எல்லாம் மாயை, எல்லாம் பொய்; வாழ்வே மாயம், மண்ணாவது திண்ணம் என்று வேரில் வெந்நீர் ஊற்றும் தத்துவங்களுக்கு, நம் உற்சாகத்தை, நம்பிக்கையை, செயல் ஆற்றலைக் குறைத்து, நம் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடும் சிந்தனைகளுக்கு இந்நாட்டில் பஞ்சமில்லை; மாயாவாதம்தான் பாரதத்தைச் சீரழித்து, இந்தியர்களை வெள்ளையர்களின் அடிமையாக்கி வைத்தது என்று மாயாவாதத்தைக் கடிவோர் உண்டு.
இது தவறு; மாயை என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு, வாழ்க்கைப் பாதையைச் சரியாக அமைத்துக் கொண்டால் பிறவிப்பயனை அடையலாம் என்பது எதிர்வாதம்.
இருக்கட்டும், மாயை என்றால் என்ன? உண்மையைப் பொய்யாகவும், பொய்யை உண்மையாகவும், இருப்பதை இல்லாததாகவும், இல்லாததை இருப்பதாகவும் காட்டும்; ஒன்றுமில்லாததை அதுவே எல்லாம் என்பது போலவும், முக்கியமானதை ஒன்றுமில்லாதது போலவும் காட்டும் வல்லமை மிக்கது மாயை. பந்தம், பாசம் போன்ற பலவற்றாலும் நம்மைப் பிணைப்பது மாயை. வாழ்வின் மேலான குறிக்கோளை மறக்க வைத்து, நம்மை அறியாமை இருளில் மூழ்க வைப்பது மாயை. நம் அறிவுக்கண்ணை மறைத்து, நம்மைக் குழம்ப வைத்து, தடுமாறவைத்து, தவிக்கவைத்து, தவறிழைக்கவைத்து, தண்டனையில் சிக்கவைத்து, பாதை மாறவைத்து, நம் வாழ்வை சீரழிக்கும் ஆற்றல் கொண்டது மாயை என்றெல்லாம் கூறப்படுகிறது. சரி இருந்துவிட்டுப் போகட்டும்; மாயையை எவ்வாறு அடையாளம் கண்டுகொள்வது? அதை எவ்வாறு வெல்வது?
அது அவ்வளவு எளிதல்ல. பெரும் ஞானிகளும், மகான்களும், முனிவர்களும்கூட மாயையிலிருந்து மீளமுடியாமல், கட்டுண்டு, தடுமாறியிருக்கின்றனர் என்று படிக்கிறோம். மாமுனிவர் வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி என்று போற்றப்பட்ட விசுவாமித்திர முனிவர் மாயையில் சிக்குண்டு தடுமாறவில்லையா? பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் மாயை ஒரு மாபெரும் தடைகள்; ஒவ்வொருவரும் முழுமை பெற தடையைக் கடன்தேயாக வேண்டும்; மாயை என்பது அச்சுறுத்தும் ஒரு தவிர்க்கமுடியாத தேர்வு; இதில் தேராவிடில் வாழ்க்கையில் தோற்றவராவோம்.
சீதையைப் பிரிந்து, துயருற்று ஸ்ரீ ராமன் கண்ணீர் விட்டதை, பிரம்மமே மாயையால் கட்டுண்டு அழுதது என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். வராக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு, அசுரனை வதம் செய்தபின்னும், வீடு திரும்பாமல், மாயையால் கட்டுண்டு பன்றியாகத் தன் குட்டிகளுடன் திரிந்தார். தேவர்கள் அவரிடம் வந்து தேவலோகம் திரும்பவேண்டியும், அவர் செவிசாய்க்கவில்லை. இறுதியில் சிவபெருமான் தோன்றி தனது சூலாயுதத்தால் அந்தப் பன்றியை வீழ்த்த, மாயை எண்ணிச் சிரித்தவாரே மகாவிஷ்ணு வைகுண்டம் திரும்பினார் என்று படித்திருக்கிறேன். இதையெல்லாம் என்னும்போது மாயையின் வலிமையை உணர முடிகிறது.
என் வாழ்வில் மாயை எப்படியெல்லாம் விளையாடியிருக்கிறது! குறிப்பாக, எனது போது வாழ்க்கையில். என் வாழ்வின் ஒரு கட்டத்தில் என்னையுமறியாமல் பொதுவாழ்வில் நாட்டம் கொண்டு, ஈடுபட ஆரம்பித்தேன். 'ஈடுபட' என்பது மிகச் சரியான வார்த்தை. ஏனெனில் ஏதாவது ஒன்று மனதிற்குப் பிடித்து, அதைப் பற்றி விட்டால் அதிலேயே மூழ்கிவிடுவேன்; பைத்தியமாகிவிடுவேன். இது என்னுடைய பெரிய குறைபாடு. இதனால் நான் அடைந்த கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்கள், மன வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.
அலுவலக மனமகிழ் மன்றம், அலுவலக உணவகம், ஆரோக்கிய நிலையம் என்ற ஒரு ஹோமியோ பயிலகம் மற்றும் சேவை மையம்; அப்ரோச் எனும் தூய ஹோமியோபதி பிரச்சார சங்கம், FASOHD எனும் மனித மேம்பாட்டு அறிவியல் பேரவை ஆகியவை நான் செயல்பட்ட அமைப்புகள். இவையனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக, ஒவ்வொன்றும் ஒரு கால கட்டத்தில் என் வாழ்வில் வந்தவை. எதிலுமே என்னால் நிலைத்திருக்க முடியாமல் வெளியேறவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே பைத்தியமாக இருந்துவிட்டு - செயல்பட்டுவிட்டு - சாதனைகள் புரிந்துவிட்டு - ஆளைவிட்டால் போதும் என்று துண்டைத் தோளில் உதறிப் போட்டு வெளியேறி இருக்கிறேன்.
என் மனைவி என்னைக் கேலி செய்வாள்: "எதிலாவது நிலைத்து இருந்திருக்கிறீர்களா? எல்லாவற்றையும் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேறி விடுகிறீர்களே; நீங்கள் பொது வாழ்க்கைக்கு லாயக்கில்லாதவர்" "ஒன்று இந்த எல்லை, அல்லது அந்த எல்லை; எல்லோரையும்போல் 'நார்மலாக' இருக்கக்கூடாதா?" உண்மைதான், நான் ஒரு துருவ சஞ்சாரி.
ஒன்றன்பின் ஒன்றாக, உதைவாங்கி ஒன்றைவிட்டு வெளியேறி - சிறிய இடைவெளிக்குப்பின் அடுத்தது - என்று உலா வந்திருக்கிறேன். ஆனால் எல்லா இடத்திலும் ஒரே கதைதான். சிந்திப்பேன் ஒவ்வொரு முறையும்: என் தவறென்ன? நான் என்ன செய்திருக்கவேண்டும்? மாயையின் மயக்கமா? கடும் பற்றா? சகிப்புத்தன்மை இன்மையா? தேர்ந்த அமைப்பு சரியில்லையா?
ஒரு நாள் திடீரென்று ஒரு வாசகம் என் மனதில் பட்டது, சுட்டது: "Maya is nothing but Name and Form " மனதில் ஒலித்த இந்த வாசகத்தை என் பொது வாழ்க்கையில் பொருத்திப் பார்த்தேன். அநேகமாக எல்லா அமைப்புகளிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன். உயிரைக் கொடுத்து, சிந்தித்து, செயலாற்றுபவர் ஒரு புறம்; அவர்கள் ஓரம் கட்டப்படுவர், காணாமல் போய்விடுவர். எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் தனதாகக் காட்டிக்கொண்டு, எல்லாவற்றிலும் தம் பெயரைப் பதித்துக் கொண்டு, மேடைகளை ஆக்கிரமித்து, புகைப்படங்களில் நிறைந்து, தாமே எல்லாம் என்பதுபோல் வலம் வரும் கூட்டம் மறுபுறம்; இதுதான் உண்மை; இதுதான் நாட்டுநடப்பு; பெயர் மயக்கம், புகழ் மயக்கம், மேடை மயக்கம், தன் மயக்கம் என்று இப்படிப் பல மயக்கங்கள் மனிதனுக்கு என்று மாயை நான் மொழி பெயர்த்தேன். எதிலும் பெயர் வராமல், முக்கியத்துவம் பெறாமல், மேடையை ஒதுக்கி, புகைப்படம், காட்சி என்று வரும்போது காணாமல் போதல் போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினேன். ஏனெனில் நான் பொது வாழ்க்கைக்கு வந்தது பெயருக்கும் புகழுக்காகவும் அல்ல; என் வாழ்வில் ஒரு நிறைவில்லாமல் இருந்தது; பொது வாழ்க்கையில் பலருக்கும் பயன்பட வாழ்க்கையில் அது கிடைப்பதாக உணர்ந்ததால் பொது வாழ்க்கையில் தொடர்ந்தேன். அதன் பின் என்னால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது; நிறைய சாதிக்க முடிந்தது; மன நிறைவு கிடைத்தது. இதில் வேடிக்கை என்னவெனில் பெயரும், புகழும் என்னைத் தேடி வந்தது. ஆனாலும் இறுதியில் கடைசி அமைப்பிலிருந்தும் வெளியேறவேண்டிய நிலை. எனது வழிமுறைகள் போதவில்லை. இன்னும் ஏதோ தேவைப்பட்டது. மாயைக்குப் பல பரிமாணங்கள் உள்ளதென்பதை அப்போதுதான் உணர்ந்தேன். மாயையை முற்றிலுமாக அறிந்து, அதிலிருந்து மீண்டாலன்றி, துன்பம்தான். தற்போது நான் எந்தப் பொது அமைப்பிலும் இல்லை.
ஆனால் ஒன்று - என் முயற்சிகள், செயல்பாடுகள் அனைத்தும் வீண் என்றோ, அதனால் எனக்கு எந்தப் பயனும் இல்லை என்றோ நான் கருதவில்லை. நிச்சயமாக ஒவ்வொரு அமைப்பிலும் நான் வளர்ந்திருக்கிறேன்; பாடம் கற்றிருக்கிறேன்; கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பித்திருக்கிறேன். இவை போதாவா?
விவேகானந்தரின் வாசகம் ஒன்று நினைவிற்கு வருகிறது: "Man is not travelling from error to truth but smaller truth to higher truth ." என் பொதுவாழ்க்கையும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். அதை பெருமையை நோக்கிய ஒரு பயணமாகக் கருதினால் (Search for the Ultimate Truth), மன வேதனை குறைகிறது, ஆறுதல் கிடைக்கிறது, தொடர்ந்து நடைபோட உத்வேகம் பிறக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக