31 டிச., 2018

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-26: தொ.மு.சி மறைந்த நாள் இன்று

*தொ. மு. சிதம்பர ரகுநாதன் மறைந்த நாள் இன்று*)

(அக்டோபர் 20, 1923 – டிசம்பர் 31, 2001) சிறுகதை, நாவல், விமரிசனம், ஆய்வு, மொழிபெயர்ப்பு, நாடகம், வாழ்க்கை வரலாறு எனப் பலதுறைகளிலும் எழுதியவர். பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். ரகுநாதனின் எழுத்துக்கள், ஆய்வுகள், விமரிசனங்கள் யாவும் தமிழில் மார்க்சிய சிந்தனைகளை வளர்த்தது.

தொ. மு. சிதம்பர ரகுநாதன்
பிறப்பு
அக்டோபர் 20, 1923
திருநெல்வேலி, தமிழ் நாடுஇறப்புடிசம்பர் 31, 2001
பாளையங்கோட்டைதொழில்எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்நாடுஇந்தியர்எழுதிய காலம்1941–1999இலக்கிய வகைசமூக புதினங்கள், இலக்கிய விமர்சனம், கவிதைகள்இயக்கம்சோஷியலிச யதார்த்தவாதம்குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)பஞ்சும் பசியும்
பாரதி: காலமும் கருத்தும்
இளங்கோ அடிகள் யார்?

*வாழ்க்கைக் குறிப்பு*

ரகுநாதன் திருநெல்வேலியில்அக்டோபர் 21, 1923ல் பிறந்தார். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய இவரது அண்ணன் பாஸ்கர தொண்டைமான் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர். இவரது ஆசிரியர் அ. சீனிவாச ராகவன் இவருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருந்தார். இவரது முதல் சிறுகதை 1941ல் பிரசண்ட விகடனில் வெளிவந்தது. இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 1942ல் சிறைக்குச் சென்றார். 1944ல் தினமணியில் உதவி ஆசிரியராகவும் பின்பு 1946ல் முல்லை என்ற இலக்கியப் பத்திரிக்கையிலும் பணியாற்றினார். இவரது முதல் புதினமான புயல் 1945ல் வெளியானது. இவரது படைப்புகளில் குறிப்பிடத்தக்கது 1948ல் வெளியான இலக்கிய விமர்சனம். அதைத் தொடர்ந்து 1951ல் பஞ்சும் பசியும் என்ற புதினத்தை எழுதினார். இப்புதினம் செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 50000 பிரதிகள் விற்பனையானது. அதே ஆண்டு தனது சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார். 1954–56 வரை சாந்தி என்ற முற்போக்கு இலக்கிய மாதஇதழை நடத்தினார். அந்த இதழ் மூலம் டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன் போன்ற இளம் எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தினார். அடுத்த பத்தாண்டுகளுக்கு அமைப்புசாரா எழுத்தாளராக பணிபுரிந்தார். 1960ல் சோவியத் நாடு பதிப்பகத்தில் சேர்ந்து நிறைய ரஷியப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டார். அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிடத்தக்கவை: மாக்சிம் கார்க்கியின் தாய் மற்றும் விளாடிமிர் மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா விளாடிமிர் இலிச் லெனின். அவரது இலக்கிய விமர்சன நூலான பாரதி - காலமும் கருத்தும் 1983ல் சாகித்திய அகாதமி விருது பெற்றது. 1985ல் இளங்கோ அடிகள் யார் என்ற சமூக வரலாற்று ஆய்வினை வெளியிட்டார். 1988ல் சோவியத் நாடு இதழிலிருந்து ஓய்வு பெற்றார். 2001ல் பாளையங்கோட்டையில் காலமானார்.

தமிழ் எழுத்தாளர் புதுமைப்பித்தன்இவரது நண்பர். 1948ல் புதுமைப்பித்தன் இறந்தபின் அவரது படைப்புகளைச் சேகரித்து வெளியிட்டார். 1951ல் தன் நண்பரின் வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டார். 1999ல் புதுமைப்பித்தன் கதைகள் - விமரிசனங்களும் விஷமங்களும் என்ற நூலை வெளியிட்டார். அந்நூல் 1951ல் வெளியான வாழ்க்கை வரலாற்றின் தொடர்ச்சியாகவும் புதுமைப்பித்தனின் படைப்புகளில் பிறமொழித் தழுவல் மிகுந்துள்ளதாக அவரது சமகால எழுத்தாளர்கள் (பெ. கோ. சுந்தரராஜன்போன்றோர்) முன் வைத்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடியாகவும் அமைந்திருந்தது. 1942 முதல் 1962 வரை இவரது எழுத்துலக வாழ்க்கை முழுவேகத்தில் இருந்தது. இவர் ஒரு சோஷியலிச யதார்த்தவாத எழுத்தாளர். தமிழ்நாட்டின் கைத்தறி நெசவாளர்கள் படும்பாட்டைத் தனது பஞ்சும் பசியும் நூலில் தெளிவாகக் காட்டியுள்ளார். அவரது கொள்கைகளை அந்நூல் பிரதிபலிக்கிறது. திருச்சிற்றம்பலக் கவிராயர் என்ற புனைப்பெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். ரகுநாதன் மொத்தம் 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 புதினங்கள், 2 நாடகங்கள் மற்றுமொரு வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார்.

*சிறப்பம்சங்கள்*

சோசலிச எதார்த்தவாத நாவல் இலக்கியப் போக்கைத் தன் “பஞ்சும் பசியும்” நாவல் மூலம் தொடங்கி வைத்தார் .தமிழ் இலக்கிய ஆய்வை இலக்கண ஆய்வு நிலையிலிருந்தும், ரசனை ஆய்வு நிலையிலிருந்தும் சமூகநிலை ஆய்வு என்னும் ஆழ மான தளத்துக்குக் கொண்டு சென்று, ஆய்வின் எல்லையை விசாலப்படுத்தினார் . “பாரதியும் ஷெல்லியும்”, “கங்கையும் காவிரியும்” ஆகிய நூல்களின் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தைத் தமிழில் விரிவுபடுத்தியவர். “ இளங்கோவடிகள் யார்?” என்னும் நூலின் வழி, தமிழகத்தில் சமய உருவாக்கங்களைப் போல நடந்த புதுப்புதுச் சாதி உருவாக்கங் களைத் துலக்கி, சாதி இறுக்கங்களின் பொய்மையைப் பளிச்சென வெளிப்படுத்தியவர்.

*விருதுகள்*

சாகித்திய அகாதமி விருது – 1983

சோவியத் லேண்ட் நேரு விருது (தாய் மற்றும் லெனினின் கவிதாஞ்சலிக்காக)

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை பரிசு

பாரதி விருது - 2001

எழுதிய நூல்கள்தொகு

*சிறுகதை*

சேற்றில் மலர்ந்த செந்தாமரை

க்ஷணப்பித்தம்

சுதர்மம்

ரகுநாதன் கதைகள்

*கவிதை*

ரகுநாதன் கவிதைகள்

கவியரங்கக் கவிதைகள்

காவியப் பரிசு

*நாவல்*

புயல்

முதலிரவு (தமிழ்நாட்டரசால் தடைசெய்யப்பட்டது)

கன்னிகா

பஞ்சும் பசியும்' (நெசவாளியரின் துயர் சொல்லும் நாவல்)

*நாடகம்*

சிலை பேசிற்று

மருது பாண்டியன்

*விமரிசனம்*

இலக்கிய விமரிசனம்

சமுதாய விமரிசனம்

கங்கையும் காவிரியும்

பாரதியும் ஷெல்லியும்

பாரதி காலமும் கருத்தும்

புதுமைப்பித்தன் கதைகள் - சில விமரிசனங்களும் விஷமத்தனங்களும் (1999)

*வரலாறு*

புதுமைப்பித்தன் வரலாறு

*ஆய்வு*

இளங்கோவடிகள் யார்? (1984)

*மொழிபெயர்ப்பு*

தாய் (கார்க்கியின் - தி மதர்).

லெனினின் கவிதாஞ்சலி (மயகொவ்ஸ்கியின் இரங்கற்பா - விளடிமிர் இலிச் லெனின்).

*நன்றி: தமிழ் விக்கிப்பீடியா*

****
நான் இவரை அதிகம் படித்ததில்லை. இவரது பஞ்சும் பசியும் என்ற நாவலையும் ஒருசில சிறுகதைகளையும், கவிதைகளையும் மட்டுமே படித்திருக்கிறேன். ஒரு சாதனையாளர், சீரிய சிந்தனையாளர் என்ற முறையில் இவரது நினைவைப் போற்றுகிறேன்.

கருத்துகள் இல்லை: