21 நவ., 2011

சூரியின் டைரி-54: நல்ல சாவு

அது என்ன நல்ல சாவு?  பயங்கரமான சாலை விபத்திலோ, குருரமான தீ விபத்திலோ, இல்லை படுக்கையில் மாதக் கணக்கில் கிடந்து நாறி,  அன்பு வைத்திருந்த மனைவி மக்கள் எல்லாம் வெறுத்து, இவன் ஒழிய மாட்டானா என்று ஏங்கும் நிலை-இதெல்லாம் நிச்சயமாக நல்ல சாவு இல்லை.  தூக்கத்திலேயே எந்த வித தொல்லையும் இன்றி உயிர் பிரிவது மிகச் சிறந்த சாவு என்று நினைக்கிறேன்.  காலையில் காப்பியுடன் மனைவி எழுப்ப, ஒன்றுமே சலனமில்லாமல், கட்டையாகக் கிடக்க, அலறி அடித்து, டாக்டர் வந்து பார்த்து, சாரிங்க! அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிவாக்கில் உயிர் பிரிந்துவிட்டது என்று சொல்கிறார் அல்லவா, அதுதான் நல்ல சாவு.  இன்னும் நல்ல சாவு என்றால், நமக்கு மட்டும் அறிகுறிகள் காட்டும், நாம் சுதாரித்து நாம் செய்யவேண்டிய கடமைகளை விரைவாக முடித்து, கணக்கு வழக்குகளையெல்லாம் தெளிவாக ஒப்படைத்துவிட்டு, சிக்கல்களையோ, பிரச்சினைகளையோ குடும்பத்தாருக்கு விட்டுச் செல்லாமல் இருப்பது. முக்கியமாக, பெரும் மருத்துவச் செலவை உண்டாக்காமல் இருப்பது.

எனது உறவினர் ஒருவரின் தந்தை இரவில் உடல் நலம் திடீரென மோசமாக, அவசர அவசரமாக, வாடகைக்கார் பிடித்து, மதுரை சென்று, அங்கே புகழ் பெற்ற தனியார் மருத்துவ மனையில் பெரும் பணம் செலவு செய்து, அவரைக் காப்பாற்றி வீடு கொண்டு சேர்த்தார்.  ஆனால், இரண்டு மாதம் கழித்து, நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர் அலுத்துக் கொண்டார்: "நான் தப்புப் பண்ணீட்டேன்! அன்றைக்கே அவரைச் சாக விட்டிருக்கவேண்டும்.  தற்போது படுத்த படுக்கையாய் இருக்கிறார். சொல்வதைக் கேட்பதில்லை.  கண்டதையும் தின்றுவிட்டு, படுக்கையை நாறவைக்கிறார்.  பிள்ளைகள் எல்லாம் அருவருப்புப் படுகிறார்கள்.  அவருக்குப் பாடு பார்பதற்குள் உயிரே போய்விடுகிறது.  அவர் சீக்கிரம் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருக்கிறேன்."

நான் என் தினசரிப் பிரார்த்தனையில்: "பிறவிப் பயனை அடைதல் வேண்டும்; முழுமை பெறவேண்டும்; மகத்தான சாதனைகள் படைத்திடல் வேண்டும். உரிய நேரம் வந்ததும், மன நிறைவோடு, சிரித்த முகத்தோடு, உன் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.

இப்பிறவியை நல்லபடியாக முடித்திடல் வேண்டும்; அல்லல் படாமல், அவதிப் படாமல், அசிங்கப் படாமல், துன்பப் படாமல், துயரப் படாமல், கேவலப் படாமல் முடித்திடல் வேண்டும்.  அடுத்த பிறவியிலாவது முற்றிலும் தூயவனாகப் பிறந்து, முற்றிலும் தூயவனாக வாழ்ந்து, முற்றிலும் தூயவனாக முடித்திடல் வேண்டும்.

எஞ்சியுள்ள காலத்திலாவது உடல் உபாதைகள், மன உபாதைகள், நோய்கள், பிணிகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, கடன்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, மன நிறைவுடனும், மன நிம்மதியுடனும், மன மகிழ்வுடனும், சீரும் சிறப்புடன் வாழ நல்லருள்  புரிவாய் இறைவா"  என்று வேண்டிக் கொள்வேன்.

ஒரு மாதம் படுக்கையில் கிடந்து, நாய் படாத பாடு பட்டு எழுந்த பிறகு, தற்போது என் பிரார்த்தனை மிகவும் சுருங்கிவிட்டது.  சாதனைகள், புடலங்காய்கள், மன நிறைவு, மன மகிழ்வு இவற்றையெல்லாம் கடாசி விட்டு, "இயலாமை, முதுமை, தள்ளாமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகு முன், இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்; வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்" என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.  நோய்களும், கஷ்டங்களும் மனிதனை எந்த அளவுக்கு பக்குவப் படுத்துகின்றன!

இறைவன் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறானா என்று பார்க்கலாம்.    

கருத்துகள் இல்லை: