவர்களிடமும் உயர்பண்புகள், நல்லொழுக்கம் என்பது காணாமல் போய்விடுமோ என்ற கவலையும் பெரிதாகிக் கொண்டே போகிறது. முழுக்க முழுக்க சுயநலம், தோன்றுவதையெல்லாம் செய்யலாம், யாரையும் மதிக்க வேண்டியதில்லை, யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை: புகை பிடித்தல், பீர் குடித்தல் (குறிப்பாக கல்லூரி மாணவ மாணவியர்), கோஷ்டி மோதல் என்று வந்துவிட்டால் அடி, உதை, குத்து வெட்டு, திருமணத்திற்கு முன்பே என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று கண்முன்னே சமுதாயச் சீரழிவு அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அன்பு, பண்பு, பாசம் என்பவை வெறும் வார்த்தைகளாகப் போய்விடுமோ என்ற அச்சம். அவர்களுக்கு சரியான முன்மாதிரியான பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, மற்ற பெரியவர்களோ இல்லையோ என்று தோன்றுகிறது.
மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பில் நாங்கள் அதனால்தான் மனிதமேம்பாடு என்பதற்கு மிக முக்கிய சாதனம் கல்வி என்று உணர்ந்து, பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் தேடிச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம். ஏதோ எங்களால் ஆனா ஒரு சிறு முயற்சியாக. வாழும் முன்மாதிரிகள் இன்றைய வாழ்க்கையில் குறைந்து போனாலும், நமது மாபெரும் முன்னோர்கள், சான்றோர்கள் விட்டுச் சென்ற பொக்கிஷங்கள் புத்தக வடிவில் இன்று வாழ்கின்றன. அந்தப் புத்தகங்கள் வடிவில் மேன்மையான முன்மாதிரிகள் இன்றும் வாழ்கின்றனர். ஆகவே எங்கள் அமைப்பில் வருடம்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தி, பலவித போட்டிகள், பரிசுகள் மூலம் மக்களை, குறிப்பாக இளைய தலைமுறையினரை இழுக்கப் பாடுபட்டோம். பள்ளி நூலகங்களுக்கு - பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்க்கு நிறைய அற்புதமான, உன்னதமான புத்தகங்களை அள்ளி அள்ளி பரிசாக வழங்கினோம். ஏதோ எங்களால் ஆன சிறு முயற்சி. (என்ன, இந்த "மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பு"? அதைப் பற்றி பின்னர் தனியே இவ்வலைப்பூவில் விரிவாக எழுதுகிறேன். பொறுத்தருள்க!)
ஒரு பெரிய சமுதாய மாற்றம் ஏற்படவேண்டும், சமுதாயச் சீரழிவுகள் தடுக்கப்படவேண்டும். இதெல்லாம் எப்போது நடக்கும், எப்படி நடக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் நான் முற்றிலும் நம்பிக்கையை இழந்துவிடவில்லை. என் வாழ்நாளில் இல்லாவிடிலும், எனது பிள்ளைகள் காலத்தில் அல்லது பேரப்பிள்ளைகள் காலத்தில் நடக்காமலா போகிறது; பார்க்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக