15 ஜூன், 2010

சூரியின் டைரி-18: என்ன நடக்குது இலங்கையில்...

மிகுந்த தயக்கத்திற்குப்பின் இதை எழுதுகிறேன்.  

தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்சினை மிகு உணர்ச்சியுடன் அணுகப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் பொது நடந்த  யூதர்களின் இனப்படுகொலை, வங்கதேசத்தில் நடந்த இனப்படுகொலை போன்ற இனப்படுகொலைதான் இலங்கையிலும் நடந்திருக்கிறது.  இதை யாரும் மறுப்பதற்கோ, மறைப்பதற்கோ இல்லை.  உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து இது.  ஆனால் நான் சுட்டிக்காட்ட விரும்புவதெல்லாம் தமிழ்நாட்டிலுள்ள அரசியல்வாதிகள் பலர் தங்களது சுயநலத்திற்காக மக்களின்  உணர்ச்சிகளை அளவுக்கதிகமாகவே தூண்டிவிட்டு, அரசியல் ஆதாயம் அடைவதிலேயே குறியாயுள்ளனர்.  (இலங்கைப் பிரச்சினையைப் பயன்படுத்தி திடீர்க் குபேரர்கள், நாட்டில் திரும்பிய இடமெல்லாம் 'கட்-அவுட்', 'பேனர்கள்'  கண்ணை உறுத்துமளவிற்கு.  இதற்கெல்லாம் பணம் எங்கிருந்து வருகிறது?  மாநில, மைய அரசுகள் இவர்களைக் கண்டுகொள்வதில்லையா?)   இந்த விஷயத்தில்  யாரும் தங்கள் பகுத்தறிவை பயன்படுத்துவதோ, கருத்து வேறுபாடு கொள்வதோ ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.  வன்முறை  தூண்டிவிடப்பட்டு, அது ரயிலைக் கவிழ்ப்பதுவரை சென்றுள்ளது.  

தமிழ்நாட்டில், அதிகம் தமிழர்கள் பயணம் செய்யும் ஒரு ரயிலைக் கவிழ்த்தி, நூற்றுக் கணக்கான தமிழரைக் கொல்வது எப்படி இலங்கைத் தமிழருக்கு உதவப் போகிறது என்பது புரியவில்லை.   இலங்கை தமிழர் பிரச்சினைக்காக இந்தியத் தமிழரைக் கொல்வது என்ன நியாயம்?  இந்தியாவிலிருந்துகொண்டே இந்தியாவையும், இந்திய மக்களையும், இந்திய அரசையும் கடுமையாகத் தாக்குவதால்  இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு எப்படி தீர்வு கிடைக்கப்போகிறது?  இந்த மாதிரியெல்லாம் கேள்விகள் எழுப்பினால், அல்லது கருத்து வேறுபாடு கொண்டால், தமிழ்த் துரோகி என்ற பட்டமும், எண்ணம், சொல், செயல் அனைத்திலும் வன்முறை  கட்டவிழ்த்து விடப்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுவாகவே சாத்வீக எண்ணம் கொண்டவன் நான்; வன்முறையால் எந்தப் பிரச்சினைக்கும் நிரந்தரத் தீர்வு காணமுடியாது, தவறான வழியில் சென்று சரியான குறிக்கோளை ஒரு நாளும் அடைய முடியாது என்று உறுதியாக நம்புபவன் நான். ஏசு, காந்தி, புத்தர் காட்டிய அன்புவழியில் பெரிதும் நம்பிக்கை கொண்டவன் நான்.  எதற்கு தேவையில்லாத கருத்து மோதல், மனக் கசப்பு என்றுதான் நினைத்தேன்.  ஆனாலும் என்னால் என்னுடைய கருத்தை என்னுடைய வலைப்பூவில் பதிவு செய்யாமல் இருக்கமுடியவில்லை.  குறைந்த பட்சம் அந்தக் கருத்துச் சுதந்திரம்கூட எனக்குக் கிடையாதா என்ன?  யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடனோ, அல்லது யாரையும் குறை கூறும் எண்ணத்துடனோ இது எழுதப்படவில்லை.  வாசகர்கள் இதை மனதில் கொள்வார்களாக!  


தற்போது இதைப் பற்றி நான் ஏன் எழுத நேரிட்டது?  அதையும் சொல்லி விடுகிறேன்.  குமுதம் தீராநதி  ஜூன்  2010 இதழை சென்ற ஞாயிறன்று வாங்கினேன்.  நான் முதன்முதலில் வாங்கிய குமுதம் தீராநதி இதழ் ஜூன் 2002  இதழ்.  அதைப் பிரித்துப் படிக்கப் படிக்க, குறிப்பாகப் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களது நேர்காணலில், "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மக்கள் விரோதச் சித்தாந்தம்" என்று பார்த்தவுடன் ஒரு மாதிரி நெருடல்.  போகப் போக, ஒரே இடது சாரி நெடி, திராவிட நெடி.  சரி, இதற்கும் நமக்கும் ஒத்து வராது;  அவர்கள் பாதை வேறு, நம் பாதை வேறு என்று, ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கிவிட்டேன். 


சென்ற ஞாயிறன்று பேருந்து நிலையம் சென்றேன்.  அங்கே எந்த இதழைப் பார்த்தாலும் ஒரே சினிமா மயம்.   மொழிபெயர்ப்பு இலக்கிய இதழ்களான  திசை எட்டும், இனிய உதயம் ஆகியவற்றின் வாசகன் நான்.    இவற்றை விட்டால் இலக்கிய இதழே கிடையாதா?  இந்த எண்ணத்துடன் இதழ்களைப் பார்வையிட்டேன்.  அப்போது அங்கே தொங்கிக் கொண்டிருந்த குமுதம் தீராநதி ஜூன் 2010 இதழ் கண்களில்பட, சரி, வாங்கித்தான் பார்ப்போமே என்று வாங்கினேன்.  சோதனையாக, அதே பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நேர்காணல்.  அதில் "பகவத் கீதை கொண்டாட்டத்துக்குரிய ஒரு நூல் இல்லை" என்ற வரிகள்.  கீதையைப் போற்றி வணங்கும் ஆன்மிகவாதி நான்.   என்னடா இது, இப்படி எதிர்மறையான சிந்தனை நிறைந்த இதழை  வாங்கியிருக்க வேண்டாமோ என்று ஒரு வருத்தம்.  பக்கத்தைப் புரட்ட, தமிழவனின், 'க.நா.சு.தான் வென்றார்'. படித்தேன், பிடித்தது.  சரி, ஒரு பார்வை இதழ் முழுவதையும் பார்த்துவிடுவோமே என்று பக்கங்கள் அனைத்தையும் புரட்டினேன். புரட்டித் திரும்பியபின்,  "என்ன நடக்கிறது இலங்கையில்..." என்ற அ.மார்க்ஸ் அவர்களது கட்டுரையைப் படித்தேன்.  அதன் முதல் பக்கத்திலேயே, ஈழப் பழம்பெரும் எழுத்தாளர் டொமினிக் ஜீவா அவர்களது வார்த்தைகள் என்னை ஈர்த்தது:  ஈழப் பிரச்சினையைத் தமது சொந்த அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்திக்கொண்ட தமிழக அரசியல்வாதிகளைக் கடுமையாகக் கண்டித்தார்.  "இந்த இலங்கைத் தீவு மட்டும் இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழகத்திற்கு அருகில் இல்லாமல், எங்காவது ஆப்பிரிக்கக்  கண்டத்தில் இருந்திருந்தால் நாங்கள் இத்தனை கஷ்டப்பட்டிருக்க மாட்டோம்." என இரு முறை கூறினார்.

ஆர்வத்துடன் மேலே படித்தேன்.  இலங்கைத் தமிழர் படும் துயரை மிக நன்றாகவே கட்டுரை வெளிப்படுத்தியிருந்தது.   நான் என்ன கல்நெஞ்சனா?  அவர்களது வேதனையை என்னாலும் நன்றாக உணர முடிந்தது.  நானும் வேதனைப் பட்டேன்.  ஆங்கிலக் கவிஞன் ஜான் டன் (John Donne )  அவர்களது "Everyman 's death diminishes me "  என்ற வாசகத்தையும், தாயுமானவரின், "எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுவதே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே"  என்ற வாசகத்தையும் முழுமையாகப் போற்றுபவன் நான்.  இந்தப் பதிவை வாசிக்கும் அன்பர்கள் இவற்றையும்  மனதில் கொள்வார்களாக!

இந்தக் கட்டுரையிலிருந்து, சில பகுதிகளை அனைவரும் அவசியம் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவை: 

"இந்திய அரசு தமிழ் ஈழம் பெற்றுத் தரும் என எப்படி நீங்கள் நம்பினீர்கள்?  தமிழ் ஈழம் அமைப்பது இந்திய அரசியல் நலனுக்கு உகந்ததாக எப்படி இருக்கும்?  ஈழப் போராட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பெரும் பிழைகளில் ஒன்று இப்படி நம்பியது"  (பேராசிரியர் மார்க்ஸ் அவர்கள் கொட்டகலாவிலுள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும், கொழும்பு தமிழ்ச் சங்கத்திலும் பேசியது).   

"... மொத்தத்தில் சுமார் மூன்று லட்சம் மலையகத் தமிழர் இவற்றில் (தேயிலைத் தோட்டங்களில்) பனி செய்கின்றனர்.  இவர்களது பிரச்சினையை யாழ்ப்பாணத் தமிழர்கள் என்றும் கண்டுகொண்டதில்லை.  சொல்லப்போனால் தமிழர் தலைவர்கள் சிங்கள அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் எல்லாவற்றிலும் காட்டிக் கொடுக்கப்பட்டது மலையகத் தமிழர்களே."  

"தமிழகத்திலிருந்து  செல்கிறவர்கள்  பார்க்கத்  தவறுகிற, சரியாகச்  சொன்னால், பார்க்கத் தவிர்க்கிற ஒரு பிரிவினர் உண்டெனில் அது புத்தளத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அகதிகளாக வாழும் முஸ்லிம்கள்தான். விடுதலைப் புலிகளால் 1989-90களில்  இருபத்துநாலு மணி நேர கெடுவில் வடக்கு மாகாணத்திலிருந்து விரட்டப்பட்டவர்கள் அவர்கள்.  குழந்தைகளையும், வயதானவர்களையும் வன்னிவரை சைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டு அவர்கள் வந்த கதை சோகமானது..."  

டெலோ அமைப்பின் தலைவர் ஸ்ரீசபாரத்தினம் மற்றும் அவருடனிருந்தோர் கொல்லப்பட்டது, சென்னையில்  ஈ.பி.எல்.ஆர்.ஃஎப். அமைப்பின் தலைவர் பத்மநாபா மற்றும் அவருடனிருந்தோர் கொல்லப்பட்டது,  வன்முறையை நம்பாத  TULF  தலைவர்கள் அமிர்தலிங்கம்,  தியானேஸ்வரன் போன்றோர் கொல்லப்பட்டது, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டது - இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.  

வன்முறையைப் பின்பற்றுவோருக்கு வன்முறையே முடிவாக அமையும் என்பது வரலாற்று உண்மை. 


மீண்டும் கேட்கிறேன்: தவறான வழிமுறைகளைப் பின்பற்றி சரியான குறிக்கோளை எப்படி அடைய முடியும்?  

இனித் தாமதியாது உடனே செய்யவேண்டியது?  அதைப்பற்றி  நாளை மீண்டும் எழுதுகிறேன். 

நன்றி:  திரு.அ.மார்க்ஸ், திரு.டொமினிக் ஜீவா, குமுதம் தீராநதி மற்றும் வாசகர்கள்.   

கருத்துகள் இல்லை: