28 பிப்., 2021

இன்றைய திருமந்திரம்

திருமந்திரம் - பாடல் #1046: நான்காம் தந்திரம் - 5. சக்தி பேதம் (சக்தியின் வடிவமான மந்திரமும் திரிபுரை சக்கரமும்)

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துப்
பரிபுரை நாரணி யாம்பல வன்னத்
திருள்புரை யீசி மனோன்மனி யென்ன
வருபல வாய்நிற்கு மாமாது தானே.

விளக்கம்:

பாடல் #1045 இல் உள்ளபடி உருவமாகவும் உருவம் இல்லாததாகவும் இருக்கின்ற திரிபுரை சக்தி சுந்தரி, அந்தரி, சிந்து, நாரணி, மனோன்மனி ஆகிய ஐந்து பெயர்களைக் கொண்ட தேவியர்களாக இருந்து சக்தியளிக்கும் மாபெரும் சக்தியாக இருக்கின்றாள்.

ஐந்து தேவியர்கள்:

சுந்தரி - பேரழகு உடைய வெள்ளை நிறத்தைக் கொண்டவள் (சரஸ்வதி)
அந்தரி - வானம் போன்ற செம்மையான கருமை நிறத்தைக் கொண்டவள் (பார்வதி)
சிந்துப் பரிபுரை - செந்தூரம் போன்ற சிவப்பு நிறத்தைக் கொண்டவள் (மகேஸ்வரி)
நாரணி - நாராயணனுக்கு தேவியாகிய நீல நிறத்தைக் கொண்டவள் (லட்சுமி)
இருள்புரை ஈசி மனோன்மனி - அண்டத்து இருளைப் போன்ற கருமை நிறத்தைக் கொண்டவள் (மனோன்மனி)

குறிப்பு: பிரம்மாவின் படைப்புத் தொழிலுக்கு சக்தியாக சரஸ்வதியும், திருமாலின் காக்கும் தொழிலுக்கு சக்தியாக லட்சுமியும், உருத்திரனின் அழிக்கும் தொழிலுக்கு சக்தியாக பார்வதியும், மகேஸ்வரனின் மறைத்தல் தொழிலுக்கு சக்தியாக மகேஸ்வரியும், சதாசிவனின் அருளல் தொழிலுக்கு சக்தியாக மனோன்மனியும் இருக்கிறார்கள்.

நன்றி :

கருத்துகள் இல்லை: