30 நவ., 2020

இலக்கிய இன்பம் : ஹெமிங்வேயின், "கிழவனும் கடலும்"

27/11/2020

கிழவனும் கடலும்
-------------------------------

இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான நோபல் பரிசையும், புலிட்சர் விருதையும் வென்ற "The old man and the sea" நாவல் உலகப்புகழ்பெற்றது. 1958, 1990 மற்றும் 1999ல் அனிமேஷன் திரைப்படம் என மும்முறை திரைக்கதையாக வெள்ளித்திரை கண்டுள்ளது இந்நூல்.

எண்பத்து நான்கு நாட்களும் வெறுங்கையுடன் திரும்பும் முதிய மீனவர் சாந்தியாகோ, தனது எண்பத்தைந்தாவது நாள் பயணத்தில் கிடைத்திருக்கும் பிரம்மாண்டமான மார்லினை(பெரிய மீன்வகை) கரைக்கு பிடித்துவர எண்ணுகிறார், அதனுடன் போர் புரிந்து கடற்கரை குடியலை நோக்கி செல்ல எத்தனிக்கும் மூத்தோரின் தடங்கல்களும் அசுர போராட்டமுமே கதை.

பொதுவாகவே சமூகத்தில் சிறார்களுக்கும் மூப்பு எய்தியவர்களுக்கும் உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. ஆதலால் தான் சிறுவர்கள் தாம் உடனே வளர்ந்து பெரிய ஆளாக வேண்டும் என்று நினைக்கின்றனர். அம்மா அப்பா அணியும் ஆடைகள், பேச்சுவழக்கு, உடல்மொழி, வழக்காடல்கள் என்று அனைத்தையும் நகலெடுத்து நடைமுறையில் பிரதிபலிப்பது அவர்களின் இயல்பு. ஏனென்றால் அடிப்படையாக இவ்வுலகம் பணம் படைத்தவர்களுக்கும், நடுத்தர வயதினருக்கும் குடும்பத்தலைவர்களுக்கும்  உண்டானது. ஆகையால் தங்கள் உலகத்திலிருந்து ராக்கெட் வேகத்தில் வயதைக் கடந்திடவே ஆசைப்படுகின்றனர். அதேசமயம் வயோதிகர்கள் வாழ்வில் துணையையிழந்து, வெறுமையோடு நாட்களைக் கழிக்கின்றனர். அவர்களுக்கு இச்சமுதாயம் அளிக்கும் நிரந்தர பரிசு தனிமை. அதிலும் அன்றாடங்காய்ச்சிகளாக நாட்களைக் கடத்துகின்ற வயதானவர்களின் நிலை கொடுமையிலும் கொடுமை. 

 இவ்வாறிருக்க, வயதான நம் கதை நாயகன் சாந்தியாகோ தனிமையில் வாழ்வை ஓட்டி வருகிறார். தன்னை அதிர்ஷ்டமில்லாதவனாக எண்ணி வருந்துகிறார். எண்பத்து நான்கு நாட்களும் மீனேதும் கிடைக்காத விரக்தியில் தோய்கிறார். முன் சிலநாட்கள் சிறுவன் மனோலினுடன் மீன்பிடிக்க சென்று ஒன்றுமே பிடிபடாமல் வந்ததையொட்டி, சிறுவனின் பெற்றோர்கள் அவனை வேறொரு படகிற்கு வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். தனிமையின் துயரம், தோல்வியின் முகம் என நொந்துகொண்டிருக்கும் கிழவர் தன்னம்பிக்கை ஒன்றையே துணைகொண்டு மற்றுமொரு நாள் கடற்பயணத்தைத் துவங்குகிறார். தனது புது நாளில் பயணிக்கும் கிழவருக்கு படகைவிட நீளமுடைய 'மார்லின்' என்கிற மீனொன்று தூண்டினில் அகப்படுகிறது. தூண்டிலில் மாட்டிக்கொண்ட மீனைத் தக்கவைத்துக்கொள்ள தன் பலம் மட்டும் பிரயோகித்துப் பார்க்கிறார். இயன்றவரை தோள், கை, கால்களை உபயோகப்படுத்தி இதுவரை தன் வாழ்நாலில்  கண்டிராத அரிய பொக்கிஷமான அம்மீனை நிலைநிறுத்த முயல்கிறார். ஒவ்வொருமுறையும் உளச்சோர்வடையும் போதும், ஒருவேளை தற்சமயம் சிறுவன் தம்முடன் இருந்திருந்தால் இன்னும் சற்று சுலபமாக இருந்திருக்குமே என்று தொடர்ந்து எண்ணிக்கொண்டே மீனுடன் போராடுகிறார். 

பொதுவாக, கப்பலில் பயணம் செய்கையில் நிலப்பரப்பை நாம் மெல்ல மெல்ல இழக்கத் தொடங்குகிறோம். அகன்ற முடிவில்லா நீர்ப்பரப்பு நம்மை முழுவதுமாக விழுங்கிவிடுகிறது. தற்போதெல்லாம் தொலைதொடர்பு வசதிகள் ஏராளமாக உள்ளன. எழுபது எண்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் கடலுக்குச் செல்லும் ஒருவருக்கு துணையெல்லாம் தனிமை மட்டுமே. வானத்து நட்சத்திரங்கள், நாள்தோறும் உதயமாகி அஸ்தமிக்கும் சந்திரன், சுட்டெரிக்கும் கதிரவன், எங்கோ இருந்து திடீரென கடல்கடந்து வரும் ஒன்று இரண்டு பறவைகள், தூண்டிலில் மாட்ட காத்துக்கொண்டு படகைச் சுற்றும் மீன்கள், ஏற்கனவே பிடிபட்ட இறால்கள் நண்டுகள் இவை மட்டும்தான் வீட்டை விட்டு விலகி தனித்து கடலில் பயணிக்கும் மீனவன் ஒருவனின் உற்ற துணைகள்.  சாதாரண மனிதர்களுக்கே உண்டான மனக்கசப்புகள், நம்பிக்கையின்மை, விரக்தி, ஒவ்வாமை எல்லாமே அந்த நாளை வீணடிக்க அவரைச் சூழ்ந்துகொண்டே இருந்தது.  இருந்தும், அவர் ஒருபோதும் கடலை அவமதிப்பதில்லை. உறவாக எண்ணி வழிபடுகிறார். இயற்கையை தோழனாக சிநேகம் கொள்கிறார்.

கிழவர் அல்லும் பகலும் பயணிக்கையில், பல்வேறு வித அகப்போராட்டங்களுக்கு உடன்படுகிறார். அவநம்பிக்கையும், தனிமையின் துயரமும் மேலோங்கி இருக்கிறது. உதவிக்கு சிறுவன் இருந்திருந்தால் எவ்வளவு எளிமையாக வேலை முடியும் என அடிக்கடி நினைத்துப்பார்க்கிறார். பெரிய மார்லின் தூண்டிலில் மாட்டி தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், தனது மனத்துடன் தத்துவ உரையாடலை மேற்கொள்கிறார். மனக் குழப்பங்களுக்கு ஆளாகின்றார். அகப்போராட்டமும், புறத்தில் மீனுடனான வெற்றிக்கான போராட்டமும் நித்தமும்  அலைக்கழிக்கிறது. தனது கடந்தகால வாழ்க்கையையும், முந்தைய கால வீர தீர சாகசங்களையும், பிடித்தமான பேஸ்பால் நாயகர்களையும் குறித்து எண்ணிக்கொண்டே நேரத்தை நகர்த்துகிறார். நாமும் அவ்வாறுதானே தனிமையில் கடந்த காலத்தைய கொண்டாட்டங்களை நினைத்து மகிழ்கிறோம், பிரிவை நோக்கி வருந்துகிறோம், கசப்பான நிகழ்வுகள் குறித்து கவலையடைகிறோம். கடந்தகாலம் என்பது அசைபோட மனிதர்களுக்கு வாய்த்த பொக்கிஷம். 

என்ன தான், மார்லினுடனான போராட்டம் சோர்வை அளித்தாலும், தன் உடலை வலுப்படுத்தி, மனதை ஒன்றுபடுத்தி இயற்கையுடனான போரில் வெற்றி பெற தொடந்து முயற்சிக்கிறார் அவர். ஒரு கட்டத்தில் ஒருவழியாக மார்லினை வீழ்த்தி, படகோடு பிணைத்து கடற்கரைக்குச் செல்ல தயாராகிறார்.

இடைஞ்சல்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஆரம்பிக்கிறது. கூர்மையான பற்களுடைய சுறாக்கள் சூழ்ந்து, அக்கிழவரின் அரிதான பரிசுப்பொருளை பங்குபோட துவங்குகிறது. தடைகளை துடுப்புகொண்டு துரத்த முயன்று, ஒரு கட்டத்திற்குப் பின் தோல்வியே கிழவருக்கு பரிசாகக் கிடைக்கிறது. எண்பத்தைந்து நாட்களுக்குப் பின் கிடைத்த மிகப்பெரிய சொத்தும் கைவிட்டு விலகியதை அவரால் ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. கடந்த நாட்களில் உண்டான உடல் மற்றும் மனச்சோர்வும் சமகால இழப்பும், தான் அதிர்ஷமில்லாதவன் என்பதனை மீண்டும் உறுதிபடுத்தியது போலவே தோன்றுகிறது. பின் குடிலுக்கு சென்றதும் சிறுவன் கடலில் நடந்ததையெல்லாம் கேட்டு ஆச்சரியப்பட்டு போய், இனி தானும் அவருடன் மீன்பிடிக்கச் சென்று நிறைய கற்றுக்கொள்ள விரும்புவதாக கூறுகிறான். தாத்தா பாட்டிகளை பேரன்பேத்திகள் உணர்ந்துகொண்டு பரஸ்பரம் அன்பு செலுத்துவது போல் வேறெந்த உறவிலும் உண்டோ?

படகுடன் சதைப்பற்று முற்றிலும் நீங்கி இணைத்து கட்டப்பட்டிருக்கும்  மார்லின் ஒரு "படிமமாகவே" என்னுள் பதிந்துவிட்டது. படகு மானுட உடலென்றால் மார்லின் காலம் - கூரிய பற்கள் கொண்ட கொடூர  சுறாக்கள் காலத்தை  விழுங்கும் சமூக ஊடகங்கள், பொழுதுபோக்குகள், வீண் சச்சரவுகள், மோதல்கள், வறுமை, கல்வி, குடும்பம். இறுதியில் சாந்தியாகோ மாதிரியே தோல் சுருங்கி மூப்பெய்தி அனைத்தையும் இழந்து பின்னர் எஞ்சியிருப்பது, சொற்ப சதையும், எலும்பும். இது வாழ்க்கையின் எவ்வளவு பெரிய தரிசனம். 

இன்னுமொரு பார்வையில், படகு தான் பொதுத்திட்டம் என்றால், அரசியல்வாதிகள் - சுறாக்கள், அவற்றின் வாய்களுக்கு கிடைத்தது போக, மிஞ்சியிருக்கும் பணமுடிப்பு மட்டுமே திட்டமாக நிறைவேறுகிறது. பாமர மக்கள்  தான் இங்கு ஏமாந்து களைப்படைந்த சாந்தியோகா கிழவன்.

தனிமனிதனுக்கும் இயற்கைக்கும் இடையாயான மோதல்கள்,  வாழ்க்கையின் தாண்டவங்கள், தனிமை ஏற்படுத்தும் உளச்சிக்கல்கள், தத்துவார்த்த உரையாடல்கள் என பல்வேறு தளங்களில் ஊடுருவி நகர்ந்துகொண்டே செல்கிறது குறுநாவல். மீனவனொருவனின் கடல்பயணத்தை சகபயணியாய் கூடவே பயணித்து கவனிக்க வைத்ததில் இது ஒரு சிறந்த புத்தகம். பல்வேறு திசைகளிலிருந்து வாசித்து ஆழ புரிந்துகொள்ள வேண்டிய புத்தகம்.

என்றும் பேரன்புடன்,
தி.ராம் குமார்❤
 (ramkumartrk2@gmail. Com)

#RM096 #RM96 #ReadingMarathon_2020 20/25

நன்றி :

கருத்துகள் இல்லை: