"என்ன நடக்குது இலங்கையில்" என்ற எனது நேற்றைய பதிவைத் தொடர்ந்து இதை எழுகிறேன்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்திய அரசு முனைப்புக் காட்டுவது, 5000 வீடுகட்ட உதவி, 45000 தமிழர்களை விரைவில் குடியமர்த்துதல், பாரதப் பிரதமர் இலங்கை அதிபரிடம் பேசி விரைவான தீர்வு காண முயல்வது என்று சரியான பாதையில் எல்லாம் நடந்து வருவது ஆறுதலாக இருக்கிறது. ஆனால் இவை மட்டும் போதாது. கண் முன் நிற்கும் பிரச்சினைகளுக்கு முன் இவை எல்லாம் ஒரு சிறு துளியே.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒன்று பட்டு, தேவையான நிதி திரட்டி, உலக மக்கள், உலக நாடுகள், ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின் கவனத்தை ஈர்த்து, அவர்களின் ஆதரவைப் பெற்று விரைவில் இலங்கையில் சுமுகமான நிலை ஏற்பட, பல வழிகளிலும் சிந்தித்துச் செயல்படவேண்டும். வெடிகுண்டு வைப்பது, ரயிலைக் கவிழ்ப்பது போன்ற வன்முறைகளை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக அனைவரும் செயல்படவேண்டும்.
இலங்கைத் தமிழர் அனைவரும் - அனைவரும் என்றால் யாழ் தமிழர் மட்டுமல்ல, மலையகத் தமிழர்கள், ஈழ முஸ்லிம்கள் - வீடுவாசல், வேலை வாய்ப்பு, தங்கள் குழந்தைகளுக்கு பள்ளி, கல்லூரிப் படிப்பு வசதிகள், மருத்துவ வசதிகள் மட்டுமின்றி, முன்பு முப்பது ஆண்டுகளுக்கு முன் இருந்தது போன்ற சுதந்திரமான வாழ்க்கை வசதிகள் அனைத்தையும் பெறவேண்டும். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்று சிந்திக்கவேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கையில் பகைமை உணர்ச்சி, பழிவாங்கும் உணர்ச்சி, வெறுப்புணர்ச்சி, சந்தேக மனப்பான்மை போன்ற அனைத்து எதிர்மறை உணர்ச்சிகளும் நீங்கவேண்டும். இதைச் சொல்லுதல் எளிது; ஆனால் செயல்படுத்துதல் மிக, மிகக் கடினம். ஆயினும் இதை விட்டால் நிரந்தரத் தீர்வுக்கு வேறு வழியே இல்லை. (இந்து-முஸ்லிம் மத ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகான் காந்தி போல், அனைவரும் அல்லது பெரும்பான்மையோர் ஏற்கும் ஒரு தலைவன் அல்லது தலைவர்கள் இலங்கையில் தோன்றமாட்டர்களா என்று என் மனம் ஏங்குகிறது.) இதற்காக அனைவரும் பாடுபட்டே ஆகவேண்டும். ஏனெனில் எத்தனை வசதிகள் இருந்தாலும், பஞ்சு மெத்தையில் புரண்டாலும், குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தாலும், கட்டிலுக்கடியில் நச்சுப் பாம்பை வைத்துக் கொண்டு யாராவது நிம்மதியாக உறங்க முடியுமா? வெறுப்புணர்ச்சி, பகைமை உணர்ச்சி, பழிவாங்கும் உணர்ச்சி என்ற இந்த நச்சுப் பாம்புகளை அழிக்கும் வரையில் நிம்மதியான வாழ்க்கை என்பதே இலங்கையில் இராது.
எனக்குத் தெரிந்தவரையில் இலங்கையின் வரலாற்றை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் இலங்கை என்றால் சொர்க்கபூமி. இயற்கை எழில் கொஞ்சும், செழிப்பான பூமி, வசதி வாய்ப்புகள் நிறைந்த நாடு. தமிழர்-சிங்களவர் இடையே பரஸ்பர நம்பிக்கை, அன்பு, நல்லுறவு இருந்தது. இலங்கையில் குடியேறிய மற்றும் அங்கு பிறந்த தமிழர்கள் தங்கள் உழைப்பாலும், திறமையாலும் மிளிர்ந்தனர். சிறப்பான வாழ்க்கை வாழ்ந்தனர். சிங்களர்-தமிழர் காதல் திருமணங்களும், சிங்களர்-தமிழர் தனிப்பட்ட நட்பும் ஓங்கியிருந்தது. இந்தியாவில் தமிழுக்குக் கிடைக்காத மரியாதைகள், வாய்ப்புகள் இலங்கையில் தமிழுக்குக் கிடைத்தது. எல்லா இடத்திலும் சிங்களத்தோடு தமிழும் சமமாக இருந்தது. இலங்கை வானொலியின் தமிழ் நிகழ்ச்சிகளை உலகெங்கும் உள்ள தமிழர்கள் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். முப்பதாண்டுகளுக்கு முன், 'இரவின் மடியில்' நிகழ்ச்சி முடிந்த பின்னரே படுக்கைக்குச் செல்வேன். இனிமையான, சுகமான, பொருத்தமான மெல்லிசைப் பாடல்கள் ஆழ்ந்த நித்திரைக்கு பெரிதும் உதவின. அவையெல்லாம் எங்கே போயின?
குறுகிய மனப்பான்மை கொண்ட சிறு சிறு சிங்கள அமைப்புகளிடம் பொறாமை எண்ணம் தோன்றியது. இந்தத் தமிழர்கள் நம் வசதி வாய்ப்புகளைப் பறிக்கின்றனர் என்ற தவறான எண்ணம் வளர்ந்தது. தீய சக்திகள் இந்த வெறுப்புணர்ச்சியைத் தூண்டி வந்தன. இதனால் அவ்வப்போது இனக்கலவரம் தோன்றும். அக்கலவரங்களில் பல சமயங்களில் சிங்கள நண்பர்கள் தமிழர்களுக்கு அடைக்கலம் தந்து, தமிழர்களை மறைத்துவைத்து காப்பாற்றியிருக்கின்றனர். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் அரசியல் ஆதாயத்திற்காக சிங்களரிடம் தமிழர் மேல் வெறுப்புணர்ச்சியை வளர்த்து, அதில் குளிர் காய்ந்தனர். (உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் உலகெங்கிலும் உள்ள அரசியல்வாதிகள், தீய சக்திகள் இந்த உத்தியைக் கையாண்டு எப்படி லாபம் அடைந்தனர், தங்களது சுய நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டனர் என்பது தெளிவாகும். ஹிட்லர் யூதர்கள் மேல் வெறுப்புணர்ச்சியை வளர்த்தது, தமிழ்நாட்டில் ஜாதி வெறியைத் தூண்டி வளர்ந்த இயக்கங்கள், தங்கள் மதத்தினர் பேராபத்தில் இருப்பது போலவும் அவர்களைக் காக்கவே பிறந்தவர் போலவும் தவறான, பொய்யான கருத்துக்களைப் பயன்படுத்தி வளர்ந்த மதக் கட்சிகள் என்று பலவற்றைச் சான்றாகக் கூறலாம். பொதுவாக இனம், மதம், மொழி, ஜாதி போன்ற மக்கள் பெரிதும் உணர்ச்சி வசப்படுகின்ற பிரச்சனைகளை கையிலெடுத்துக்கொண்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அரசியல் லாபம் அடைவது அரசியல்வாதிகளுக்கு ஒரு யுக்தி, ஒரு கைவந்த கலை. மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இது போன்ற எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிய முடியும். ஆனாலும் பெரும்பாலும் இந்த விழிப்புணர்வு மக்களிடம் இருப்பதில்லை. மக்கள் தலைவர்களும் விழிப்புணர்வுடன் உடனே செயல்படுவதில்லை. இதனால் உலக முழுவதும் எத்தனை லட்சம் படுகொலைகள், கலவரங்கள், துன்பங்கள், துயரங்கள்!) இதன் விளைவாக தமிழரிடம் அச்ச உணர்வு தோன்ற, தங்களுக்கென்று தனிநாடு இருந்தால்தான் அச்சமின்றி வாழமுடியும் என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்தது. மிதவாத தமிழ் அமைப்புகள் TULF என்ற பெயரில் ஒருங்கிணைந்து ஒன்றுபட்ட இலங்கையிலேயே அதிக அதிகாரப் பகிர்வுதான் தீர்வு என்று செயல்பட்டனர். ஆனால் அதே நேரத்தில் சுமுகமான முறையில் உரிமைகளைப் பெறமுடியாது, ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற என்ணத்தை வளர்க்கும் தமிழ் அமைப்புகள் தொன்றின. LTTE , TELO, EPLRF போன்ற வன்முறையை நம்பும் அமைப்புக்கள் தோன்றின. ஆனால் அவர்களிடேயும் ஒற்றுமை இல்லை. தமிழரைத் தமிழர் கொன்று குவிக்கும் நிலையும் ஏற்பட்டது. அதன் பிறகு நடந்ததெல்லாம் அனைவரும் அறிவர். நான் அதைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. இருபத்தாறு வருட கடுமையான, ரத்தம் சிந்திய, லட்சக் கணக்கான உயிர்ப்பலிக்குப் போராட்டத்திற்குப் பின் தமிழர் நிலை முன்னேறுவதற்குப் பதிலாக, பெரும் பின்னடைவே ஏற்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் லட்சக் கணக்கானோர் வீடு வாசல் இழந்து, மனைவி மக்களை இழந்து, அனைத்து உடைமைகளையும், உரிமைகளையும் இழந்து தங்கள் நாட்டிலேயே அகதிகளாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலை, கொடிய நிலை, ரத்தக்கண்ணீர் சிந்தும் நிலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக