14 ஜூன், 2010

சூரியின் டைரி-17: 'குறுந்தானியகம்' மற்றும் 'இயற்கை உணவகங்கள் '

மதுரை  ரேஸ்  கோர்ஸ்  சாலையில்  'குறுந்தானியகம்'  நடத்திவரும் பட்டதாரி திரு கோபாலகிருஷ்ணன் பற்றிய வே.சுந்தரேஸ்வரன் அவர்களது கட்டுரையை தினமணி கதிர் ஜூன் பதின்மூன்று, 2010 இதழில் படித்தேன்.  

உணவு விஷமாகிக் கொண்டிருக்கும் இந்நாளில், கெட்டுப்போன உணவையெல்லாம் மக்கள் தலையில் சிறிதும் குற்ற உணர்வில்லாமல் கட்டிக்கொண்டிருக்கும் இந்நாளில், இப்படி ஒரு குறுந்தானியங்களைக்  கொண்டு ஆரோக்கியமான, சத்தான  உணவை வழங்கிக் கொண்டிருக்கும் ஒரு உணவகத்தைப் பற்றிப் படிக்க மகிழ்ச்சியாக இருந்தது, அதிலும் அருகிலுள்ள மதுரை மாநகரில்.

விவசாய நிலையிலேயே உணவில் பூச்சி மருந்து நச்சுக்கள், செயற்கை உர நச்சுக்கள் சேர்ந்துவிடுகின்றன; இது போதாதென வேண்டாத செயற்கை நிறமிகள், செயற்கை சுவையூட்டிகள், உணவு கெடாமல் இருக்கவேண்டி என்று சேர்க்கப்படும் இரசாயன நச்சுக்கள் (Chemical Preservatives)  எல்லாம் சேர்ந்து உணவு நச்சாகிக் கொண்டிருக்கும் இந்நாளில் இயற்கை வேளாண்மை, இயற்கை உரம், இயற்கை பூச்சிக்கொல்லி, இயற்கை உணவு என்று திரும்பவேண்டிய காலம் வந்துவிட்டது.  அதன் முதல்படிதான்   'குறுந்தானியகம்'  போன்ற உணவகங்கள்.

இவ்வுணவகத்தில் வரகு, சாமை, திணை, குதிரைவாலி, இரும்புச்சோளம், நாட்டுச்சோளம், கம்பு, கேப்பை ஆகிய குறுந்தானியங்களைக்  கொண்டு பல்வேறு பதார்த்தங்கள் செய்து வழங்கிவரும் கோபாலகிருஷ்ணன் தம்பதிகள் பாராட்டுக்குரியவர்கள்.  இந்த உணவகம் காலை ஐந்து மணி முதல் மாலை ஆறு மணி வரை செயல்படுகிறது.  இங்கே கேழ்வரகு தோசை, முடக்கத்தான் தோசை, தேன்தினை புட்டு, வரகு அரிசி வெண்பொங்கல், வரகு அரிசி வெள்ளையப்பம், கேப்பைப்புட்டு, பிரண்டைக்குழம்பு, பிரண்டைச் சட்னி, சீரகச்சோறு,  காய்கறி சாதம், திரிகடுகம் காப்பி என்று நாம் கேட்டிராத ஆனால்  சத்துள்ள, ஆபத்தில்லாத, நல்ல உணவு வகைகளை உண்டு மகிழ முடியும்.

இன்னுமொரு நல்ல தகவல், இந்த உணவு வகைகள் தமிழகமெங்கும் கிடைக்கும் வகையில், முன்னூறு ஏஜெண்டுகளை நியமிக்கவிருக்கும் செய்தி.   அனைவருக்கும் இந்த நல்ல உணவு வகைகள் கிடைக்கும் நன்னாளை விரைவில் எதிர்பார்க்கிறேன்.

இங்கே இது தொடர்புள்ள நானறிந்த வேறு சில தகவல்களையும் தருகின்றேன்.

பாண்டிச்சேரியில் செட்டித் தெருவில் முழுக்க முழுக்க இயற்கை உணவைத் தரும் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  

இன்னுமொரு தகவல், நண்பர் கூறியது: காரைக்குடி நகரில் ஒரு நெசவாளர் குடும்பத்தினர் சமைத்த உணவையே உண்பதில்லை.  அவர்கள் வீட்டில் அடுப்பைப் பற்ற வைப்பதே இல்லை.  தேங்காய், வாழைப்பழம் போன்ற இயற்கை உணவை மட்டுமே உண்டு, முழு ஆரோக்கியத்துடனும், உற்சாகத்துடனும், சிறிதும் சோர்வு இல்லாமலும் அவர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.  

இயற்கை உணவைப் பரப்ப தமிழகத்தில் பல இடங்களில் பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன.  மதுரை காந்தி மியூசியத்தில் செயல்பட்டுவரும் தமிழ்நாடு இயற்கை மருத்துவச் சங்கம், திருச்சி பெரியார் நகரில் செயல்பட்டு வரும் இயற்கை நல வாழ்வு மையம், ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் இயற்கை நலவாழ்வுச் சங்கம், சேரன்மஹாதேவி அருகிலுள்ள சிவசைலத்தில் செயல்படும் இயற்கை நலவாழ்வு மையம்  போன்ற பல சங்கங்கள் சேலம், குரோம்பேட்டை, ராஜபாளையம், மயிலாடுதுறை, திண்டுக்கல், சிவகாசி, விருதுநகர், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம்  என்று பல ஊர்களில் அவ்வப்போது நடைபெறும் பயிற்சி முகாம்கள் இந்த அரும்பணியினைச் செய்து வருகின்றன.  இவற்றில் கலந்துகொண்டு, அங்கே கற்றுக்கொண்டதை தொடர்ந்து பின்பற்றி தீராத நாட்பட்ட நோய்களிலிருந்து பரிபூரண குணம் அடைந்தவர்கள் நிறைய உள்ளனர். இது நான் அறிந்த உண்மை.  எனவே  வாய்ப்புள்ளவர்கள் தங்கள் ஊருக்கு அருகில் நடைபெறும் இயற்கை உணவு, இயற்கை நல முகாம்களில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டுகிறேன்.  

சென்னையில் ஒருநாள் அதிகாலையில் திருவான்மியூர் கடற்கரையில் நடை பயிலச் சென்றபோது அங்கே ஆரோக்கியம் தரும் இயற்கைச் சாறுகள் (அருகம்புல் சாறு போன்ற பல மூலிகைச் சாறுகள்), இயற்கை சூப்புகள் விற்கப்படுவதைக் கண்டேன். (வாத நோய்க்கு முடக்கத்தான் சூப், சிறுநீரகக் கோளாறுகளுக்கு வாழைத்தண்டு சூப், இப்படிப் பல).
 
காரைக்குடி அருகேயுள்ள நேமம் கிராமத்தில் ஒரு மூன்று நாள் இயற்கை நல உணவு முகாம் எங்களது மனித மேம்பாட்டு அமைப்பால்  ஏற்பாடு செய்யப்பட்டது.  அப்போது அதில் கலந்துகொண்டு நானும் என்னைப்போன்ற நூற்றியம்பது பேருக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றனர்.   ஒரே குறை என்னவென்றால், வீட்டில் அனைவரும் இதில் ஈடுபாடுகொண்டால்,  வீட்டில் இயற்கை உணவு தயாரிப்பது, அதை அனைவரும் மகிழ்வுடன் பகிர்ந்துண்பது என்பது சாத்தியமாகும்.  

கருத்துகள் இல்லை: