29 நவ., 2020

சிறப்புக் கட்டுரை : மக்கள் மறந்த இரு மகாத்மாக்கள் !

மக்கள் மறந்த இரு மகாத்மாக்கள் :
எழுத்தாளர் இராஜேஷ் லிங்கதுரை

துரத்தியடிக்கப்பட்ட மகாத்மா :-

அந்த வாலிபன் தனது நண்பனின் திருமண விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனிடம் பகட்டான ஆடைகள் கிடையாது, ஆனால் மனம் நிறைய அன்பு மட்டும் இருந்தது. அந்தத் திருமணத்துக்கு அவன் போவது அவன் தந்தைக்கு சற்றுப் பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது, இருந்தாலும் அவனிடம் வெளிக்காட்ட விரும்பவில்லை. திருமணத்திற்குக் கட்டாயம் போகவேண்டுமா என்று கேட்டார். நண்பன் விருப்பப்பட்டு அழைத்ததாகவும், போகவில்லையென்றால் அவன் வருத்தப்படுவான் என்று சொல்லி விட்டு அவன் திருமணத்துக்குக் கிளம்பி விட்டான்.
திருமண வீட்டு வாசலில் அவன் காலடி பட்டதுதான் தாமதம், உள்ளேயிருந்த சிலர் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்கள் தொடுத்த முதல் கேள்வி, நீ என்ன சாதி. அவன் துணிவாக சொன்னான், நான் மாலி சாதியைச் சார்ந்தவன். மறுகணமே அவன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டான். அவனது நண்பன் கூட உதவி செய்ய முன்வரவில்லை. நெஞ்சம் கனத்தது. அழுவதைத் தவிர வேறு எந்தவிதப் புரட்சியும் செய்யமுடியாத நிலை. அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் தந்தை இதை எதிர்பார்த்துக் காத்திருந்தவர் போல் அவனை அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்.
துரத்தியடிக்கப்பட்ட அந்த 21 வயது வாலிபனின் பெயர் ஜோதிராவ் பூலே. இந்தியாவில் மகாத்மா என்று அழைக்கப்பட்ட முதல் மனிதர். காந்திக்கு முன்னரே மகாத்மா என்று அறியப்பட்டவர். கல்வி என்பது கனவு என்று நம்பிக்கொண்டிருந்த காலத்தில், தாழ்த்தப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுபோய் சேர்த்தவர். சராசரி மனிதனாகக் கூட மதிக்காமல் துரத்தி விடப்பட்ட அந்த சிறுவன் ஜோதிராவ் பின்னாளில் மகாத்மா என்று போற்றப்பட்டான். துரத்தியடிக்கப்பட்ட இந்தியாவின் முதல் மகாத்மாவைக் குறித்துப் பார்க்கலாம்.

பூர்வீகம்:-

ஜோதிராவ் பூலேயின் தாத்தா ஷெட்டிபா (Shetiba) பேஷ்வாக்களுக்கு (Peshwa) பூச்செண்டுகள் கட்டிக்கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள். ரானோஜி, கிருஷ்ணா மற்றும் கோவிந்த். இவர்களின் பூ கட்டும் திறமையைப் பார்த்து இவர்கள் பெயரே பூலே என்று மாறிப்போனது. பூலே என்றால் தமிழில் பூக்காரன் என்று அர்த்தம். தங்கள் ஜாதிப் பெயர் தொலைந்து போய், பெயருக்குப் பின்னால் பூலே என்ற பெயரையே சேர்த்துக் கொண்டார்கள். இவர்கள் பூச்செண்டுகளில் மயங்கிப் போன பேஷ்வாக்கள் ஷெட்டிபாவுக்கு சன்மானமாக 32 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். பின்னாளில் 32 ஏக்கர் நிலத்தையும் மூத்தப் பையன் ரானோஜியே எடுத்துக் கொண்டு மற்றவர்களைத் தெருவில் விட்டுவிட்டார். அவர்கள் கடைசிவரை ஏழ்மை நிலையிலேயே அவதிப்பட்டு வந்தனர்.

இளையவர் கோவிந்தின் மனைவி பெயர் சிம்னாபாய். அவர்களுக்கு இரண்டு மகன்கள். ராஜாராம்ராவ் மற்றும் ஜோதிராவ். ஜோதிராவ் பிறந்தது 11 ஏப்ரல் 1827, புனேயில் பிவானி என்னும் நகரத்தில் உள்ள கட்கன் கிராமம். ஜோதிராவுக்கு ஒரு வயதாகும்போதே அவர் அன்னை சிம்னாபாய் காலமானார். ஜோதிராவ் நன்றாகப் படித்தார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலை காரணமாக அவர் கல்வி பாதியில் நிறுத்தப்பட்டது. ஆனால் அவரது அறிவாற்றலைக் கண்ட அண்டை வீட்டுக்காரர் அவரை பள்ளிக்கு அனுப்புமாறு ஜோதிராவின் தந்தையைக் கேட்டுக்கொண்டார். பக்கத்து வீட்டுக்காரர் புண்ணியத்தில் ஜோதிராவின் கல்வி தொடர்ந்தது. ஜோதிராவுக்கு13 வயதில் சாவித்ரிபாய் என்ற பெண்ணோடு திருமணம் நடந்தது. அன்றைய காலங்களில் சிறுவயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். திருமணத்தின்போது சாவித்ரிபாய்க்கு 9 வயதுதான்.

இரண்டாவது வழி:-

கல்யாண வீட்டில் அவமானப்பட்டு வந்து நிற்கும் ஜோதிராவை நாம் மீண்டும் சந்திக்க வேண்டிய தருணம். அப்பா, மனைவி எல்லோரும் ஆறுதல் கூறினாலும், அவரை ஏதோ ஒன்று தூங்கவிடாமல் செய்தது. அவமானத்தின் உச்சத்தில் முளைத்த எண்ணம் இரண்டு விதமாக செயல்படக்கூடியது. ஒன்று, தன்னைப் புறக்கணித்த சமுதாயத்தின் மீது வெறுப்புணர்வை உண்டாக்கி, சமுதாயத்தைப் பழி வாங்க வேண்டும் என்ற வெறியை உருவாக்கவல்லது. இரண்டு, தனக்கு நேர்ந்த அவமானம் பிறருக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று சமுதாயத்தை சீர்திருத்த முனைவது. ஜோதிராவ் மகாத்மா, அதனால் அவர் கட்டாயம் முதல் வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை. அவர் பின்பற்றியது இரண்டாவது வழி. அது சமுதாயத்தை சீர்திருத்தும் பணி.
1848 ஜோதிராவ் வாழ்வில் பல திருப்புமுனைகளைக் கொண்டுவந்த ஆண்டு. அந்த ஆண்டில்தான் அவர் திருமண வீட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டார். அவர் கண்ணீரைத் துடைக்க உதவியது தாமஸ் பெயின் (Thomas Paine) எழுதிய “மனிதனின் உரிமைகள் (The Rights of Man)” என்ற புத்தகம். 1848ம் ஆண்டுதான் இந்த புத்தகத்தை அவர் படித்தார். நம்மில் பலரது கண்ணீர் கைக்குட்டையில் கரைந்து போகும், ஆனால் ஜோதிராவின் கண்ணீர் ஒரு புத்தகத்தில் முடிந்தது. ஒரு அவமானமும், ஒரு புத்தகமும்தான் இந்தியாவின் முதல் மகாத்மாவை உருவாக்கின. அதே ஆண்டு மற்றொரு வரலாற்று சாதனையை அவர் செய்தார். அவர் மனைவிக்கு கல்வி கற்றுக்கொடுத்தார். மனைவிக்குக் கல்வி பயிற்றுவிப்பதில் என்ன வரலாற்று சாதனை என்ற எண்ணம் இயல்பாகவே எழும். சாவித்ரிபாய்தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரை உருவாக்கியது வரலாற்று சாதனைதானே. ஆசிரியரை உருவாக்கியதோடு மட்டுமல்ல, அதே ஆண்டில் ஒதுக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு பள்ளி ஒன்றையும் துவங்கினார்.

கல்விப்பணியும், சமுதாயப்பணியும்:-

உஸ்மான் ஷேக் மற்றும் அவரது தங்கை ஃபாத்திமா ஷேக் இருவரும் ஜோதிராவின் நண்பர்கள். ஜோதிராவ், ஒதுக்கப்பட்ட பெண்களுக்கான பள்ளியைத் துவங்க இடமளித்தது உஸ்மான் ஷேக்தான். ஜோதிராவின் பள்ளியில் ஃபாத்திமா ஷேக்கும் ஒரு ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது. 1851ம் ஆண்டில் பெண்களுக்காக மேலும் 3 பள்ளிகளைத் திறந்தார் ஜோதிராவ். 1852ம் ஆண்டு, அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று கருதப்பட்ட மகர், மாங் சாதிகளை சார்ந்த மக்களுக்கென ஒரு பள்ளியைத் திறந்தார். ஜோதிராவின் கல்விப்பணி மேல்தட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஜோதிராவின் தந்தை கோவிந்த்ராவை மிரட்டினார்கள். கோவிந்த்ராவ் எவ்வளவோ சொல்லியும் ஜோதிராவும் அவர் மனைவியும் கல்விப்பணியில் இருந்து பின்வாங்க ஆயத்தமாக இல்லை. அதனால் அவர்கள் இருவரையும் வீட்டைவிட்டு வெளியேறுமாறு கூறிவிட்டார் கோவிந்த்ராவ். வீட்டைவிட்டு வெளியேறிய பின்னும் அவர்கள் கல்விப்பணி தொடர்ந்தது. அவர்கள் தங்கள் வாழ்நாளில் ஒட்டுமொத்தமாக 18 பள்ளிகளை நடத்தியிருக்கிறார்கள் என்பது வரலாறு.
அக்காலத்தில் பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்துவைக்கப்பட்டனர். சிறுவயதில் கணவனை இழக்க நேரிட்டால் அந்த பெண் வாழ்நாள் முழுவதும் விதவையாகவே வாழவேண்டும். மேலும், கணவன் இறந்தபின், கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் ஆதரவளிக்க அந்த பெண்களின் தாய் தந்தையர் கூட ஆயத்தமாக இல்லை. 1863ம் ஆண்டு ஜோதிராவ், விதவைப்பெண்களுக்கும் , கணவனை இழந்து கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் விதமாக ஒரு அனாதை இல்லத்தைத் துவங்கி நடத்தினார். இதனால் விதவைப்பெண்கள் தற்கொலை மற்றும் சிசுக்கொலைகள் தடுக்கப்பட்டன. குடும்பத்தால் கைவிடப்பட்ட ஒரு பிராமண விதவைப் பெண்ணின் குழந்தையைத் தத்தெடுத்துதான் ஜோதிராவ், சாவித்ரிபாய் தம்பதிகள் வளர்த்தனர். யஸ்வந்த்ராவ் என்ற அந்த குழந்தை பின்னாளில் மருத்துவராக விளங்கினான்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதே பாவம் என்று கருதிய காலம் அது. அந்நாட்களில், ஜோதிராவ் தன் வீட்டிலிருக்கும் கிணற்றில் நீர் எடுத்துக்கொள்ளும்படி தாழ்த்தப்பட்ட மக்களைக் கேட்டுக்கொண்டார். புரோகிதர் இல்லாமல் திருமணம் என்பது இன்றைய காலத்தில் கூட கடினமான ஒன்று, அதனை அன்றே நிகழ்த்திக்காட்டியவர் ஜோதிராவ். புரோகிதர் இல்லாமல் கூட சில திருமணங்கள் நடக்கும், ஆனால் வரதட்சணை இல்லாமல் திருமணங்கள் சாத்தியமில்லை. ஆனால் அதையும் அப்போதே சாதித்துக்காட்டியவர் பூலே. அதுமட்டுமல்லாமல், சாதி மறுப்புத் திருமணங்களும் செய்து வைத்தார். பின்னாளில் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் ஜோதிராவ் பூலே அவர்களைத்தான் தனது முன்மாதிரியாக ஏற்றுக்கொண்டார்.

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்:-

ஜோதிராவுக்கும், சாவித்ரிபாய்க்கும் திருமணம் ஆனபோது சாவித்ரிபாய் கல்வி கற்றவரில்லை. ஜோதிராவ்தான், சாவித்ரிபாய்க்கு எழுத்தறிவித்தவர். பின்னர் அவர் ஆசிரியர் பயிற்சி வரை சென்று, இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று போற்றுமளவுக்கு உயர்ந்தார். ஜோதிராவின் கல்விப்பணிகளுக்கும், சமுதாயப்பணிகளுக்கும் கடைசிவரை அயராத பங்களிப்பை அளித்த பெருமை அவர் மனைவி சாவித்ரிபாயை சேரும். இன்று நாம், இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்று புகழ்ந்தாலும் அன்று இகழ்ச்சியைத் தவிர வேறொன்றும் பரிசாகக் கிடைக்கவில்லை அவருக்கு.

சாவித்ரிபாய் தனது பள்ளிக்கு செல்லும்போது, தான் அணிந்திருக்கும் புடவை போக இன்னொரு புடவையைக் கைவசம் வைத்திருப்பார். காரணம் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் முன் அவர் புடவை மேல் சாணி, மண் போன்றவை நிறைந்திருக்கும். உண்மைதான். அவர் பள்ளிக்கு செல்லும் வழியில் மேல் சாதி என்று தங்களைக் கூறிக்கொள்ளும் கீழ்த்தரமானவர்கள் சாவித்ரிபாய் மீது சாணியையும், மண்ணையும் வாரி வீசுவார்கள். பல நேரங்களில் கல்லடியும் உண்டு. எப்போதும் தகாத வார்த்தைகளால் திட்டித்தீர்ப்பார்கள். இவர்கள் வாரி இறைக்கும் சாணியோடும், மண்ணோடும் பாடமெடுக்க முடியாதல்லவா, அதனால் கைவசம் இன்னொரு புடவை வைத்துக்கொள்வார். பள்ளிக்கு சென்றதும் வேறு புடவையை மாற்றிக்கொண்டு பாடமெடுக்கத் துவங்குவார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியைக்கு நல்லாசிரியர் விருதாக சாணியும், மண்ணும், கல்லும்தான் கிடைத்தன.
1890ல் கணவர் ஜோதிராவ் இறந்தபின்னும் சாவித்ரிபாயின் சமூகசேவை தொடர்ந்தது. அக்காலத்தில் கணவன் இறந்துவிட்டால் மனைவி மொட்டையடித்துக்கொள்ள வேண்டும். சாவித்ரிபாய், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டையடிக்கக் கூடாதென்று போராட்டம் நடத்தியிருக்கிறார். பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சாவித்ரிபாயும், அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஸ்வந்த்ராவும் நோயாளிகள் பலருக்கு நேரில் சென்று சிகிச்சை அளித்தனர். இதில் சாவித்ரிபாயும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இறக்கும் தருவாய் வரை சமூக சேவையிலே அவர் காலம் கழிந்தது.

இரு மகாத்மாக்கள்:-

தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்பட்ட மக்களின் நிழல்கூட தங்கள் மேல் விழுந்தால் தீட்டு என்று சாதிவெறி பிடித்த ஆதிக்க சாதிகளுக்கு மத்தியில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வியளிக்க வேண்டும் எண்ணிய ஜோதிராவ் பூலே நிச்சயம் மகாத்மாதான். ஆதிக்க சாதிகளை எதிர்த்துப் போரிடுவது என்பது இன்றே எவ்வளவு கடினம் என்பதை நம்மால் உணர முடியும், ஆனால் அதை அன்றே சாத்திமாக்கியவர் பூலே. தனக்கு நேர்ந்த அவமானம் இன்னொருவருக்கு நடக்கக்கூடாது என்ற அந்த வைராக்கியம்தான் அவரை மகாத்மா என்று போற்றுமளவுக்கு உயர்த்தியது.

உயர்ந்த சாதியினர் என்று கருதப்பட்ட சாதியில் பிறந்த பெண்களுக்குக் கூட கல்வி மறுக்கப்பட்டக் காலம் அது. ஆனால் அன்று தாழ்த்தப்பட்டப் பெண்களின் கல்வி ஜோதிராவ் மற்றும் அவர் மனைவி சாவித்ரிபாய் மூலம் சாத்தியமானது. விதவைகள் மறுவாழ்வு, விதவைகள் மறுமணம், சாதிமறுப்புத் திருமணம் என்று ஜோதிராவ் மற்றும் அவர் மனைவி சாவித்ரிபாய் செய்த சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட செயல்கள் கணக்கிலடங்காது. வித்தல்ராவ் கிருஷ்ணாஜி வன்டேகர் (Vithalrao Krishnaji Vandekar) அவர்கள் 1888ம் ஆண்டு மே மாதம் 11ம் நாள் நடந்த ஒரு கூட்டத்தில் ஜோதிராவ் பூலே அவர்களை மகாத்மா என்று முதலில் அழைத்தார். மகாத்மா காந்திக்கு முந்தைய மகாத்மா ஜோதிராவ் பூலே அவர்கள். வித்தல்ராவ், ஜோதிராவ் பூலேவுக்கு மட்டும் மகாத்மா பட்டம் அளித்துப் பெருமைப்படுத்தினார். நம்மைப் பொறுத்தவரை ஜோதிராவ் பூலே மற்றும் அவர் மனைவி சாவித்ரிபாய் பூலே இருவருமே மகாத்மாக்கள்தான்.

நன்றி :

கருத்துகள் இல்லை: