எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து :
நூலக மனிதர்கள் 23 - புத்தகங்களின் நிழலில்
நூலகத்தின் அருகிலே அவரது மெக்கானிக் ஷாப் இருந்தது. மணி என்ற அந்த மெக்கானிக் அடிக்கடி நூலகத்திற்கு வருவதைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒருமுறை கூட அவர் புத்தகம் எடுத்துப் போவதைப் பார்க்கவில்லை. நூலகத்திலும் நாளிதழ் படிப்பதோ, வார இதழ்களைப் புரட்டுவதோ கிடையாது. பெரும்பாலும் மூலையில் உள்ள மரபெஞ்சில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.
மாலை நேரமாக இருந்தால் பேப்பர் படிக்கும் இடத்தில் நின்று கொண்டிருப்பார். படிக்காமல் எதற்காக இப்படி நின்று கொண்டேயிருக்கிறார் என்று யோசித்திருக்கிறேன். ஒரு நாள் மணியிடம் எனது நண்பனின் பைக்கை ரிப்பேர் செய்யச் சென்றிருந்த போது அவர் என்னை அடையாளம் கண்டு கொண்டு சிரித்தார்
“உங்களை லைப்ரரியிலே பாத்துருக்கேன். அடிக்கடி வருவீங்க“ என்றார்
“உங்களையும் பார்த்திருக்கேன். ஏன் ஒரு புக் கூட நீங்க எடுத்துட்டு போறதில்லை. நேரமில்லையா“ என்று கேட்டேன்
“எனக்குப் படிக்கத் தெரியாது சார். கைநாட்டு. ஆனா படிக்கணும்னு ரொம்ப ஆசை. அதான் படிச்சவங்க இருக்கிற இடத்தில் போய் நின்னா நாலு வார்த்தை காதுல விழுமே. அதுக்குத் தான் லைப்ரரிக்கு வர்றேன்“ என்றார்.
“பள்ளிக்கூடமே போனதில்லையா“
“போனேன் சார். ஆனா படிப்பு மண்டையில ஏறலை. மூணாம் வகுப்பு படிக்கிறப்போ எங்கம்மா செத்துப் போச்சு. என்னையும் என் தங்கச்சியையும் பாட்டி கூட்டிகிட்டுப் போயிருச்சி. கடலாடி கிட்ட மூக்கையூர்னு சின்னக் கிராமம். அங்கே போய்ப் படிக்கலை. ஆடு மேய்ச்சிகிட்டு இருந்தேன். பதினைந்து வயசு வரைக்கும் மூக்கையூர்ல தான் இருந்தேன். அப்போ முத்து அண்ணன்னு தெரிஞ்சவர். அவர் தான் என்னை அருப்புக் கோட்டையில் ஒரு மெக்கானிக் கிட்ட வேலைக்குச் சேர்த்துவிட்டார். அப்படியே தொழில் பழகி நானும் ஒரு மெக்கானிக் ஆகிட்டேன். என் பொண்டாட்டி இந்த ஊர். அதான் இங்கே வந்து மெக்கானிக் ஷாப் போட்டுட்டேன். ஏதோ பிழைப்பு ஒடுது.“
“லைப்ரரியில் வந்து என்ன செய்வீங்க “
“சாயங்காலம் வந்தா பேப்பர்ல போட்டு இருக்க விஷயத்தைப் பற்றி பேசிகிடுறதை கேட்பேன். கோபாலகிருஷ்ணன்னு ஒரு சார் அங்கே வந்து பழக்கம் ஆகிட்டாரு. அவரு நம்ம வொர்க் ஷாப்புக்கு வருவார். படிச்ச புத்தகம் பற்றிச் சொல்வார். வேலை செய்துகிட்டே கேட்டுகிட்டு இருப்பேன். புத்தகம் படிக்கிறவங்களைக் கண்டால் எனக்குப் பெரிய மரியாதை சார். படிச்சவங்களை மாதிரி நம்மாலே பேச முடியுமா. யோசிக்க முடியுமா. என் மகள் திவ்யா நாலாம் வகுப்பு படிக்கிறா. அவளை நிறையப் படிக்க வைச்சி பெரிய வேலைக்கு அனுப்பணும்னு ஆசைப்படுறேன்“
படிக்கத் தெரியாத ஒருவர் இப்படி நூலகத்திற்குத் தினமும் வந்து நாலு நல்ல வார்த்தைகளைத் தெரிந்து கொண்டு போக நினைப்பது எவ்வளவு உயர்வான விஷயம். இந்த மனது யாருக்கு வரும்.
மணி ஆதங்கமாகச் சொன்னார்.
“என்னை மாதிரி படிக்கத் தெரியாத ஆட்களுக்கு தினம் ஒருமணி நேரம் லைப்ரரியிலே யாராவது புத்தகம் படிச்சி சொன்னா கேட்டுகிடுவோம். நாம தெரிஞ்சிகிட வேண்டியது எவ்வளவோ இருக்கு. அன்னைக்குக் காமராஜரை பற்றி ஒரு புத்தகம் கொண்டு வந்து கோபாலகிருஷ்ணன் சார் காட்டுனார். அதுல போட்டு இருந்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இந்த விருதுநகர்ல எத்தனை பேருக்கு அந்த விஷயம் தெரியும். படிச்சா தானே தெரிஞ்சிகிட முடியும்“
“உங்களுக்கு இருக்கிற ஆர்வம் பலருக்கும் இல்லையே “என்றேன்
“படிக்காமல் போயிட்டமேனு தினந்தினம் வருத்தப்படுகிறேன். என்னால முடிஞ்சது இப்படி ஒரமா நின்னு நாலு பேரு பேசுறதை கேட்டுத் தெரிஞ்சிகிடுறது தான்“
மணியைப் போலப் படிப்பின், புத்தகங்களின் அருமை தெரிந்த பலர் இருக்கிறார்கள். அவர்களுக்குப் படிக்க இயலவில்லை. வறுமையும் குடும்ப நெருக்கடிகளும் வாழ்க்கையைத் திசைமாற்றியிருக்கிறது. ஆனால் அந்த விருப்பத்தை அவர்கள் கைவிடவில்லை.
அதன் பிறகு நூலகத்தில் மணியைப் பார்த்தால் அவர் ஆசையாக என் கையிலுள்ள புத்தகங்களின் பெயர்களைக் கேட்பார். அது எதைப்பற்றிய புத்தகம் என்று தெரிந்து கொள்வார். புத்தகங்களின் மீதான அவரது ஆசை கண்ணில் ஒளிர்ந்து கொண்டிருப்பதை உணர்வேன். படித்த பலரையும் விடவும் மணியின் மீது எனக்குப் பெருமதிப்பு உருவாகியிருந்தது.
ஒராயிரம் மனிதர்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடி தங்கள் அனுபவங்களை. ஞானத்தை, புதிய சிந்தனைகளை, அறிந்த உண்மைகளை, கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து தர முன்வருகிறார்கள் என்றால் அந்தச் சபை எப்படியிருக்கும். அதை யாராவது வேண்டாம் என்று ஒதுக்குவார்களா.
பொதுநூலகம் என்பது அது போன்ற சபை தான். அங்கே மனிதர்கள் புத்தக வடிவில் இருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகமும் ஒரு வழிகாட்டுதலை மேற்கொள்கிறது. தேடிச் செலவு செய்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அனுபவத்தை எளிதாகத் தந்துவிடுகிறது.
புயலிலும் மழையிலும் போராடிக் கடல் கடந்து சீனாவிற்குப் போய் வந்த மார்க்கோ போலோ தன்னுடைய பயணத்தைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் எழுதிய புத்தகம் எந்தச் சிரமமும் இல்லாமல் ஒரு வாசகனுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே சீனாவினைப் புரிய வைத்துவிடுகிறது. இது தானே உண்மையான வழிகாட்டுதல்.
சூரியனின் வெளிச்சம் போல ஒவ்வொரு புத்தகம் திறக்கப்படும் போதும் அதனுள்ளிருந்து மாயவெளிச்சம் ஒன்று வெளிப்படவே செய்கிறது. அந்த வெளிச்சம் உங்கள் மனதை தூய்மைப்படுத்துகிறது. உங்கள் அறிவை விசாலமாக்குகிறது. உங்கள் வாழ்க்கையைப் புதிய பாதையில் பயணிக்கச் செய்கிறது.
என்னோடு கல்லூரியில் படித்த நண்பன் ஒருவனின் அழைப்பில் வேப்பங்குளம் என்ற அவனது ஊருக்குப் போயிருந்தேன். வீட்டில் அவனது அம்மா மட்டும் தானிருந்தார். சிறிய குடிசை வீடு. அவனது அக்கா கல்யாணம் ஆகி புதுக்கோட்டையில் வசித்துவந்தார். அப்பா இறந்துவிட்டார். அம்மா விவசாயக் கூலி வேலை செய்து நண்பனைப் படிக்க வைத்தார். மிகவும் கஷ்டப்படுகிற குடும்பம். அவர்கள் வீட்டைப் பார்க்கும் வரை இந்த உண்மைகள் எதுவும் எனக்குத் தெரியாது.
நாங்கள் ஏதாவது பேசிக் கொண்டிருந்தால் அவனது அம்மா மிக உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பார். சாப்பாடு பரிமாறும் போது அவரது கைககள் நடுங்குவதைக் கண்டேன்.
நண்பன் வேடிக்கையான குரலில் சொன்னான்
“எங்கம்மாவுக்குப் படிச்ச ஆட்களைக் கண்டா கைநடுங்க ஆரம்பிச்சிரும். ஒரு வார்த்தை பேசாது. உன் கூட என்னமோ நாலு வார்த்தை பேசி இருக்கு“
“நானும் உங்க பிள்ளை மாதிரி தான்மா“. என்றேன்
“காலேஜ்ல படிக்கிற புள்ளைக்கு நம்மவீட்டு சாப்பாடு பிடிக்குமா“ என்று கேட்டார்
“ருசியா இருக்கு“ என்றேன்
“படிக்கிற புள்ளைகள் நிறையச் சாப்பிடணும். அப்போ தான் படிச்சது புத்தியில் ஏறும்“ என்று சொன்னார் நண்பனின் அம்மா
நண்பன் சிரித்தபடியே என்னிடம் சொன்னான்
“இப்படி தான் வீட்டுக்கு வந்துட்டா. எந்நேரமும் எதையாவது சாப்பிடக் குடுத்துகிட்டே இருக்கும். இதை விட நான் புத்தகம் படிச்சிகிட்டு இருந்தா. அதைக் கண்ணு இமைக்காமல் பார்த்துகிட்டே இருக்கும். சில நாள் எங்கம்மா கண்ணுல தானா கண்ணீர் வந்துரும். எங்க தலைமுறையில் நான் தான் முதல்ல காலேஜ்ல படிக்கிறேன். வீட்ல ஒரு ஆள் படிச்சது கிடையாது. “
மகன் புத்தகம் படிப்பதை கண்டு அம்மாவின் கண்கள் கசிவது நிஜமானது. அது படிப்பு தான் அவர்களைக் கரையேற்றப் போகிறது என்ற நம்பிக்கையில் பீறிடும் கண்ணீர்.
நண்பன் சொன்னான்
“நான் காலேஜ்க்கு போயிட்ட பிறகு வீட்ல எங்க அம்மா ஒரு ஆளை என் பொஸ்தகத்தைத் தொட விடாது. அடிக்கடி அந்தப் புத்தகங்களைக் கண்ல தொட்டு ஒத்துகிடும். நமக்கெல்லாம் புத்தகம் வெறும் அச்சடிச்ச காகிதம். ஆனால் எங்க அம்மாவுக்கு அது தான் சாமி. “
நண்பனின் அம்மாவைப் போல எங்கோ கிராமத்தில் ஒடியோடி உழைத்து தன் பிள்ளைகளைப் படிக்க வைத்த தாயிற்குப் புத்தகத்தின் மதிப்புத் தெரிந்திருக்கிறது. ஆனால் கைநிறைய சம்பளம் வாங்குகின்ற, பெரிய வேலை பார்க்கிற மனிதர்களுக்குத் தான் புத்தகம் வேண்டாத பொருளாகத் தெரிகிறது.
பொதுநூலகம் எத்தனையோ எளிய மனிதர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்திருக்கிறது. பொது நூலகத்திற்குத் தினமும் வந்து படித்துக் குறிப்பெடுத்து போட்டித் தேர்வுகள் எழுதி வெற்றிபெற்றவர்களுக்குத் தெரியும் அதன் முக்கியத்துவம்.
நூலகத்தின் கதவுகள் திறந்திருந்தாலும் அதற்குள் நுழைவதற்கும் பயன்படுத்துவதற்கும் எத்தனையே பேர் தயங்கித் தயங்கியே காத்திருக்கிறார்கள்.
ஒருவர் நூலகத்தின் படிக்கட்டுகளைக் கடந்து உள்ளே போகிறார் என்றால் அவர் வாழ்வின் மாற்றத்தை நோக்கி ஒரு படி முன்னெடுத்து வைக்கிறார் என்றே நினைப்பேன். காரணம் நான் அப்படித் தானே உருவானேன்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக