17 நவ., 2011

சூரியின் டைரி-53: மானாமதுரை

மானாமதுரை  இரயில்  நிலையத்தின்  புதிய  முகப்பு 


முதல் பிளாட்பாரத்தில் மழை கொட்டுகிறது 

முதல் பிளாட்பாரத்தின் கடைசியில்தான் 
டிக்கட் பரிசோதகர்களின் அறை  



தம்பிமார் பயின்ற 
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி 


வைகை மேம்பாலத்திலிருந்து ஊருக்குள் நுழையாமல்  பைபாஸ் சாலை வழியே புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதை - அண்ணா சிலை 

புதர்தான் என்றாலும் வைகைக் கரையில் ஒரு அழகிய காட்சி 


வைகை ரயில் பாலமும், 
எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடக்கும் புதரும் 


வைகை சாலைப் பாலத்திலிருந்து ஒரு காட்சி 



மானாமதுரை கீழ்கரை - ஒரு காட்சி 


அருள்மிகு பூர்ண சக்ர  விநாயகர் கோவில்



அருள்மிகு  ஆதிபராசக்தி  திருக்கோவில்  


அருள்மிகு சாஸ்தா ஆலயம் 



மானாமதுரையின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் திருக்கோவில் - வைகை ஆற்றங்கரையில் 



வைகை ஆற்றுத் தரைப்பாலம் - பெரும்பாலும் ஆற்றில் தண்ணீர் இல்லாதபடியால் இப்பாலம் வழியே எளிதில் அக்கறை செல்லலாம் 

வைகை சாலைப்பாலத்தில் வாகனங்கள் செல்கின்றன 


எனது பள்ளி இறுதித் தேர்வு முடியவும், இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தைக்கு திருநெல்வேலியிலிருந்து, மானாமதுரைக்கு மாற்றலாகவும் சரியாக இருந்தது.  நான் விடுமுறையில் திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்தேன்.  வீடு மாற்றியதே எனக்குப் பின்னர்தான் தெரியும்.   1965  ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்.  ஒருநாள் அப்பாவிடமிருந்து ஒற்றைவரிக் கடிதம் வந்தது. இரவு ராமேஸ்வரம் பாசெஞ்சரில் அவருடன் நான் மானாமதுரை   செல்லவேண்டும். இதுபோன்ற ஒற்றைவரிக் கடிதம் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாக்கியது. எனக்கு சித்தப்பாவைவிட்டு பிரிந்து செல்ல விருப்பமில்லை; சித்தப்பாவிற்கும் என்னை அனுப்ப மனமில்லை. இருப்பினும் வேறு வழியின்றி திருச்சி இரயில் நிலையம் சென்றோம். சித்தப்பா என்னிடம் சொன்னார்: அப்பா கேட்டால் சொல்லிவிடு துணிமணி எதையும் எடுத்து வரவில்லையென்று. சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்துவதைப் போல். என்னைப் பார்த்ததும், ஏறி உள்ளே உட்கார் என்று ஒரு உறுமல் கட்டளை. நான் சப்தநாடியும் ஒடுங்க, அந்த ரயில் பெட்டியில் ஏறி காலியாக இருந்த ஒரு ஓரத்தில் அமர்ந்தேன். சித்தப்பா ஏதோ சொல்ல முயல, அவரை ஒரு கடி, அதோடு அவர் சரி. ரயில் புறப்பட்டது. மேலே லக்கேஜ் ரேக்கில் ஏறிப் படுத்துக் கொள்கிறாயா என்று கேட்டு, விரிப்பையும் விரித்துக் கொடுத்தார்.  நான் ஏறிப் படுத்தேன்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன்.  இரவு  முழுவதும்  தந்தை டிக்கட் பரிசோதனை செய்யும் தன் பணியைப் பார்க்கப்  போய்விட்டார்.   

அதிகாலை மூன்று மணி அளவிருக்கும்.  தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி மானாமதுரை வருகிறது; இறங்கவேண்டும்; தயாராகு என்றார் தந்தை. விடியாத ஒரு வேளையில் மானாமதுரையில்  வந்திறங்கினேன்.  டிக்கட் பரிசோதகர்களின் பெட்டிகள் வைக்கும் அறையில், இரண்டு, மூன்று பெட்டிகளை இழுத்துப் போட்டு, படுத்துறங்கு; விடிந்தவுடன் எழுப்புகிறேன்; வீட்டிற்குச் செல்லலாம் என்றார் தந்தை.  உறங்கினேன்.  அவர் மீண்டும் என்னை எழுப்பியபோது, நன்றாக விடிந்திருந்தது.  பல் தேய்த்து, அருமையான காப்பி ஒன்றைப் பருகிவிட்டு, (அப்போதெல்லாம் மானாமதுரையில் இரயில்வே சிற்றுண்டியகம் இருந்தது; அங்கே சிறப்பான காப்பி கிடைத்தது), அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.

வைகை ஆறு மானாமதுரையை மேல் கரை, கீழ்கரை  என்று இரண்டாகப் பிரித்திருந்தது.  ரயில் நிலையம், எங்கள் வீடு போன்ற முக்கிய பலவும் மேல் கரைதான்.  கீழ் கரை ஞாயிறன்று அப்பாவுடன் சந்தையில் காய்கறி வாங்கச் செல்வது, பின்னர் கட்டப்பட்ட அமுது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்கச் செல்வது,  நண்பர்களுடன் செல்லமுத்து கடையில் புரோட்டா சாப்பிடச் செல்வது  என்று மிகக் குறைந்த தொடர்புதான்.

மேல்கரையில் ரயில் நிலையத்துடன் ஊர் முடிகிறது.  அல்லது ரயில் நிலையத்திலிருந்துதான் ஊர் ஆரம்பமாகிறது.

பிரதான சாலையில் அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன். சரியான பட்டிக்காடு. நெல்லை மாநகருக்குப்பின், மானாமதுரை அவ்வாறு தோன்றியதில் வியப்பில்லை. அடுத்த ஐந்தாண்டுகளை அந்த ஊரில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது.  பத்து நிமிட நடைக்குப்பின் ஒருவழியாக வீட்டை அடைந்தோம்.  ஒரு பழைய வீடு.

இப்படித்தான் மானாமதுரை வாழ்கை ஆரம்பித்தது.  1970-ஆம்  ஆண்டு அந்த ஊரை விட்டுக் கிளம்பி, காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் குடிபுகுந்தது வரை உள்ள வாழ்க்கையை தற்போது பதிவு செய்ய முடியாது. நான் பதிவு செய்யப்போவது 2011 அக்டோபரில் மீண்டும் மானாமதுரையைச் சென்று பார்த்தது பற்றித்தான்.  அதாவது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மானாமாதுரையைப் பார்த்தது பற்றி.

மதகுபட்டியிலிருந்து சிவகங்கை   சென்று, பின் அங்கிருந்து மானாமதுரை செல்ல திட்டம்.  ஆனால் நேரடியாக மானாமதுரை பேருந்தே கிடைக்க, நேராக மானாமதுரைக்கே    சீட்டு வாங்கினேன்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் மானாமதுரை கீழ்கரை, வைகைப் பாலம், மேல்கரை என்று பேருந்து செல்ல, மேல்கரை அடைந்தவுடன் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழி வெளியே சென்றது.  இது முதல் மாற்றம்.  புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தின் மறுபகுதியில் புதிதாக முளைத்திருந்த சாலையில் இருந்தது.  அருகே இரண்டு பெரிய சினிமா தியேட்டர்கள், மற்றும் பல கடைகள் என்று ஊர் வளர்ச்சி பெற்றிருந்தது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் என்பதை முதலில் உணர்ந்தேன். அதன் பின் ஊருக்குள் நடந்தேன்.  பிரதான சாலையில் பெரிதான  மாற்றம் ஒன்றுமில்லை. தம்பிகள் பயின்ற ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி. சீனியப்பா என்ற பெயரில் பல நிறுவனங்கள் (சினிமா தியேட்டர் உட்பட).  நாங்கள் அங்கிருந்த காலத்தில் பெரிய மரக்கடை வைத்திருந்தார்கள்.  தற்போது நிறைய மரக்கடைகள் மற்றும் தியேட்டர்.  நான் சற்றும் எதிர்பாராத ஒன்று பெரிய குழந்தைகள் மையம் ஒன்று டோப்ளர் ஸ்கேன் வசதியுடன்!

அடுத்து நிறைய குட்டிக் குட்டி கோவில்கள்.  (படங்களைப் பதிவு செய்துள்ளேன்.)  நகரின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத  சோமநாதர் திருக்கோவில்.  எதிரே வைகை ஆற்றின் தரைப்பாலம்.  கிட்டத்தட்ட தூர்ந்து போயிருந்தது.  கோவிலைத் தாண்டி சென்றபோது வைகை ஆற்றின் மேலுள்ள பெரிய பாலம்.  அதற்கு முன் அண்ணா சிலை.  பாலத்திலிருந்து பார்த்தபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாங்கள் வாழ்ந்த காலத்தில் வைகை ஆற்றுப் படுக்கை, மெரீனா பீச்சைப் போன்று வெள்ளைமணல் கொழிக்கும் எங்களது மாலைப் பொழுதை உவகையுடன் கழிக்கும் இடம்; குழந்தைகள் கொட்டமடிப்பது, விளையாடுவது;  தற்போது முற்றிலுமாக தூர்ந்து, புதர் மண்டியிருந்தது.  ஆறே சுருங்கிவிட்டதுபோன்ற உணர்வு.

நான் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப்  பயின்ற லக்ஷ்மி தட்டெழுத்துப்பள்ளி காணாமல் போயிருந்தது. புகுமுக வகுப்பில் இருமுறை தோற்று,  கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு இடம் கிடைக்காமல், அந்த ஆண்டை வீணாக்காமல் உருப்படியாக தட்டெழுத்து, சுருக்கெழுத்து வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் ஏதோ காலம் வீணாகி விடக்கூடாது என்று பொழுதுபோக்காக படித்த அவைதான் என் வாழ்வின் ஆதாரமாயின.  குடும்பம், பிள்ளைகுட்டி, அவர்களது படிப்பு, திருமணம் என்று அனைத்திற்குமே உதவியது அந்தப் படிப்புதான். இறுதியில் எனது சிறு சிறு கனவுகளை   நனவாக்கவும், எனக்கு ஓரளவு பெயரும் புகழும் கிடைக்கவும் அவையே ஆதாரமாயிருந்தன என்பதுதான் வாழ்க்கையின் வினோதம்.  

நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை.  தொடர்பே இல்லாமல் போயிருந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், பிரதான சாலையில், குண்டு காதர் கடையில் அப்பா எங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கி வருவார். அந்தக் கடை காணாமல் போயிருந்தது.  அதுபோல் காலையில் அருமையான, சுவையான தேநீர் வழங்கும் சைவப் பிள்ளை கடையும் காணாமல் போயிருந்தது.   

நாங்கள் கடைசியாகக் குடியிருந்த தெற்கு ரத வீதியிலுள்ள வீட்டில் முகப்பில் மட்டும் சிறிய மாற்றம்.  முகப்பில் கேம்ப் காட்டில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, வேடிக்கை பார்ப்பது, உறங்குவது என்று எவ்வளவு நாட்களை கழித்திருக்கிறேன்.  எதிரே இருந்த கிருஷ்ணா மெடிக்கல்ஸ் காணாமல் போயிருந்தது.  எங்களூர் பாராளுமன்ற உறுப்பினர் தா.கிருட்டிணன் அவர்களது கடை.  திறந்து வைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்திருந்தார். என் படுக்கையில் இருந்து பார்த்தால், கல்லாப் பெட்டியில் யார் என்று தெரியும்.  பல நாட்கள் எங்கள் எம்.பி. உட்கார்ந்திருப்பார்.  இளைஞர்களெல்லாம் சான்றிதழுக்காகப் படையெடுப்பர்.  பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தனது லெட்டர் பேடிலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுப்பார்.  அவர்கள் ஓடோடிச் சென்று டைப் அடித்து வாங்கி வருவர்.  அவரும் பொறுமையாக அனைவருக்கும் கையெழுத்திட்டுக் கொடுப்பார்.  பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வளர்ந்தார். அதன் பின் பல்லாண்டு கழித்து,மதுரையில் அவர் கொலையுண்ட செய்தி  வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

கடைசியாக மானாமதுரை ரயில் நிலையம்.  ஒருகாலத்தில் எப்போதும் ஜேஜே என்றிருக்கும்.  இராமேஸ்வரம், சென்னை, மதுரை, விருதுநகர் என்று நான்கு புறமும் ரயில் பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு முக்கிய ரயில் நிலையமாக விளங்கியது, காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட ரயில்கள். மண்டபம்-பாம்பன் இடையே தரைப் பாலம் வந்த பிறகு, ரயிலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இன்று மிகக் குறைந்த ரயில் சேவைகளுடன் பரிதாபமாக் காட்சியளித்தது.  புதிய கட்டிடம், புதிய சிறந்த முகப்பு என்று எல்லாம் இருந்தும் பழைய சிறப்பில்லை.  நல்ல காப்பி கூட கிடைக்கவில்லை.  நாராயணன் என்று ஒருவர் புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கு நான் பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.  கமுதக்குடியில் பாதிரித் தோட்டத்தில் இருந்து, ஆப்பிள் கொய்யா என்று விதையே இல்லாத, மிகச் சுவையான கொய்யா வரும். எல்லாம் மறைந்துவிட்டது.

ஒருவித ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன்.

பின் குறிப்பு: 

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் காலை பதினோரு மணி காட்சி "எங்கேயும் எப்போதும்" என்ற படம் பார்த்தேன்.  படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மட்டுமே படம் பார்த்தோம்! தீபாவளிக்கு முந்திய சிலநாட்கள் என்பதால் கூட்டமே இல்லை.                       அது மட்டுமே இப்பயணத்தில் சற்று ஆறுதலான விஷயம்!      

கருத்துகள் இல்லை: