19 செப்., 2011

சூரியின் டைரி-51: மேலூரில் சந்திப்போம்

(இடமிருந்து வலம் - நிற்பது) தம்பிகள்: நெல்லை, சந்துரு, விசு, சோமாஸ்.
(அமர்ந்திருப்பது - நான், அம்மா, அப்பா,  சித்தப்பா) 

நேற்று காலை சீக்கிரமே எழுந்து உற்சாகத்துடன் திருப்போரூர் புறப்பட்டேன்.  தம்பிமார் நெல்லையப்பனையும், விசுவையும் சந்திக்கப் போகிறோம், அவர்களுடன் நாள் முழுவதையும் கழிக்கப்போகிறோம் என்று ஒரே குஷி.  நாங்கள் மூவரும் சேர்ந்தால் ஒரே அரட்டையும், கும்மாளமும், சிரிப்பும்தான்.  அதிலும் வீட்டார் யாருமின்றி மூவரும் தனியே என்றால் கேட்கவே வேண்டாம்.

நெல்லையின் வீட்டை நோக்கி நடந்தேன்.  எதிரிலேயே நெல்லையும், விசுவும் வர அப்படியே காலாற நடந்தோம்.  திருப்போரூர் அருள்மிகு கந்தசாமி கோவிலில் ஒரே கூட்டம்.  புரட்டாசி மாதப் பிறப்பு என்பதாலேயோ என்னவோ. அருகில் ஒரு சிறிய மெஸ்.  அங்கே இட்லியும், கல்தோசையும் ருசித்துச் சாப்பிட்டுவிட்டு வீடு சென்றோம்.  பேசிக்கொண்டே இருந்தோம்.  இடையிடையே கொறித்தல் வேறு.  அப்புறம் நான் தகவிறக்கம் செய்து, குறுந்தகட்டில் சேமித்து  வைத்திருந்த, நெல்லை விரும்பிவாசிக்கக் கூடிய பல சேதிகளை, அவன் கணினியில் பதிவு செய்தேன்.

 மதிய உணவை முடித்துவிட்டு, அரட்டை அடித்துக் கொண்டிருந்தபோது, அந்த செய்தி வந்தது.  திருச்சியில் எங்கள் அன்பிற்குரிய சித்தப்பா, என் தந்தையாரின் ஒரே தம்பி, காலமானார் என்பது.  சில நாட்களுக்கு முன் அவரது மகன், திருச்சி விசு, நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொலைபேசியில் பேசினான்.  அப்போது அவன் சித்தப்பா முடியாமல் இருப்பதாகவும், என்னை பார்க்க வேண்டும் என்று என் பெயரை அடிக்கடி சொல்வதாகவும் கூறினான்.  இருபத்து மூன்றாம் தேதி நான் திருச்சி வழியே ஊர் திரும்ப டிக்கட் பதிவு செய்திருந்தேன்.  அவனிடம் அதைக் கூறி அன்று மதியம் சித்தப்பாவைப் பார்க்கலாம் என்று கூறியிருந்தேன்.  அதற்குள் இப்படி ஆகும் என்று எண்ணியிருக்கவில்லை.  மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. கடந்த ஆறுமாத காலமாகவே அவரைப் பார்க்க வேண்டும் என்று நாட்களைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்துவிட்டேன்.  வாழ்க்கையில் இதுபோல் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று பலமுறை பல முக்கியமானவற்றை கோட்டை விட்டிருக்கிறேன் என்பதை நினைக்கையில் வேதனையாக இருக்கிறது. 

என் மேல் மிகவும் அன்பு செலுத்திய, என்னைப் பற்றி உயர்வாக எண்ணிய ஓரிரு ஜீவன்களில் ஒன்று மறைந்துவிட்டது.  என்னால் அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது, அவரது கடைசி ஆசையைக்கூட பூர்த்தி செய்யமுடியாமல் போய்விட்டது. அடுத்து உடனே திருச்சி சென்று, அவரது உடலையாவது பார்க்க சந்தர்ப்ப சூழ்நிலை சரியாக இல்லை.  தற்செயலாக எனது கைபேசியைப் பார்த்தபோதுதான் தெரிந்தது திருச்சி விசு அன்று காலை எட்டு மணி அளவில் சித்தப்பா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். 

நாங்கள் மூவருமே திருச்சி செல்லும் நிலையில் இல்லை.  தம்பி திருச்சி விசு தொலைபேசியில் பேசியபோது, அதை வருத்தத்துடன் அவனிடம் தெரிவித்துவிட்டு, மூவரும் கருமாதியில் கலந்துகொள்கிறோம் என்று கூறினோம்.  நல்லவேளை, என் தங்கை காந்திமதி உடனே திருச்சிக்குப் புறப்பட்டுச் சென்று விட்டாள் என்ற சேதி கிடைத்தது.  எங்கள் குடும்பத்தின் சார்பில் ஒருவராது கலந்துகொள்ள முடிந்ததே என்று ஆறுதலாக இருந்தது.

நேற்றிரவு அவரைப் பற்றிய நினைவுகள் மனதில் ஓடின.  அவருடன் நான் அதிக நாட்கள் கழித்தது என்னுடைய பதினோராம் வகுப்பு கோடை விடுமுறையில்தான்.  கிட்டத்தட்ட ஒரு மாதம் அவருடன் இருந்தேன்.  இருவரும் சினிமா பார்ப்பது, தினமும் ஒரு ஹோட்டலில் சாப்பிடுவது, ஊர் சுற்றுவது  என்று ஒரே ஜாலியாக பொழுதைக் கழித்தோம்.  இத்தனைக்கும் அவர் அப்போது பணச்சிக்கல்களில் மாட்டியிருந்தார்.  எனக்காக கடன் வாங்கியாவது, என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினார்.  அன்றைய நாளில் அதன் தாக்கம் எனக்கு முழுமையாகப் புரிந்திருக்கவில்லை.  சித்தப்பா என்பதைவிட அவர் ஒரு இனிய நண்பராகவே இருந்தார்.  அதன்பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக அவரைப் பார்ப்பது குறைந்தது.

சென்ற ஆண்டு நெல்லை, விசு மற்றும் நான் அவரை திருச்சி ரயில் நிலையத்திற்கு அழைத்து வரச் செய்தோம்.  சித்தப்பா, என் அப்பா எல்லோருமே முன்னாள் இரயில்வே ஊழியர்கள். தம்பி திருச்சி விசு தற்போது ரயில்வே ஊழியன். அதனாலோ என்னவோ எங்களுக்கு ரயில்கள், ரயில் நிலையங்கள் மீது ஒரு ஒட்டுறவு இன்றும் இருக்கிறது.   அவர்கள் வீடு ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்ததால் சிரமமில்லாமல் அவர் ரயில் நிலையத்திற்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் எங்களுடன் மகிழ்ச்சியுடன் கழித்தார். அப்போது நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம்.  அவற்றில் சிலவற்றை எங்கே பதிவு செய்கிறேன்.        

மேலும் என் தந்தையாரின் அறுபதாவது பிறந்த நாளை மிக, மிக எளிமையாக (அடுத்த வீட்டுக்காரருக்கே தெரியாத அளவு) ஓசூரில்  நடத்தினோம்.  (அப்போது என் தந்தையார் என் பெரிய தம்பி, சோமாசுடன் ஓசூரில் இருந்தார்).  அந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட ஒரே உறவினர் சித்தப்பாதான்.  அப்போது ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்ட படத்தையும் இங்கே பதிவு செய்கிறேன்.

இனி அவரை எப்போது சந்திக்கப் போகிறேன்? எனக்கு தற்போது அறுபத்து இரண்டு வயது.  உடல் முழுக்க நோய்கள்.  இன்னும் எனக்கு எவ்வளவு நாட்கள் இருக்கிறது என்று தெரியவில்லை.  எப்படியிருந்தாலும் அதிகமாய் இருக்க வாய்ப்பில்லை.  "மேலூரில் சந்திப்போம், சித்தப்பா" என்று மனதிற்குள் கூறிக்கொண்டேன். அவர்களது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.   

கருத்துகள் இல்லை: