5 அக்., 2010

சூரியின் டைரி-33: வள்ளலார் பிறந்ததினம்

இன்று 2010-ம் வருடம் அக்டோபர் மாதம் ஐந்தாம் நாள்.  இன்று பிரதோஷம்.  ஊரிலிருந்தால் நகர சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டிருப்பேன்.  இங்கு சென்னையில் நான் இருக்கும் இடத்திலிருந்து  சிவன் கோவில் தேடி அலைய முடியாது.  மேலும் நாளை ஊர் கிளம்பியாக வேண்டும்.  வேலைகள் நிறைய முடித்தாக வேண்டும்.

அடுத்து இன்று வள்ளலார் பிறந்ததினம் என்று நாட்காட்டி கூறுகிறது.  வள்ளலார் என்ற அந்த சொல்லைப் பார்த்ததும் மனமெல்லாம் நெகிழ்கிறது.  வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் அல்லவா அவர்!  

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி 
தனிப்பெரும் கருணை அருட்பெரும்ஜோதி!


தம்பி நெல்லையப்பனுடன் ஒருமுறை வடலூர் சென்றிருந்தேன்.  அங்கு தொடர்ந்து  ஒலித்த மேலே உள்ள மந்திரம் என் மனதில் ஆழப் பதிந்து விட்டது.  அங்கே ஒருவர் திருவருட்பாக்களை நெக்குருகப் பாடினார்.  காதில் தேன் பாய்ந்தது.  அங்கே குறிப்பிட்ட பகுதி  தாண்டி செல்ல புலால் உண்ணாதவர்க்கே அனுமதி என்றார்கள்.  அன்றே நினைத்தேன் புலால் உண்பதை நிறுத்தவேண்டுமென்று.  ஆனால் முடியவில்லை.


சில மாதங்களுக்கு முன் திருப்போரூர் சென்றிருந்தபோது,  வள்ளலார் அடிபற்றி வாழும் மகான் ஒருவரை அங்கு கண்டேன்.  அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வியே புலால் உண்பீர்களா என்பதுதான்.  அந்த நிமிடமே இனி புலால் உண்பதில்லை என்று முடிவெடுத்தேன்.  இறையருளால் இன்றுவரை உறுதியாக இருக்கிறேன்; இனியும் இருப்பேன் என்று நம்புகிறேன்.


வடலூர் பற்றியும், வள்ளலார் பற்றியும் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றை என் அரைகுறை நினைவிலிருந்து இங்கே பதிவு செய்கின்றேன்.  


வடலூரில் தைப்பூச ஜோதி கண்டேன் - அங்கே
வள்ளலார் ஏற்றிவைத்த நீதி கண்டேன்.


வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளல் கண்டேன்
தேடிய கருணை கண்டேன்
தெய்வத்தின் காட்சி கண்டேன் 
பாடிடும் அருட்பாவில் நெஞ்சமே உருகக் கண்டேன்
நாடிடும் அன்பர்க்கெல்லாம் நலமே பெருகக் கண்டேன்


ஏழுகால பூஜையிலே என்னையே நான் மறந்தேன்
ஏழுதிரை விலகிடவே இன்பமே நானறிந்தேன்.
சூழ வந்த வினைகளெல்லாம் ஓடுகின்ற மாயம் கண்டேன்
சுடர் விடும்  மெய்ப்பொருளாய் ஜோதிஎனும் தீபம் கண்டேன்.


குறைந்த பட்சம் இன்று முழுக்க யார் மீதும் கோபம் கொள்ளக்கூடாது, காழ்ப்புணர்ச்சிக்கு இடம் கொடுக்கக் கூடாது,  யாரையும் வெறுக்கக் கூடாது என்று எண்ணிக்கொண்டேன்.  ஆனால் காலையில் செய்தித்தாளை எடுத்ததும் அதற்குச் சோதனை வந்தது.  அரசியல்வாதியின் மகன் ஒருவன் அரசுப் பேருந்து ஊழியர் ஒருவரை அடித்ததாகவும்,  அதையடுத்து பேருந்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்ததாகவும் அதனால் மக்கள் அவதிக்குள்ளானதகவும்  செய்தி.  வள்ளலாரை நினைந்து  ஒருவாறு மனச் சமாதானம் செய்துகொண்டு,  ஆத்திரத்தை கைவிட்டேன்.   இன்று முழுவதும் இயன்றவரை அந்த மகானை, கருணையின் திருஉருவை,  நினைவில் கொண்டு செயல்படுவேன். 

கருத்துகள் இல்லை: