12 பிப்., 2008

எனக்குப் பிடித்த கவிதை-20: "அழகல்ல காதலனே! "

எனக்குப் பிடித்த கவிதை-20

அழகல்ல காதலனே!

கடந்து கொண்டிருக்கிறது
காலம்!
கரைந்து கொண்டிருக்கிறது
வாலிபம்!

கண்களைச்சுற்றிக்
கருப்பு வளையங்களை
மலர் வளையமாக
வைத்து மனதை
இம்சிக்கிறது
இயற்கை!

அலைபாயும் கூந்தலில்
'சிகைப்பூச்சு'க்குள்
சிக்க மறுத்து
அங்கொன்றும்,
இங்கொன்றுமாக
ஆடிப் படம்எடுக்கிறது
வெள்ளை நாகமாய்
நரைமுடி!

என்வீடு கடக்கும்
எல்லாரும்
ஏளனப் பார்வையால்
இம்சிக்கின்றனர் என்னை!

எங்கிருக்கிறாய்
எனக்கான
பிருத்திவி ராஜனே?
உன் குதிரைக்குக்
கொள்ளும்,
தண்ணீரும் கொடுத்து
சிறை எடுக்கச்
சீக்கிரம் வா!

இல்லை என்றால்
எள்ளும், தண்ணீரும்
இறைக்க வேண்டியிருக்கும்!

காதல் நோயிலிருந்து
என்னைக்
காப்பாற்றாமல் இருப்பது
உனக்கு -
அழகல்ல காதலனே!

- ஜெயகவிதா, கோவை

நன்றி : தினமலர் வாரமலர் (கவிதைச் சோலை), பிப்ரவரி 3, 2008

கருத்துகள் இல்லை: