13 அக்., 2010

சூரியின் டைரி-41: சிற்றிதழ்கள்

சிற்றிதழ்களின்    அரிய இலக்கிய  சேவை  பற்றி  இந்தவலைப்பூவில்  ஏற்கனவே  பதிவு செய்துள்ளேன்.  தமிழ்மணியில்  கலாரசிகன்  அவர்கள்  'புதிய  ஆசிரியன்'  பற்றி  எழுதியதை  அப்படியே   பதிவு  செய்திருந்தேன்,  அவரது  கருத்துக்கள்  என்  உணர்வுகளை  அப்படியே  பிரதிபலிப்பதாக  இருந்ததால்.  சிற்றிதழ்கள்  பற்றி  நிறைய  எழுதலாம்.  என்னுடைய  சொந்த  அனுபவத்திலிருந்து  சிலவற்றை  இங்கே பதிவு செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.

காரைக்குடி  புத்தகத்  திருவிழா  நடத்துவதில்  முக்கிய  பொறுப்பு முதல் நான்கு  ஆண்டுகள்  என்வசம்  இருந்தது.  அந்தகால கட்டத்தில்  சிற்றிதழ்களுக்கென்று  ஒரு  கண்காட்சியோ  மாநாடோ நடத்த பெரிதும்  விரும்பினேன்.  ஆனால்  பல  தடைகள்,  சிரமங்கள்.  அப்போது  நண்பர்,  கவிஞர்  ஜனநேசன்  அவர்கள்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவின்  ஒரு  பகுதியாக  சிற்றிதழ்களின்  கண்காட்சியை  நடத்தலாம்  என்று  ஆலோசனை  கூறினார்.  அதன்படி  2005  ஆண்டு  காரைக்குடி  புத்தகத் திருவிழாவுடன்  சிற்றிதழ்  கண்காட்சியையும்  இணைந்து  நடத்தினோம்.  ஒன்பது நாட்கள் நடைபெற்ற  புத்தகத்  திருவிழாவின்  ஒவ்வொரு  நாளையும்  ஒவ்வொரு  சிறப்பு தினமாக நடத்தும் பழக்கத்தை  வைத்திருந்தோம்.  (ஆசிரியர் தினம்,  மாணவர் தினம்,  மகளிர் தினம்,  சாதனையாளர் தினம்,  அறிவியல் தினம்  என்று).  அந்த  ஆண்டு  ஒருநாளை  'சிற்றிதழ்  தினமாகக்'  கொண்டாடினோம்.

திரு  பொள்ளாச்சி  நசன்  அவர்களைத் தொடர்பு கொண்டு,  அவரை  அன்று  சிறப்பு விருந்தினராக  கலந்து கொள்ள  அழைத்திருந்தோம்.  அவரும்  இசைவு தெரிவித்து,  சிற்றிதழ்களின் முகவரிகளையும் கொடுத்து உதவினார்.  நாங்கள்  அந்த முகவரிகள் அனைத்திற்கும் அழைப்பு அனுப்பினோம்.  எதிர்பாராதவிதமாக  சிற்றிதழ்களின்  மாநாடு  அதே நாளில்  தமிழகத்தின்  வேறு  பகுதியில்  நடைபெற்றதால்  பலர் கலந்துகொள்ள முடியவில்லை.  திரு பொள்ளாச்சி  நசன்  அவர்களும் வரமுடியவில்லை.  இருப்பினும்  கிட்டத்தட்ட  முப்பதிற்கும்  மேற்பட்ட  சிற்றிதழ்கள்  அதில் கலந்துகொண்டன.  'திசை எட்டும்'  மொழிபெயர்ப்பு மாத இதழின்  ஆசிரியரான  திரு  குறிஞ்சி  வேலன்  அவர்கள்  அன்று  சிறப்பு  விருந்தினாராகக் கலந்துகொண்டு  மகிழ்வித்தார்கள்.   சிற்றிதழ் கண்காட்சி மிகச்  சிறப்பாக  அமைந்தது.  ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  அவற்றைப்  பற்றி  அறிந்துகொள்ளும்  வாய்ப்பும்  கிடைத்தது.  வந்திருந்த சிற்றிதழ்களின்  பிரதிநிதிகளும்  மகிழ்ச்சியையும்  நன்றிகளையும்  தெரிவித்து  விடைபெற்றனர்.  மறக்க முடியாத  ஒரு  அனுபவமாக  அது  அமைந்தது.  நண்பர் கவிஞர் ஜனநேசன் அவர்களுக்கும், உதவிய மற்ற அன்பர்களுக்கும், ஆர்வத்தோடு கலந்துகொண்ட சிற்றிதழ்களுக்கும்  எனது மிகத் தாமதமான  நன்றிகள்.  Better late than never!

நிறைய  சிற்றிதழ்கள் விற்பனையாகின.  என்  பங்கிற்கு  நானும்  சிறிது வாங்கினேன்.  பல  அன்பர்கள்  அன்பளிப்பாகத்  தங்கள்  சிற்றிதழ்களை  எனக்கு  பேரன்புடன்  வழங்கினர்.  அலுவலகத்திலும் சரி,  பொது வாழ்விலும்  சரி,  குடும்பத்திலும்  சரி,   குருவி  தலையில்  பனங்காய்  என்பதுபோல்  எனக்கு  நிறைய சுமைகள், பொறுப்புகள்;  பேராசையால்  அளவிற்கு மேல்  எடுத்துப்  போட்டுக்கொண்டு செயல்படும்போது, சிலவை  பின்னர்  பார்த்துக் கொள்ளலாம்  என்று  விடுபட்டுப்  போய்விடும்.  அப்படி  விடுபட்டுப்போன  ஒன்றுதான்  இந்தச்  சிற்றிதழ்களைப்  படித்து  அவர்களுக்கு  எனது  நன்றிகளையும்,  கருத்துக்களையும்  தெரிவித்துகொள்வதும்.  மேலும்  சில  இதழ்கள்  பார்த்த  மாத்திரத்திலேயே  என்னைப்  பெரிதும்  கவர்ந்தன.  அவைகளுக்கு  எனது  சந்தாவை  அனுப்பி  அவைகளுக்கு  ஆதரவு  தெரிவிப்பதுடன்,  அவற்றை  படித்து  இன்புறவும்  செய்யலாம்  என்று  நினைத்திருந்தேன்.  இன்றுவரை  அதில்  எதுவுமே  நடைபெறவில்லை.  ஆனால்  கலந்துகொண்ட  சிற்றிதழ்கள்  பல  நன்றிக்கடிதம்  எழுதின,  தங்கள்  இதழில்  காரைக்குடி  புத்தகத்  திருவிழாவைச்  சிலாகித்து, எனக்கு  நன்றி  கூறி  கருத்துக்களை  வெளியிட்டிருந்தனர். இத்தனை  ஆண்டுகளுக்குப்பின்  பெட்டி  பெட்டியாக  நான்  சேர்த்து  வைத்திருந்த  புத்தகக்  குவியல்களையும்,  இதழ்களையும்,  மற்ற  ஆவணங்களையும்  பிரித்தெடுக்கும்போது  அந்த  சிற்றிதழ்களில்  சில  வெளிவந்தன.  அவற்றை  பிரித்துப்  படிக்கும்போது  மனம்  கனத்தது,  நெஞ்சில் நெருஞ்சிகள்  உறுத்தின.  திருநாளைப்போவாராக வாழ்ந்திருக்கிறேன், எப்படிப்பட்ட  வாய்ப்புக்களை  இழந்திருக்கின்றேன்  என்று  வேதனைப்படுகிறேன்.  இருக்கட்டும்.  அந்த  இதழ்களில்  ஒன்றான  'காளான்'  என்ற  ஒரு  அற்புதமான  இதழ்  பற்றி  பின்வரும்  நாட்களில்  பதிவு  செய்யலாம்  என்று  எண்ணுகிறேன்.           

கருத்துகள் இல்லை: