ஒரு மாதத்திற்கு மேல் உடல்நிலை சரியில்லாமல், தற்போதுதான் உடல்நிலை சிறிது, சிறிதாக தேறி வருகிறது. ஒருமாதமாக பெரும்பாலும் படுக்கையிலேயே சிரமப்பட்டு பொழுதைக் கழித்தேன். எதுவும் செய்ய இயலவில்லை. உணவும் செல்லவில்லை. ஏற்கனவே நான் ஒரு சர்க்கரை நோயாளி. சர்க்கரை நோயாளிகளின் முக்கிய பிரச்சினை அவர்கள் உண்ணும் உணவை சக்தியாக, ஆற்றலாக மாற்றும் திறன் குறைவாக இருப்பது; அதன் விளைவாக, உடல் உறுப்புக்கள் அவை செயல்பட தேவையான ஆற்றல் இல்லாமல், அரைகுறையாக செயல்படுவது. அதிலும் உடல் எடையில் மூன்று சதவிகிதமே உள்ள மூளை, உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் பதினேழு சதம் எடுத்துக் கொள்ளும். சர்க்கரை வியாதி + உணவை ஏற்கா நிலையில் மூளையின் செயல்பாடு எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை. முக்கியமாக ஒரு மந்த நிலை, எதிலும் ஈடுபாடின்மை, மனத் தளர்ச்சி போன்றவை எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள். தினசரி செய்தித்தாளைக் கூட படிக்க ஈடுபாடில்லை. தினமும் போடும் 'சுடோக்கை' கண்டுகொள்வதே இல்லை. சாதாரணமாக எனக்கு மிகவும் பிடித்த, இரண்டு மூன்று வரிகளில், ரத்தினச் சுருக்கமாக பயனுள்ள ஆரோக்கியத் தகவல்களைத் தரும் சென்னை டைம்ஸ் கூட ஈர்க்கவில்லை.
நிலைமை கவலை அளிப்பதாக இருந்தது. நாவல் ஏதாவது படித்தாலென்ன? நாவல் என்றால் சுவாரசியமாக இருக்கும். எனவே நான்கைந்து புத்தகங்களை எடுத்தேன். அதிலொன்று, தாகூரின் புகழ் பெற்ற நாவல். படகு விபத்தால் ஏற்படும் இடமாற்றங்கள், குழப்பங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்லும். பள்ளி நாட்களின் சுருக்கமான பதிப்பைப் படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். மேலும் அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் வெளிவந்த "மாதர் குல மாணிக்கம்" என்ற திரைப்படத்தையும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். படகு விபத்திற்குப் பதிலாக, அரியலூர் ரயில் விபத்து; அப்புறம் வேறு சில மாற்றங்கள். தாகூரின் கதையில் ஒரு மணப்பெண் விபத்தில் பலியாவாள்; தமிழில் இரண்டு புதுமண ஜோடியும் பிழைக்கும்; மணப்பெண்கள் இருவரும் இடம் மாறுவர்; இறுதியில், சிக்கல் எப்படி அவிழ்கிறது, அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் கணவன்மாரை எப்படிச் சென்றடைகின்றனர் என்பது கதை.
தெரிந்த கதையை இருந்த போதும் அந்த நாவலைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் முழுமையான - சுருக்கப்படாத அந்த நாவலைப் படிக்கவேண்டும்; தாகூரின் எழுத்து வண்ணம், வர்ணனைகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல்தான். அந்தக்கால வங்காளத்தைக் கண் முன் கொண்டு வருகிறார். அற்புதமான வர்ணனைகள். குறிப்பாக, கங்கையாற்றில் கதாநாயகனும், கதாநாயகியும் காசிப்பூர் வரை பயணம் செய்வது; ஒவ்வொரு இரவு ஆற்றங்கரையில் ஒரு கிராமத்தில் படகு நிற்பது; அந்த நேரம் வேண்டிய பொருட்களை பயணிகள் வாங்குவது, சமைப்பது, மற்றும் அந்த கிராம மக்களைப் பற்றிய வர்ணனை.
ஒரு மெகா சீரியல் எடுத்தால், அதுவும் தாகூரின் எழுத்துப் படி, சிதையாமல், உருவாக்கப் பட்டால் மிகவும் நன்றாயிருக்கும். ஏற்கனவே, வங்க மொழியிலோ, இந்தியிலோ எடுக்கப்பட்டிருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை. நானூற்றுப் பதினாலு பக்கங்கள் கொண்ட நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தேன். அருமையான நாவல். ஒரே குறை 'க்ளைமாக்ஸ்தான்'. அப்பா தாங்க முடியாத அளவிற்கு, தலை சுற்றும் அளவிற்கு திருப்பங்கள். நம்மூர் மெகா சீரியல்கள் தேவலாம் என்றாகிவிட்டது.
இந்தக் குறையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சுவையான நாவல். 1926-ஆம் வருடம் முதற் பதிப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் வங்காள மாநிலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு பதமாக ஒரு பருக்கை இந்நாவல்.
என்னைப் பொறுத்தவரை தாகூருக்கு மிகவும் நன்றி. மனம் துவண்டு, செய்வதறியாது இருந்த நிலையில் இந்நாவல் ஒரு டானிக் போல செயல்பட்டது என்றால் மிகையில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக