12 ஜூன், 2010

சூரியின் டைரி-15: உறவுகள் மேம்பட ....

ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள் தயாரிப்பாளர்களைப் பற்றி ஏற்கனவே இந்த வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.  ஒரு வேஷ்டி வாங்கியபோது, அதைச் சுற்றியிருந்த அட்டையின் வெளிப்புறத்தில் அவர்களது விளம்பரப் படமும், உட்புறத்தை வீணாக்காமல் அதில் பயனுள்ள சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய தகவல்களைத் தந்திருந்ததை மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தேன். 

இம்முறை வேஷ்டி வாங்கியதில், உட்புறத்தைப் பார்த்தபோது, உறவுகள் மேம்பட வேதாத்திரி மகரிஷி அவர்கள் சிந்தனையில் உதித்த மேன்மையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள்.  மிகவும் தேவையான, பயனுள்ள ஒரு செயல்.  வேஷ்டியை விற்றோமோ, வேலையை முடித்தோமா என்றில்லாமல், சமுதாயப் பிரக்ஞையுடன் இச்சேவையைச் செய்துவரும் ராம்ராஜ் காட்டன் வேஷ்டிகள் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.  அந்தப் பயனுள்ள சிந்தனைகளை கீழே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்: 


குடும்பத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி, மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்கவும் -


நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

அர்த்தமில்லாமலும்,  பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள்.

எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காகக் கையாழுங்கள், விட்டுக்கொடுங்கள்.

சிலநேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆகவேண்டும் என்பதை உணருங்கள்.

நீங்கள் சொன்னதே சரி, செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்.  குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

உண்மை எது, பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும், அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

மற்றவர்களைவிட உங்களையே எப்போதும் உயர்வாக நினைத்துக் கர்வப்படாதீர்கள்.

அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்க சம்மந்தம் உண்டோ இல்லையோ, சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

உங்கள் கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

மற்றவர் கருத்துக்களை, செயல்களை, நடக்கின்ற நிகழ்ச்சிகளை தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய, இதமான, சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.

புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாததுபோல் நடந்துகொள்ளாதீர்கள்.

பேச்சிலும், நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும், தேவில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து, அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன்வாருங்கள்.    
   

கருத்துகள் இல்லை: