திரு க.சந்தானம் அவர்கள் எழுதிய "காந்தி காட்டிய வழி" என்ற குறுநூலிலிருந்து சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு:
"இறைவனிடம் ஆழ்ந்த பக்தியுண்டானால், அவனைப் பற்றித் தியானிப்பதும், அவனிடம் பிரார்த்தனை செய்வதும் சகஜ ஒழுக்கங்களாகின்றன. தினந்தோறும் அதிகாலையிலும், மாலையிலும் எங்கிருப்பினும் காந்தியடிகள் பஜனை செய்யத் தவறமாட்டார். அப்பொழுது எவர் விரும்பினாலும் அதில் சேர்ந்து கொள்ளலாம். அப்பொழுது பகவத் கீதையிலிருந்து சுலோகங்களும், துளசிதாஸ், சூர்தாஸ், கபீர், நரசி மேத்தா முதலிய பக்த சிகாமணிகளின் கீர்த்தனைகளும் பாடப்படும். பிற்காலங்களில் குரான், பைபிள் முதலிய மற்ற மதங்களிலிருந்தும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஆனால் அவர் தமது பஜனையை ஒரு கட்டாயச் சடங்காகச் செய்யவில்லை. பஜனை மூலம் ஆன்மா மலமொழிந்து தூய்மை பெறுவதொன்றே நோக்காக இருந்ததால், தனி நபருக்கோ, சமூகத்திற்கோ, நாட்டிற்கோ எவ்விதக் கோரிக்கையும் செய்து பிரார்த்திப்பதில்லை.
உடலுக்குக் கதிரவன் ஒளியும், பரிசுத்த வாயுவும் போலவேதான், ஆன்மாவிற்கு பக்தியும், தியானமும், பஜனையும். ஆனால் அவைகளே வாழ்க்கையாக மாட்டா. பக்தியையும், பஜனையையுமே வாழ்க்கையின் முக்கிய அலுவல்களாகக் கொண்டிருக்கும் மத சம்பிரதாயங்களைக் காந்தியடிகள் ஏற்கவில்லை. மடங்கள், பீடங்கள், சந்நியாச விடுதிகளைக் காந்தியடிகள் ஆதரிக்கவில்லை. இவ்வுலகில் தனது உடல், மனம், உள்ளங்களால் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து மதம் எவருக்கும் விலக்கு அளிக்க முடியாது என்று கருதினார். பணிபுரிந்துகொண்டே மனிதன் நூறாண்டு வாழ விரும்பவேண்டும். 'தூய முறையில் செய்யும் கருமத்தால் பந்தம் ஏற்படாது' என்று கூறுகிறது ஈசாவாஸ்ய உபநிடதம். இதோடு 'உனது கடமை கருமம் செய்வதே; அதன் பலனை விரும்புவதல்ல. கருமத்தின் பலனைக் கருதாதே; கருமத்தைக் கைவிடாதே' என்ற பகவத் கீதையின் உபதேசத்தையும் காட்டி, அவற்றைத் தமது வாழ்க்கைக்கும் மதத்திற்கும் மூலக்கொள்கைகளாகக் கொண்டார்.
காந்தியடிகள் சிறந்த கர்மயோகி. பகவத் கீதையின் முக்கிய உபதேசம் கர்மயோகமே என்றும், மற்ற ஞான, ராஜயோக பக்தி யோகங்கள் அதற்குப் பேருதவியளிக்கும் அங்கங்கள் என்றும் லோகமான்ய திலகர் செய்த வியாக்கியானத்தை காந்தியடிகள் முற்றிலும் ஆமோதித்தார். திலகர் பலவித அரசியல், கல்விப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோதிலும், உண்மையில் ஒரு தத்துவ ஞானி, தீர்க்கதரிசி. காந்தியடிகளோ, பல துறைகளில் புரட்சிகரமான எண்ணங்களை வெளியிட்டபோதும், கர்ம வீரராக வாழ்ந்தார்.
நன்றி: "காந்தி காட்டிய வழி", எழுதியவர்: க.சந்தானம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக