29 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-6: புதிய பார்வை, சமகாலத்தின் முகம், மாதமிருமுறை, மே 1-15 , 2011


இதன் ஆசிரியர் ம.நடராசன் (திருமதி சசிகலாவின் கணவர்).  இந்த இதழிலிருந்து எனக்குப் பிடித்த சில மட்டும்: 

"நலம் நலமறிய ஆவல்" பகுதியில் "கோடைக்கேற்ற மாதுளை".  அதிலிருந்து:

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.  உடல் குளிர்ச்சி அடையும். கோடை காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு மாதுளம்பழம் மருந்தாக அமையும்.  மாதுளம்பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்திற்குப்பின் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி ஒரு மாத காலம் உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும்.  புதிய ரத்தம் உற்பத்தியாகும்.  மாதுலம்பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு வேலைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

அடுத்து, "சமூகத் தொண்டே ஆன்மிகம்" - நிறைய புள்ளிவிவரங்களுடன் சாய் பாபா பற்றிய கட்டுரை.  அதிலிருந்து:

... அவரின் (சாய் பாபாவின்) சமூகத் தொண்டு:

ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.இரு நூறு கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது.  அம்மாவட்டத்திலுள்ள ஐம்பது லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர்.  இத்திட்டம் ஒன்பது மாதங்களில் முடிக்கப்பட்டது.  2500 கிலோமீட்டர்   தூர குழாய்கள், 268 தண்ணீர்த் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள்,  200 நீரேற்று நிலையங்கள் ஆகியன எழுநூறு கிராமங்களுக்கும், பதினோரு நகரங்களும் பயனளிக்கின்றன.

சத்யசாய் அமைப்பு ஏராளமான  இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள்  மற்றும்  மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது.  உலகளவில் 114 நாடுகளில்  1200 சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம்  கொண்டுவர பெரும் நிதியுதவி வழங்கினார்....ரூ.200 கோடி செலவில் சாய்பாபா அறக்கட்டளை கால்வாயை சீரமைத்ததன் காரணமாக சென்னைக்கு கண்டலேறு நீர் கிடைத்தது.
 
சாய்பாபா தனது பக்தர்களுக்காக பலதரப்பட்ட சமூக சேவை நிறுவங்களை தன பார்வையிலேயே நேர்மை நடத்தினார்.  இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் அவை இயங்கி வருகின்றன.
 
பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக 'விருத்தாஸ்ரமம்' ... கட்டப்பட்டுள்ளது.  இங்கு முதியவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோன்று சத்யசாய் இன்ஸ்டியூட்  ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மொத்தம் ஐம்பத்திரண்டு ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு 333 படுக்கைகள்,   பன்னிரண்டு அறுவை சிகிச்சைக்கூடங்கள், ரத்த வங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

நாட்டில் இயற்கைப் பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர். 
 
இந்தியாவில் 2500 சாய் சமிதிகள், 5700 பஜனை மண்டலிகள்,  16000 பாலவிகாஸ் அமைப்புகள், 60000 மகளிரைக்கொண்ட சேவாதள கிளை அமைப்பு, 75000 உறுப்பினர்களுடன் சாய் இளைஞர் அணியும் செயல்பட்டு வருகின்றன.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியில், 25 கிராமங்களில், ஸ்ரீசத்யசாய் குடிநீர்த் திட்டம் என்கிற மற்றொரு திட்டம் கடந்த 20.1.2008-ல்  தொடங்கப்பட்டது.  

இந்தியா முழுவதும் 2100 கிராமங்களை தத்தெடுத்து சேவைப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.  சத்யசாய் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 13000 கிராமங்களில்  மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மத்தியப் பிரதேசத்தில் 34000 கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திரத்தில் கிழக்கு கோதாவரி மாவட்ட காடுகளில் சோதனை வேளாண் பண்ணைகள் சாய் பக்தர்களாக உள்ள விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தொண்ணூறு வீடுகளில் விளக்கு எரியவும்,  கையினால் இயக்கப்படும் அரிசி இயந்திரங்களை இயக்கவும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

வங்கத்திலும், ஒரிசாவிலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தண்ணீர் சுத்திகரிப்பு, இயற்கை முறை விவசாயம், சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட பணிகளிலும் ஸ்ரீ சத்யசாய் சேவை நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

புட்டபர்த்தியில் அமைந்துள்ள சத்யசாய் பல்கலைக்கழகத்தின் துணை வளாகங்கள் ஆனந்தபூரிலும், பெங்களூரிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் அவரது சமூகப் பணிகளில் ஒரு சிறு துளிதான்.

அடுத்து "நோட்டீஸ் போர்டு"  பகுதியில் சமூக சேவகர் பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மனித உரிமைக்கான உயரிய விருதான 'குவாங்க்ஜூ" விருது வழங்கப்படுவது பற்றி:  ".... அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதால் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தென் கொரியா அறிவித்துள்ளது...."

 "உலகப் புகழ் பெற்ற நூல்" வரிசையில் இருபதாவது நூலாக சார்லஸ் டிக்கென்சின்    "டேவிட் காப்பர் ஃ பீல்ட்".

"ஹாட் டாபிக்"  பகுதியில் "மிதவை விவசாயம்", "வரப்பே இல்லாத விவசாயம்" பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.

"பூமணியின் படைப்புலகம்" பற்றி ஜெயமோகனின் கட்டுரை. "தமிழின் இயல்புவாத இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர் பூமணி.  அவரது 'பிறகு', 'வெக்கை' ஆகிய நாவல்களும், 'ரீதி' என்ற சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானவை. ... பூமணி திரைப்படம் பக்கமாகச் சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. ... அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது, தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும், சீக்கிரமே மீண்டும் தன இலக்கியப் பிரவேசம் அமையும் என்றும் சொன்னார்...."

அடுத்து, இளம்பிறை அவர்களின் "பெருங்கடல் இரான்.. சில துளிகள்". கவிஞர் மதுமிதா தொகுத்துள்ள, 'இரவு - இருள் வெளியில் எழுத்தும், அனுபவமும்' நூலிலிருந்து. 

"இதைப் படிங்க முதல்ல..." பகுதியிலிருந்து ஜப்பானில் பாதிக்கப்பட்ட அணு உலையைச் சுற்றி உலோகக் கோட்டை அமைப்பது பற்றிய தகவல். "... பாதித்த அணு உலையில் இருந்து 120 மீட்டர்   அகலத்துக்கு இந்தக் கோட்டை கட்டப்படுகிறது. இருபுறமும் உலோகத் தகடுகள் பதித்து, இடையில் கதிர்வீச்சை தடுக்கக்கூடிய ரசாயனப் பொருட்களினால் ஆனா கோட்டை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணி பத்து ஆண்டுகளில் முடிவடைய உள்ளது.  அதற்கான பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர்."

"இதனால் சகலமானவர்களுக்கும்" பகுதியிலிருந்து:

முதல் உலகப் போரினால் ஏற்பட்ட இழப்பீடு - ஒரு கோடி மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு கோடிக்கு மேல் மக்கள் ஊனமுற்றனர்.  யுத்தத்திற்கான செலவு 360 கோடி டாலர்கள்.

இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட இழப்பீடு ஐந்து கோடி மக்கள் கொல்லப்பட்டனர். யுத்தத்திற்கான செலவு 4000 கோடி டாலர்கள். 

ஒரு ராணுவ டாங்கியை தயாரிப்பதற்கு உண்டாகும் செலவில் 30,000 பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைக் கட்ட முடியும்.

ஒரு போர் விமானம் தயாரிப்பதற்கு உண்டான செலவில் 40,000 மருத்துவமனைகள் கட்டலாம்.   

ஒரு பட்டுப்புடவை தயாரிக்க 8000 பட்டுப்புழுக்கள் சாகடிக்கப்படுகின்றன.

நமது கால்கள் ஒவ்வொன்றிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன. 

ஒரு மனிதன் தன சராசரி வாழ்க்கையில் நடக்கும் தூரம் ஒரு லட்சம் மைல்கள்.

உப்பிலியப்பன் கோயில் பற்றிய தம்பி கார்த்திகேயாவின் கட்டுரை.

இப்படிப் பல சுவையான அம்சங்கள். 

நன்றி: திரு ம.நடராசன் மற்றும் "புதிய பார்வை"

கருத்துகள் இல்லை: