4 ஆக., 2010

சூரியின் டைரி-22: பொதுவாழ்வில் சூரி



அலுவலகத்தில்  சேர்ந்து  நான்கைந்து  ஆண்டுகளுக்குப்பின்  பொது வாழ்க்கையில் ஈடு படலாம் என்ற ஒரு கிறுக்குத்தனமான எண்ணம் தோன்றியது.  கிறுக்குத்தனம் என்று சொல்வதன் காரணம் என் பிரச்சினைகளே  தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவு.  அப்படியிருக்க பொது வாழ்க்கை ஒரு கேடா என்பதுதான்.  உண்மையைச் சொல்லப்போனால் இது ஒருவகையான  தப்பித்தல் (escapism) என்றுகூடக் கொள்ளலாம்.  

முதலில் அலுவலக மனமகிழ் மன்றம்.  அதில் பலவேறு பொறுப்புகளில் பல நிகழ்ச்சிகளை புதிது புதிதாக நிறையச் செய்தேன். நூலக வார விழா - கவியரங்கம், பட்டி மன்றம், கண்காட்சி, பேச்சுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் இப்படிப் பல நிகழ்ச்சிகள்.  வெளிநாட்டு தூதரக அமைப்புகளிலிருந்து விதம் விதமான டாக்குமெண்டரி படங்கள் (டிவி வராத காலம் அது)(அலுவலகமும், அலுவலகக் குடியிருப்பும் ஊருக்கே வெளியே நான்கைந்து கிலோமீட்டர் தொலைவில்).  அப்புறம் அடிக்கடி 16 எம்.எம். படங்களை அலுவலக அரங்கில் திரையிடுவது.  ஒப்பற்ற நூலகத்தை உருவாக்கியது (இரண்டு மூன்றாண்டுகளில் நூலகத்தில் புத்தகங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கைத் தாண்டியது.  ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆங்கில, தமிழ் இதழ்கள். இப்படி செயல்படும்போது சில கால்களில் இடறி, நிறைய வம்புகளில் மாட்டிக்கொண்டேன். அப்புறம் தலையைக் கழட்டினால் போதும் என்று வெளியேறும் நிலை.  

அடுத்து அலுவலக காண்டீன்.  அங்கும் நிறைய மாற்றங்கள், புதுமைகள் செய்தேன்.  நெடுநாள் பிரச்சினைகளைத் தீர்த்தேன்.  ஆனால் இங்கும் பிரச்சினைகள் வர, ஒதுங்கினேன்.

திருமணம் ஆன பின்  மனைவிக்காக ஹோமியோபதி மருந்து வாங்கச் சென்றபோது அதைப் பயில வாய்ப்பிருப்பதை அறிந்து பயில ஆரம்பித்தேன்.  அதன் மேன்மை தெரிந்ததும் அதில் பைத்தியமாகி, அதுவே கதி என்று எங்கள் ஹெல்த் இன்ஸ்டிடூட்டில் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தேன்.  அங்கே ஒத்தகருத்துடைய பல நண்பர்கள் கிடைத்தார்கள்.  ஹோமியோ புத்தகங்களையும், இதழ்களையும் ஊர் ஊராகத் தேடிப்பிடித்து வாங்க, படிக்க,  கலந்துரையாட, அத்துறையில் நற்பெயர் பெற, அதனால் இந்த அற்புதமான மருத்துவத்தைப் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் மேலிட, தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம் (Association for Propagation of Classical Homeopathy - AProCH ) என்ற அமைப்பைத் தோற்றுவித்தோம். தமிழ்நாடு தழுவிய இந்த அமைப்பின் நிறுவன பொதுச் செயலராக நான் இருந்தேன்.  அங்கும் நண்பர்கள் பாஷையில் சொன்னால் "தூள் கிளப்பினேன்".

அந்தக் கால கட்டத்தில் ஹோமியோபதியை மக்கள் நன்றாகப் புரிந்துகொள்ள கருத்தரங்கங்களையும், கண்காட்சிகளையும் நடத்தினோம்.  காரைக்குடி  தொழில் வணிகக்  கழக மண்டபத்தில் ஒரு ஹோமியோபதிக் கண்காட்சி நடத்தினோம்.  அந்தக் கண்காட்சியில்  ஹோமியோபதி நூல்கள், மருந்துகள், விளக்கப் போஸ்டர்கள்,  அத்துறையில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்,  ஹோமியோபதியைப் போற்றிய பெருமக்களின் கருத்துக்கள்,  எங்கள் அமைப்பு நடத்திய நிகழ்ச்சிகளின்போது  எடுத்த புகைப்படங்கள் போன்றவற்றை வைத்திருந்தோம்.  கண்காட்சியைத் திறந்து வைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மாவட்ட மேலாளர் (Regional Manager, IOB, Karaikudi)  அவர்களுக்கு  ஹோமியோபதி மருந்தை எளிதில் தேற உதவும் சிறந்த கம்ப்யூட்டர் மென்பொருளான "ஹோம்பாத்" (HOMPATH )  என்ற மென்பொருளை விளக்கிக் கொண்டிருக்கும்போது   எடுத்த படம் மேலே.  (அவரது பெயர் நினைவில் இல்லை; மன்னிக்க!)  அந்தக் கண்காட்சியில் எடுத்த படங்களில் இது ஒன்றுதான் மிச்சம்.  அப்ரோச்  அமைப்பின் மூலம் உங்கள் ஹோமியோ நண்பன் என்ற மாத இதழை நடத்தி வந்தோம்.  அதில் நிறைய கட்டுரைகள் எழுதினேன்.  பாராட்டுக்கள் பெற்றேன்.  ஆனால் ஒரு காலகட்டத்தில் அதிலிருந்தும் வெளியேறும் நிலை.  ஆனால் எனது விலகல் கடிதத்தை செயற்குழு ஏற்க மறுத்தது.  நான் என் முடிவில் உறுதியாக இருந்தேன்.  ஒரு ஞாயிறன்று  அன்பர்கள் என் வீடு தேடி வந்து தர்ணா செய்து விலகும் முடிவை மாற்றச் சொல்லி  என்னை வற்புறுத்தினர்.  எனினும் நான் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.  அதிலிருந்து படிப்படியாக ஹோமியோபதிக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்தது.  புத்தகங்கள், இதழ்கள் எப்படிப் பலவற்றையும் நண்பர்களுக்குக் கொடுத்துவிட்டேன்.  பின்னாளில் மனித மேம்பாடு அறிவியல் அமைப்பில்(Forum for Advancement of Science of Human Development-FASOHD) செயல்பட்டபோதும் இதே நிலை ஏற்பட்டு, அதைவிட்டு  விலகினேன்.  அங்கும் பலர் தொடரும்படி வற்புறுத்தினர்.  நான் முடிவில் உறுதியாக இருந்துவிட்டேன்.  பொது அமைப்புகளில் செயல்பட நான் லாயக்கில்லையோ என்று எனக்கே தோன்ற ஆரம்பித்துவிட்டது.  இப்போது நான் எந்த அமைப்பிலும் இல்லை.  எனது எண்ணங்கள், சிந்தனைகள் செயல்படுத்த சிறந்த வாகனங்களும் இல்லாமற் போனது.  இது இன்னோர் வகையான வேதனை.  எறும்பு, தேனீ இந்த இரண்டின் சுறுசுறுப்பையும் பல மடங்கு பெருக்கினால் வரும் அளவிற்கு சுறுசுறுப்பானவன், செயல்திறன் வாய்ந்தவன் என்றும், மற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் என்றால், சூரி சாருக்கு மட்டும் நாற்பத்து எட்டு மணி நேரம் என்று என் அன்பிற்குரிய பேராசிரியர் ஒருவர் கூறும்படியும் பெயர் பெற்ற ஒருவனுக்கு எதுவுமே  இல்லாமல் இருப்பது கஷ்டந்தான்.  நிறைய புத்தகங்கள், இதழ்களிலிருந்து வெட்டியெடுத்து சேர்த்த குறிப்புகள் (கிட்டத்தட்ட பத்து பெரிய பெட்டிகள் நிறைய!),  லேட்டஸ்ட் கம்ப்யூட்டர்,  அளவற்ற நேரம், அளவற்ற டவுன்லோட்  கொண்ட பிராட்பேன்ட்  இணைப்பு(Internet Broadband  Connection with Unlimited Time and Unlimited Download)என்று இப்படி எத்தனை இருந்தும் சரியாகச் செயல்பட முடியாமல் நோய்  நொடிகளுடனும்,  கவலைகளுடனும் நேரத்தைக் கழிக்கின்றேன்.  எத்தனை நாள் இப்படிப் போகும், தெரியவில்லை. பார்க்கலாம்!       

கருத்துகள் இல்லை: