26 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-5: அம்ருதா, நவீன கலை இலக்கிய சமூக மாத இதழ்


அம்ருதா, நவீன  கலை  இலக்கிய  சமூக  மாத  இதழ்,  ஆசிரியர் பிரபு திலக், கௌரவ ஆசிரியர் திலகவதி, இதழின் விலை ரூபாய் 25 /- 

அம்ருதா இதழை முதன்முதலில் நான் கோட்டையூர் நூலகத்தில் பார்த்தேன், படித்தேன்.  அதன்பின் புத்தகக் கடைக்குச் செல்லும்போதெல்லாம் கண்ணில்பட்டால் வாங்குவேன்.  அப்படித்தான் மே மாத இதழை வாங்கினேன்.  நிறையப் பேருக்கு இந்த இதழ் அறிமுகம் இருக்காதோ என்ற எண்ணத்தில் இங்கே என் வலைப்பூவில் அதைப் பற்றிப் பதிவு செய்கிறேன்.

தற்போது ஜூலை மாதம் முடியும் தருவாய்.  நானோ மே மாத இதழ் பற்றி எழுதுகிறேன்.  செய்திகள் பழசாகத்தான் இருக்கும்.  ஆனால் காலத்தால் பாதிக்கப் படாத விஷயங்கள் இருக்கின்றனவே!

முதலில் தலையங்கம் - இது ஆசிரியர் கடிதமாக வருகிறது.  "தேர்தலின் நாயகன்" என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரையும், தேர்தல் கமிஷனையும் பாராட்டி.

அடுத்து, செ.சண்முகசுந்தரத்தின்  "சிந்தனையில் சுட்ட வடு" - "மகிந்தவை வெல்லப்போகும் நீதி" - புள்ளி விவரங்களுடன் நெஞ்சைக் கனக்க வைக்கும் கட்டுரை.  இதிலிருந்து: "போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா எப்படி இலங்கையைக் காப்பாற்றியது என்ற ஆவணம் இந்துப் பத்திரிகை கட்டுரையாக மேஜையில் கிடக்கிறது." 

அடுத்து, பா.செயப்பிரகாசத்தின் கச்சத்தீவு பயணம், "செங்கடல் சாட்சியாகி".  கச்சத் தீவு எப்படி இல்லங்கை கைக்குப் போனது போன்ற பல தகவல்கள்.

திலகபாமாவின் "கழுவேற்றப்பட்ட மீன்கள்" என்ற நாவலைப் பற்றி மேலாண்மை பொன்னுச்சாமியின் விமர்சனம்.

விஞ்ஞானம் பகுதியில் கார்ல் பிரடெரிக் கவுஸ் என்கிற கணித மேதையைப் பற்றிய பத்ரி சேஷாத்திரியின் கட்டுரை.

விக்கிரமாதித்யன் கவிதைகள் இரண்டு.

சு.வேணுகோபாலின் சிறுகதை, "முதற் காய்ப்பு".

தமிழ்நதியின் "எழுத்தும் வாசிப்பும்".  இதில் நைஜீரியப் பாடகர் பீலா அணிக்குலபோ குட்டி, ஜமைக்காவின் இசை மேதை பாப் மார்லி, அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் ராப்சன், ஈழத்திலிருந்து குடிபெயர்ந்து, பிரிட்டனில் வாழும் பாடகி மாயா அருட்பிரகாசம் ஆகிய உண்மைக்காகப் போராடிய கலைஞர்கள் பற்றிய எழுச்சியூட்டும், சிறப்பான கட்டுரை.

"முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள்" தொடரில் கியூபாவின்            ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய மருதனின் அற்புதமான கட்டுரை.  அதிலிருந்து: 
         
"கொலம்பஸ் முதல் முதலாக கியூபாவில் காலடி எடுத்துவைத்தபோது  கியூபா ஒரு ரம்மியமான கனவுப் பிரதேசமாக அவருக்குக் காட்சியளித்தது.  ஓங்கி வளர்ந்த மரங்கள்; இனிமையாக இசைக்கும் குயில்கள்; பூத்துக் குலுங்கும் மலர்கள்; மழைப் பிரதேசங்கள்; இதுவரை இப்படி ஒரு அழகை அவர் தரிசித்தது கிடையாது.  தான் மட்டுமல்ல, இந்த உலகமே இப்படி ஓர் அழகிய பகுதியை இதுவரை கண்டிருக்க முடியாது என்று அவர் நம்பினார்.  நிச்சயம் இது ஓர் அதிசயத் தீவாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார்.  கியூபாவின் ஒவ்வோர் பகுதியையும் சுற்றிச்சுற்றி வந்து கண்களை விரித்து அதிசயித்தார்.  இது நடந்தது அக்டோபர் 28, 1492-ஆம் ஆண்டில்.
.....
... கரும்புகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் கியூபர்களின் வாழ்வு இனிமையானதாக இல்லை.  வறுமை வாட்டியது. பெரும்பாலானவர்களுக்கு காலை ஆகாரம், மதிய ஆகாரம் இரண்டுமே கரும்புச்சாராக அமைந்து விடுவதுண்டு.
....
...கியூபாவில் மட்டும் இந்நிறுவனம் (அமெரிக்காவின் யுனைடட் ஃ ப்ரூட் கம்பெனி) இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர் நீர் வளமுடைய நிலப் பரப்பை கையகப் படுத்திக்கொண்டது.  ஆனால், அவர்களது கொள்முதல் விலை மிகவும் குறைவு.  ஒரு ஏக்கர் வெறும் மூன்று டாலர் மட்டுமே.  கிட்டத்தட்ட பகல் கொள்ளை.  இது 1890-களில் இருந்த நிலை.
...
 யுனைடட் ஃ ப்ரூட் நிறுவனத்தைத் தவிர கியூபாவில் அரசாங்கம் என்று ஒன்று செயல்படுகிறதா என்றே யாருக்கும் தெரியவில்லை.  பள்ளிக்கூடங்கள் கிடையாது. சாலைகள் கிடையாது. மருத்துவமனைகள் கிடையாது.  வேலை வாய்ப்பு வசதிகள் கிடையாது.  ஆனால், பலமான ராணுவம் மட்டும் உண்டு.  எல்லாமே கரும்புகளுக்காகத்தான்.  கரும்புகள் மட்டும் இல்லையென்றால் கியூபாவின் சரித்திரத்தை முதல் பக்கத்திலிருந்து மீண்டும் மாற்றி எழுதவேண்டிவரும்.....
...
காலனி இல்லாமல்  குழந்தைகள் நடந்துபோவதைக் கண்டபோது ஃ பிடல் காஸ்ட்ரோவுக்கு கோபமும், துக்கமும் பீறிட்டது.  அப்போதுதான் உயர்கல்வி முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தார்.  தோட்டங்களிலும், வயல்களிலும், முரட்டுப்பாதைகளிலும் எப்படி இவர்கள் நடந்துபோகிறார்கள்? ஒரு சதை செருப்பு வாங்கக்கூட இவர்களிடம் காசில்லையே?  இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கொடுமை?  எந்த நோய் வந்தாலும் முதலில் இவர்களைத்தானே தாக்குகிறது?  வியாதிகளின் இருப்பிடமாக இவர்கள் மாறிப்போவதை ஏன் யாராலும் தடுக்க முடியவில்லை?  அவர்களோடு சேர்ந்து விளையாடும்போதும், கதை பேசும்போதும் திடீர் திடீரென்று இப்படி ஏதாவது கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கும்....
----
தீபச் செல்வனின் "உறங்காத நிலம்" என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அடுத்து பாவண்ணனின், "பனிக்கட்டியாகக் கரையும் பாரங்கள்".  மதுமிதா தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள, "இரவு: இருள் வெளியில் எழுத்தும், அனுபவமும்" நூல் பற்றியது.  அதிலிருந்து:

முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளிடமிருந்து மறக்க முடியாத இரவுகளின் அனுபவத்தை எழுதி வாங்கி, மதுமிதா நூலாகத் தொகுத்துள்ளார்.  அந்த அன்பவங்களின் தொகுப்பை ஒருசேரப் படிக்கும் நேரத்தில் பலவிதமான வாழ்க்கையை ஒரே நேரத்தில் நாமே வாழ்ந்தது போன்ற உணர்வைத் தருகிறது.  பார்ப்பதற்கு நமக்கு பலஜோடிக் கண்கள் கிடைத்தது போன்ற பரவசம் எழுகிறது.  இந்த உலகத்தில் அறிந்துகொள்வதற்கு கணக்கற்ற விஷயங்கள் இருக்கும்போது, நாம் நம்மை வாட்டியெடுக்கும் ஒற்றை விஷயத்திலேயே ஆழ்ந்து, மனம் சோர்ந்து, மீலாது கிடக்கும் உண்மையை உணர்த்துகிறது.  இந்த அனுபவம் ஒருவகையில் நம்மை மீட்டெடுக்கும் வெளிச்சம் நம் பாரத்தை பனிக்கட்டியாக்கிக் கரைத்துவிடும் ஆற்றல் கொண்ட வெளிச்சம்.

"படிக்க பாதுகாக்க" பகுதியில் என் கவனத்தை ஈர்த்தது:

கல்குதிரை; ஆசிரியர்: கோணங்கி; பக்கங்கள் 280; விலை ரூ.190;   வெளியீடு: கோணங்கி, 6 /1700  இந்திரா நகர், கோவில்பட்டி 628502. 
தமிழ் சிற்றிதழ்கள் வரலாற்றில் இடம் பெறக்கூடிய மிக முக்கியமான பத்திரிகைகளில் ஒன்று கல்குதிரை.  இப்பொழுது, வேனிற் காலங்களின் இதழாக வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கல்குதிரையைக் கொண்டு வருகிறார் கோணங்கி.  இது இந்த வருடத்துக்கான இதழ்.  புதிய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகள், சமகால உலக இலக்கிய மொழிபெர்யர்ப்புகள், எழுத்தாளர்கள் நேர்காணல்கள் என படிக்க நிறைய இருக்கிறது.



ஒரு அருமையான, சிறப்பான, பல்சுவை மாத இதழ்.  பெரிதும் வரவேற்கத்தக்கது.  (அம்ருதா சிறந்த பல நூல்களையும் வெளியிடுகிறது. அதில் "முத்துக்கள் பத்து" என்ற தலைப்பில் தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகள் தொடர்ந்து புத்தகங்களாக வந்து கொண்டிருக்கின்றன.  தம்பி நெல்லையப்பன் அவற்றைத் வாங்கிச் சேர்த்து வருகிறான். திருப்போரூர் சென்றிருந்தபோது  அவனிடமிருந்து சிலவற்றை மட்டும் நான் வாங்கிப் படிக்க முடிந்தது.)  

நன்றி:  "அம்ருதா"

கருத்துகள் இல்லை: