இன்றைய தினமணி இதழ் நான் வழக்கமாக வாங்கும் கடையில் கிடைக்கவில்லை. மற்ற நாளாயிருந்தால் பரவாயில்லை என்று விட்டிருப்பேன். ஆனால் இன்று ஞாயிறாயிற்றே, அப்படி விட்டுவிட முடியுமா? 'தமிழ்மணியைப்' படிக்க முடியாமல் போய்விடுமே, என்ன செய்வது? சோதனையாக மாலை வரை வெளியே செல்லமுடியவில்லை. மாலை காரைக்குடி சென்று கடை கடையாகத் தேடினால், எல்லாக் கடைகளிலும் விற்றுத் தீர்ந்து விட்டது. காரைக்குடி பழைய பேருந்து நிலையம் வரை சென்றும் பயனில்லை. ஏமாற்றத்துடன் திரும்பும்போது தற்செயலாக ஒரு சிறுகடையில் விசாரித்தேன். கிடைத்தது! என்ன மகிழ்ச்சி!!
துறைமங்கலம் சிவப்பிரகாசரின் நன்னெறி ஒரு செய்யுள் விளக்கவுரையுடன். வளவ.துரையனின் முப்பால் சேறு, முனைவர் பா.வளன் அரசின் "சிலப்பதிகாரம் பேசப்படும் அளவுக்கு மணிமேகலையும், சீவகசிந்தாமணியும் பேசப்படுவதில்லையே, ஏன்?" என்ற இலக்கிய விவாதம் எல்லாவற்றையும் படித்துச் சுவைத்தேன். ஆனால் என்னை முழுதும் ஈர்த்தவை, சி.சு.செல்லப்பாவைப் பற்றிய கலைமாமணி விக்கிரமன் அவர்களது கட்டுரையும், கலாரசிகனின் 'இந்தவாரமும்தான்'.
தமிழ் இலக்கிய வரலாற்றில் மறக்கமுடியாத மாமனிதர்களை இன்றைய தலைமுறையினருக்கும், என்போன்ற முந்திய தலைமுறையைச் சேர்ந்த தெரியாதவர்களுக்கும், அரைகுறையாகத் தெரிந்தவர்களுக்கும் அறிமுகப்படுத்தி ஒரு மகத்தான சேவையைச் செய்துவருகிறது 'தமிழ்மணி'. அதற்கு என் உளமார்ந்த நன்றிகளும், வாழ்த்துக்களும். செல்லப்பா அவைகளைப் பற்றிப் படித்தபின் அவரது 29 நூல்களையும் படிக்க முடியாவிட்டாலும் கூட, குறைந்த பட்சம் அவரது நாவல் 'சுதந்திர தாகத்தையும்', அவரது சிறுகதைகளையும் மட்டுமாவது படிக்க பெரிதும் விரும்புகின்றேன் (பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின், எனக்கு நிறைய அவகாசம் கிடைக்கிறது). மேலும் 119 இதழ்கள் வெளியான 'எழுத்து' இதழை குறைந்த பட்சம் புரட்டிப் பார்க்கக்கூட வாய்ப்பு கிடைக்குமா என்று தெரியவில்லை.
கலாரசிகன் அவர்கள் இந்த வாரத்தில் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பற்றி விடுத்த இரண்டு வேண்டுகோள்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மிகவும் நன்றாக இருக்கும். (ஒன்று: மாநாடு நடக்கும் நாட்களில் மாநாட்டு இலச்சினை தாங்கிய பதாகைகள் மட்டுமே கோவை நகரை அலங்கரிக்க வேண்டும். (கட்சிக் கொடிகள், 'பேனர்கள்' இல்லாதிருத்தல் அல்லது குறைவாக இருத்தல்). இரண்டு: மாநாடு நடக்கும் நாட்களில் மட்டுமாவது கோவை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மதுவிலக்கு.)
இரண்டாவது, "இந்தியாவின் மிகப் பெரிய துர்பாக்கியம் எதையுமே நாம் முறையாக ஆவணப்படுத்தாமல் விட்டுவிடுவது" என்று ஆரம்பிக்கும் அம்பை மணிவண்ணன் அவர்களது 'பொற்றாமரையைப்' போற்றி புகழும் பகுதி. மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி வணங்கும் பக்தன் என்ற முறையிலும், ஆவணப்படுத்துதல் பற்றிய கருத்தை முற்றிலுமாக ஆதரிப்பவன் என்ற முறையிலும் 'பொற்றாமரையை' படித்து மகிழும் நாளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இந்த ஆவணப் படுத்துதல் பற்றி இந்தப் பகுதியின் இறுதியில் மீண்டும் தொடுகிறேன்.
அடுத்த பகுதி, முன்னாள் அமைச்சர் கா.வேழவேந்தன் அவர்களது கவிதை பற்றியது. கையூட்டு பற்றிய அந்தக் கவிதை மிகவும் சிறப்பாகவுள்ளது. கலாரசிகன் அவர்களது அடுத்த 'இந்த வாரத்தை' ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
தற்போது மீண்டும் ஆவணப்படுத்துதல் பற்றி.
நாங்கள் காரைக்குடியில் கம்பன் மணிமண்டபத்தில் மாநில அளவில் முதல் புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்தி முடித்தபோது, அதன் நிறைவு விழாவில் பேசிய 'ஞானாலயா' திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மேடையில் எதையும் ஆவணப் படுத்தாதுவிடும் நமது குறைபாட்டை சுட்டிக்காட்டி, என்னிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள். தினமும் ஒரு எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சி போன்ற பல கலை, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தியதை அவசியம் ஆவணப்படுத்துங்கள் என்று. அப்போது இதன் அவசியத்தை நான் உணராமல், இதில் என்ன இருக்கிறது, யார் அதைப் பார்க்கப் போகிறார்கள், படிக்கப் போகிறார்கள் என்று விட்டுவிட்டேன். முதல் நான்கு புத்தகத் திருவிழாக்களுக்குப்பின் நான் ஈடுபட முடியாமல் ஒதுங்கினேன். பின்னர் அதை நடத்தியவர்கள் பல தகவல்களை சிரமப்பட்டு தேடிப் பெறவேண்டியிருந்தது. அப்போது இனிய, சுவையான, பயனுள்ள செய்திகள், சம்பவங்கள் பலவற்றை என்னாலேயே நினைவு படுத்த முடியவில்லை. அவை பின்னர் எப்போதாவது நினைவில் வந்து போயின.
அப்படியிருக்க, மிக அற்புதமான, அரிய, உன்னத இலக்கியச் சாதனைகள் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. 'தமிழ்மணி' வந்த பிறகு எவ்வளவு சாதனையாளர்கள் தோன்றி மறைந்தது, அவர்களது மேன்மையான சாதனைகள் நமக்குத் தெரியாமல் இருக்கிறது என்ற பேருண்மையை உணரமுடிகிறது. இணையதளங்கள் வந்த பிறகு ஆவணப்படுத்துதல் என்பது மிக எளிதாகிவிட்டது.
இணையத்தில் இருக்கும் செய்திகளை உலகெங்கும் உள்ள ஆர்வலர்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம், படிக்கலாம். குறிப்பாக, எழுத்து, மணிக்கொடி போன்ற இதழ்களையும், நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களையும், காப்புரிமை முடிந்த நூல்களையும், மற்ற தமிழ்ப் பொக்கிஷங்களையும் இணையத்தில் பதிவு செய்து வைத்தால், உலகெங்கிருந்தும் இலக்கிய மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பின்வரும் தலைமுறையினர் என்று அனைவருமே தேடிப்படிக்க எளிதாகும்.
ப்ராஜெக்ட் மதுரை (Project Madurai ) போன்ற அரசின் ஆதரவில் உள்ள இணைய தளங்களும், மற்ற தமிழ் இணையங்களும் இந்த அரிய, மேன்மையான சேவையைச் செய்ய முன்வந்தால் அது தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்யும் பெருந்தொண்டாக அமையும். (ப்ராஜெக்ட் மதுரையில் ஏற்கனவே நிறைய சங்க இலக்கியங்கள், நாட்டுடைமை ஆக்கப்பட்ட பல நூல்கள் இருக்கின்றன - 308 பதிவுகள் என்று நினைக்கிறேன். ஆர்வமுள்ள அனைவரும் படித்து மகிழலாம். தொடர்பு கொள்ளவேண்டிய இணையம்: http://worldlibrary.net/ProjectMadura.htm) தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அரசு, தொண்டு நிறுவனங்கள் என்று அனைவரும் கைகோர்த்தால் இது இன்னும் எளிதாகிவிடும். பழைய அரிய, கிடைக்காத பொக்கிஷ நூல்களை வைத்திருப்பவர்கள் இப்பணிக்கு பெரிதும் உதவ முடியும். இலக்கிய ஆர்வலன் என்ற முறையில் அனைவருக்கும் இந்தப் பதிவின் மூலம் என் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக