30 டிச., 2019

காந்திஜி நினைவுகள்-5: எழுத்தாளராக விரும்பினார் காந்தி - பார்வதி பேணு



எழுத்தாளராக விரும்பினார் காந்தி

பார்வதி பேணு


காந்தியைப் பற்றி பேசிவிட்டு அவருக்கு பல்லாண்டு காலமாய் வந்த, அவர் எழுதிய, எண்ணற்ற கடிதங்களைப் பேசாமல் எப்படி? அந்தக் கடிதங்கள் இப்போது இணையத்தில் இருக்கின்றன. அவற்றைப் படித்துப் பார்ப்பவர்கள், எவ்வளவு கச்சிதமாகவும் துல்லியமாகவும் காந்தி எழுதுகிறார் என்பதைச் சுலபமாக கண்டு கொள்ளலாம். காந்தியிடம் அலங்கார வார்த்தைகள் கிடையாது, சொல்ல வந்த விஷயத்தை நேரடியாகச் சொல்கிறார்.

இவற்றில் பெரும்பாலான கடிதங்கள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டவை. அது போக இந்தி, குஜராத்தி மொழிகளிலும் எழுதினார் மகாத்மா. அவர் மாணவப் பருவத்தில் லத்தீன் மொழிகூட கற்றிருக்கிறார். ஆங்கில மொழியில் அவர் அவ்வளவு சிறப்பாக எழுத என்ன காரணம் இருக்கும், என்ற கேள்வி எழுந்தது. அவரது உறவினர்கள், பேரன், கொள்ளுப் பேரன் இருவரையும் கேட்டோம்.

மகாத்மா காந்தியின் இரண்டாம் மகன், மணிலால் காந்தி. அவரது பேரன், துஷார் காந்தி, காந்தி ஆய்வு மையத்தின் இயக்குனர். 2005 ஆம் ஆண்டு மீண்டும் தண்டி யாத்திரை சென்றது அவருக்கு புகழ் சேர்த்திருக்கிறது. "பாபுவுக்கு முதலில் அவ்வளவு ஆங்கில மொழித் திறமை இருக்கவில்லை. அவர் அந்த மொழி கற்க போராடினார். உண்மையில், ஆங்கிலம் கற்க முடியவில்லை என்ற காரணத்தால்தான் அவர் சமல்தாஸ் கல்லூரியிலிருந்து வெளியேறினார்."

பின்னர், குறிப்பாக, பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தில், ஆங்கிலம் கற்க வேண்டியது அவசியம் என்பதை அவர் உணர்ந்ததும் அதில் அவர் தீவிரமாய் இறங்கி விட்டார். அவர் கடுமையாய் உழைத்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து சென்று ஆங்கிலமும் சட்டமும் படிக்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்த நேரம் அது. அவர் தன் சொந்த முயற்சியில் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சிய காலம் போய், மெல்ல மெல்ல அதில் தேர்ச்சி பெற்று, சரளமாக பேசினார்," என்கிறார் துஷார். "அபூர்வமான சொற்களைப் பயன்படுத்தி அவர் தன் திறமையைக் காட்டவில்லை, எப்போதும் துல்லியமான சொற்களைக் கையாண்டார். யாருக்கும் தொல்லை கொடுக்கும் வகையில் அவர் தன் நேரத்தையும் சொற்களையும் வீணாக்கவில்லை." இது போக, "இதே காலத்தில்தான் பாபு லத்தீன் மொழியும் கற்றார். சட்டம் சார்ந்த பதங்களையும் ஆங்கில இலக்கணத்தையும் புரிந்து கொள்ள இது அவருக்கு உதவியாக இருந்தது," என்றும் சொல்கிறார் அவர்.

அடுத்து நாம் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ராஜ்மோகன் காந்தியைச் சந்தித்தோம். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர், மகாத்மாவின் இளைய மகன் தேவதாஸ் காந்தியின் மகன். காந்தியின் சரிதை எழுதிய அவர், காந்தி பற்றி நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். "பாபு செய்தித்தாள்களை ஆர்வமுடன் வாசித்தார். இது அவரது ஆங்கில மொழித் திறனை வளர்த்தது. புத்தகங்களிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. இதனால் அவரால் எழுத்தாற்றலை வளர்த்துக் கொள்ள முடிந்தது. சட்ட நூல்களில் கூட அவருக்கு எழுத்துப் பயிற்சி கிடைத்தது. அவர் முழு நேர எழுத்தாளராகும் ஆசை கொண்டிருந்தார். ஆனால் அனுபவங்களும் சில எதிர்நிகழ்வுகளும் அவரை இந்திய சுதந்திர போராட்ட வீரராய் மாற்றி விட்டன."


நன்றி: Edex Live
ஒளிப்பட உதவி : Amar Ujala
மற்றும் யூடியூப் 

கருத்துகள் இல்லை: