24 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011

மனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011
------------------------------------------------------------------------------------

இதற்கடுத்த இதழ் ஏற்கனவே வெளியாகிவிட்டது. நான் இன்னும் இந்த இதழைப் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்தபாடில்லை. ஆனந்த விகடன் போல் நான் வாரம் தவறாமல் வாங்கும் இதழ் இது.

இந்த இதழின் அட்டைப்படக் கட்டுரை, "பந்தாடப்படும் பள்ளிக்கல்வி". ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தோடு அரசியல்வாதிகள் விளையாடும் பொறுப்பற்ற, கேவலமான, ஈகோ விளையாட்டு. வேதனை! இரண்டு மாதம் ஏற்கனவே வீணாகி விட்டது, விரைவில் முடிவுக்கு வந்தால் சரி.

தலையங்கம்: ஊக்க மருந்தினால் அவமானப்பட்டு, மனம் உடைந்து நிற்கும் நம் விளையாட்டு வீரர்களும், இந்தத் தலைகுனிவிற்குக் காரணமான பயிற்சியாளர்களைப் பற்றியும். இந்தக் குளறுபடிக்கேல்லாம் முடிவேது?

எரிபொருள் சேமிப்பு பற்றிய கலந்துரையாடல். ஏனோ மிகவும் மேலோட்டமாக, உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது. இது குறித்து என்னுடைய கருத்துக்கள்:

1. தேவையில்லாமல் சோம்பேறித்தனத்தாலும், பழக்கத்தாலும் எதற்கெடுத்தாலும் வாகனங்களைப் பயன்படுத்துவது. என்னிடமும் இந்தக் கெட்ட பழக்கம் இருக்கிறது. மாலை நேரம் காற்று வாங்கிக் கொண்டு, நடந்து கோவிலுக்குச் செல்லலாம். அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது. ஆனால் பெரும்பாலும் டூ வீலரிலேயே செல்கிறேன். நடக்கும் பழக்கத்தை பாப்புலரைஸ் செய்யவேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2. ஒரு காலத்தில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருந்தாலும் சைக்கிளில்தான் செல்வேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாகிறது சைக்கிள் ஒட்டி! தொடர்ந்து சைக்கிள் ஒட்டி இருந்தால் எனக்கு சர்க்கரை வியாதியும், கொலஸ்ட்ரால் பிரச்சினையும் வந்திருக்காதோ என்னவோ. மேலை நாடுகளில் சைக்கிள் சவாரி இயக்கங்கள் செயல்படுகின்றன. அதுபோல் இந்தியாவிலும் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் இயக்கங்கள் வேண்டும். அரசு தன் பங்குக்கு சைக்கிள்கள் மீதான சகல வரிகளையும் நீக்கலாம். சைக்கிள்களுக்கென சாலையின் தனி 'லேன்' தரலாம்.

3. பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு இரட்டை விலை முறை. பேருந்து, லாரி போன்ற போது வாகனங்களுக்கு குறைந்த விலையிலும், தனியார் வாகனங்களுக்கு 'ரேஷன்' முறையிலும் வழங்கலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேவைப்பட்டால், இரட்டிப்பு விலை கொடுத்து ஒப்பன் மார்க்கெட்டில் வாங்கும்படி இருக்க வேண்டும்.

4. அமெரிக்காவில் நிக்சன் அதிபராயிருந்த போது, முயன்ற, பெட்ரோல் பங்குகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை (ஞாயிறு) அளிக்கலாம்.

5. எரிபொருளைக் கபளீகரம் செய்யும் (Gas Guzzlers) சொகுசு வாகனங்களுக்கு கடுமையான வரி, எரிபொருள் வரி, என்று தனியாக விதிக்கலாம். அது தவிர, அவற்றுக்கான வருடாந்திர சாலை வரிகளும் கடுமையாக இருக்க வேண்டும்.

6. மாற்று எரிபொருள் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இக்கட்டுரையில் பயோடீசல் பற்றியும், காட்டாமணக்கு பயிரிட்டுப் பின்னர் நிறுத்தியதைப் பற்றியும், குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து ரயில்வேயில் ஓடும் டீசல் கோச்களுக்கு (திருச்சி-மானாமதுரை, திருச்சி-காரைக்குடி, திருச்சி-லால்குடி போன்ற பல இடங்களுக்கும்) பயோடீசல் மட்டுமே எரிபொருள். காட்டாமணக்கைப் பயன்படுத்துவதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வு காணவேண்டுமே தவிர பயிரிடுவதை நிறுத்தக்கூடாது. நம் ஊர்களில் தரிசு நிலங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் பயோடீசல் தயாரிக்க உதவும், எளிதில் பயிரிடக் கூடிய தாவரங்களைப் பயிரிட ஊக்குவிக்கலாம். அவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பயிரிடுவோருக்கு எந்தச சிரமும் இல்லாமல், தேடி அவர்கள் இடம் சென்று, கொள்முதல் செய்ய வகை செய்யவேண்டும்.

7. பேட்டரி வாகனங்களை ஊக்குவித்தல். ஆரம்பத்தில் எல்லாப் புது முயற்சிகளிலும் பிரச்சினைகள் மலைபோல் தோன்றத்தான் செய்யும். முதலீடு, பராமரிப்புச் செலவு அதிகம் இருக்கத்தான் செய்யும். நவீன ஆராய்ச்சிகள் மூலம் இப்பிரச்சினைகளைக்குத் தீர்வு காணவேண்டும். பின்னர், எல்லாமே எளிதாகிவிடும். இதில் இன்னொரு நல்ல விஷயம், சுற்றுச் சூழல் மாசடைவது குறையும். பழைய பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யமுடியும்; அப்படிச் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கிறது. பயன்பாடு அதிகமாகும்போது, இவ்வசதி பரவலாக எல்லா இடங்களுக்கும் வந்துவிடும்.

8. உலகெங்கும் எரிபொருள் சிக்கனத்திற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவற்றை நாமும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது உலகளாவிய பிரச்சினை. நிச்சயமாக புதிய, புதிய சிந்தனைகள், வழிமுறைகள் இருக்கத்தான் செய்யும்.

இதுபோல் என்னால் நிறைய சொல்லமுடியும். கால அவகாசம் வேண்டும். சிந்தித்து புதிய கருத்துக்களை பின்னர் பதிவு செய்கிறேன்.

அடுத்து, "என் பள்ளி" - பிரபலங்கள் எழுதும் தொடர். முதல் கட்டுரை கவிஞர் வைரமுத்துவுடையது. வைரமுத்துவின் தமிழுக்கு மயங்காதோர் யார்?

அடுத்து, "அள்ளி வழங்கும் நெல்லி". இதிலிருந்து: நீர் கலக்காத நேரடியாக எடுக்கப்பட்ட நெல்லிச்சாறு அமுதம் போன்றது. ஒரு மேசைக்கரண்டி அளவுக்கு அருந்தினால்கூட கீழ்க்கண்டவற்றை சப்பிட்டதற்குச் சமம்:

ஒரு கிலோ அன்னாசி (அல்லது)
இரண்டு கிலோ கொய்யா (அல்லது)
ஒன்பதரைக் கிலோ ஆரஞ்சு (அல்லது)
பதினெட்டு கிலோ திராட்சை (அல்லது)
ஐம்பத்திரண்டு கிலோ வாழைப்பழம் (அல்லது)
நூற்றிரண்டு கிலோ ஆப்பிள் (அல்லது)
நூற்றைம்பது கப் பால்.

நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் தொடர் - மனிதர், தேவர், நரகர். அவரது சினிமா அனுபவம் சுவையாய் இருந்தது.

சென்ற வாரம் பகுதியில், தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு, டெஸ்ட் கிரிக்கட்டில் நானூறு விக்கட் எடுத்து ஹர்பச்சனின் சாதனை, தெற்கு சூடன் என்ற புதிய நாடு உதயம், மும்பையில் கனமழை போன்ற பல தகவல்கள்.

வரும்வாரம் பகுதியில் நெல்சன் மண்டேலா பற்றிய குறுங்கட்டுரை. தன் நாட்டின் விடுதலைக்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் கழித்த ஆப்பிரிக்க மகாத்மா. தற்போது அவருக்கு வயது தொன்னுற்றுமூன்று! 2004 ஜூலை பதினாறு, கும்பகோணம் பள்ளியில் தொன்னுற்றுமூன்று சிறார்களை தீ பலிகொண்ட நாள். எனக்குத் தெரிந்து காரணமான குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்ப் பட்டதாகத் தெரியவில்லை என்பது வேதனையான விஷயம்.

தமிழ் வார இதழ்களில் தனெக்கென ஒரு சிறப்பான, வித்தியாசமான வழியமைத்து, பாராட்டத்தக்க பல அம்சங்களுடன் வெற்றிநடை போடுவது மகிழ்ச்சியான விஷயம். மனமார்ந்த பாராட்டுக்கள். 

நன்றி: "புதிய தலைமுறை"

கருத்துகள் இல்லை: