முதலாவதாக, இந்த செப்டம்பர் பதினொன்று அன்று விநாயகர் சதுர்த்தி. சென்னையில் மகள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினேன். பிறகு உறவினர் வீட்டிற்குச் சென்றேன். அங்கும் மோதகம் உண்டு விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம். தமிழ்நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை ஒரு சிறிய வினயாகர் கோவிலாவது இருக்கும். பல இடங்களில் கூரையும் இருக்காது, கதவும் இருக்காது. எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழியுடன், பிள்ளையாரை வணங்கி ஆரம்பிப்பது நமது மரபு. ஒரு உருண்டை மாவிலோ, சானத்திலோ பிள்ளையாரை உருவாக்கி விடலாம். பிள்ளையார் என்றாலே இந்த எளிமைதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது.
சென்னையில் வினயாகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் சாலையோரம் ஐந்தடி, பத்தடி உயர வண்ண வினயாகர் சிலைகள் அலங்கரித்தன. மகாராட்டிரத்தைப்போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் வழிபாடும், குறிப்பாக வினயாகர் சதுர்த்திக் கொண்டாட்டமும் சிறப்பாகிக் கொண்டே போகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
சென்னையில் வினயாகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் சாலையோரம் ஐந்தடி, பத்தடி உயர வண்ண வினயாகர் சிலைகள் அலங்கரித்தன. மகாராட்டிரத்தைப்போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் வழிபாடும், குறிப்பாக வினயாகர் சதுர்த்திக் கொண்டாட்டமும் சிறப்பாகிக் கொண்டே போகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
இரண்டாவதாக, இந்த செப்டம்பர் பதினொன்று அன்றுதான் தன்னையாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற அகந்தையில், இறுமாப்பில் இருந்த வல்லரசான அமெரிக்காவின் ஆணவத் தலையில் இடி விழுந்த நாள். இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்து அல்-கொய்தா அமெரிக்காவை அரளச் செய்த நாள். ஆப்கானிஸ்தானில் சோவித் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்ட அல்கொய்தா அவர்கள் தலையிலேயே மண்ணைப்போட்ட நாள். அதன் பின்னரும் படிப்பினை பெறாமல், இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாதம் தலை விரித்தாடுவதைக் கண்டுகொள்ளாமல், பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு இன்றுவரை மேலும் மேலும் ஆயுத தளவாடங்கள் வழங்கிவருவதும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு துணை புரிகின்றது என்ற உண்மையை இன்னும் உணராததும்தான் வேதனையான உண்மை. "வரலாற்றிலிருந்து நான் கற்றுக் கொண்ட உண்மை, அதிலிருந்து யாரும் எதுவும் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான்" (I have learnt from History that people seldom learn anything from it) என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது. நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், வழிமுறைகள் தவறாக இருந்தால் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்ற மாபெரும் உண்மையை யாரும், குறிப்பாக ராஜிய பாரம் சுமக்கும் எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. இது உலகத் தலைவர்கள் அனைவருக்குமே பொருந்தும்.
மூன்றாவதாக மஹாகவி பாரதியின் பிறந்த நாள். சமீப காலமாக பாரதி பற்றிய நூல்களைத் தேடித் தேடி படித்துவருகின்றேன். தற்போது பாரதி கட்டுரைகளைப் படித்து வருகிறேன். பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பித்து வெளியிட்டுள்ள இந்த அருமையான 571 பக்கங்கள் கொண்ட இந்த அற்புதமான நூல் (விலை ரூபாய் தொண்ணூறு மட்டும்) அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று, குறிப்பாக பாரதி அன்பர்கள். பாரதியின் மேன்மையான சிந்தனைகள் சிலிர்க்க வைக்கின்றன. இதிலிருந்து பாரதியின் சில சிந்தனைகளை மட்டுமாவது இந்த வலைப்பூவில் பின்னர் பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன். (பாரதியின் படைப்புகள் அனைத்தையும் நாட்டுடமையாக்கிய தமிழக அரசிற்கு நன்றி!). தற்போது அவரது ஒரே ஒரு சிந்தனையை மட்டும் இங்கே பதிவு செய்து இதை நிறைவு செய்கிறேன்:
"கோவிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி; தெய்வத்தை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள் புரியும். துளிகூட, ஓர் அணுகூட மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன்."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக