20 ஜன., 2009

என்ன நடக்கிறது?-9: "ஒரே மழைக்கு சாலைகள் வாய் பிளந்தது ஏன்?"

சமீபத்தில் போடப்பட்ட பெரும்பாலான சாலைகளில் தற்போது ஜல்லி கற்கள்தான் உள்ளன. இதுபற்றி, சாலைகளைப் போட்ட கான்ட்ராக்டர்களோ, நிதி ஒதுக்கிய அரசோ கவலைப்படவில்லை. மாறாக, மீண்டும் அந்த இடங்களில் சாலைகளைப்போட நிதி ஒதுக்கும் பணியைத் துவக்கிவிட்டனர்.
முந்தைய காலங்களில் சாலைகள் சீரமைக்கப்பட்டால், மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்தப் பிரச்னையும் இருக்காது; அவ்வளவு தரமானதாக இருந்தது. ஆனால், தற்போது போடப்படும் சாலைகள் ஓராண்டுகூட தாக்குப்பிடிப்பதில்லை.
சமீபகாலமாக, தமிழகம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் ஏராளமான சாலைப்பணிகள் நடந்தன. தற்போது பெய்த மழையில், இந்தப்பணிகளின் தரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சாலைகளின் மேல் மணல் போல ஜல்லிக்கல்தான் உள்ளன. இவற்றில் பல சாலைகள், ஆறு மதங்களுக்குள் போடப்பட்டவை.
தரமற்ற சாலைப்பணிகள் மேற்கொள்வதற்கு முக்கிய காரணம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான். மாநகராட்சி அளவில் சாலைப்பணி நடந்தால், கவுன்சிலரில் இருந்து, அனைத்து தரப்புக்கும் கமிஷன் கொடுத்தால்தான் டெண்டரே கிடைக்கும். முப்பது சதவிகிதம் வரை கமிஷனாகக் கொடுத்துவிட்டு, பதினைந்து சதவிகிதம் லாபமும் வைத்து காண்ட்ராக்டர்கள் பனி செய்தால், ஐம்பத்தைந்து சதவிகித அளவில்தான் தரம் இருக்கும்.
நெடுஞ்சாலைத்துறை மூலம் போடப்படும் சாலைகளின் தரமும் இவ்வாறுதான் உள்ளன. தற்போதுள்ள நிலையில், இதுவே அதிக பட்ச தரம் என்று திருப்திப்படும் நிலையில் அதிகாரிகள் உள்ளனர். சாலைகளின் தரத்தை உறுதி செய்த பின்னர்தான் காண்ட்ராக்டர்களுக்கு முழுமையாக நிதி வழங்கப்படுகிறது. அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுத்துவிடுவதால், தரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
'சாலைப்பணிகள் மேற்கொள்ளும்போது, எந்த இடத்தில் இருந்து எந்த இடம் வரை, எத்தனை கிலோமீட்டர் தூரம் அந்தப்பணி நடைபெற்றது? பணியை மேற்கொண்ட காண்ட்ராக்டர் யார்? எந்தத் தேதியில் பணி நிறைவடைந்தது? எவ்வளவு நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டது? பணியை கண்காணித்த பொறியாளர் யார்? என்பது போன்ற விவரங்கள் சாலை ஓரத்தில் வைக்க வேண்டும்' என்ற விதியை அரசு கொண்டு வந்தது. ஆனால், இதுபோன்ற பலகைகள் பெரும்பாலும் வைக்கப்படுவதில்லை. அவ்வாறு வைத்திருந்தால், சாலைப்பணியில் நடந்த ஊழல் நிச்சயமாக அந்தந்தப் பகுதி பொதுமக்களுக்கு தெரிய வந்திருக்கும்.
சாலை போடாமலேயே போட்டதாக கணக்கு காட்டுதல், பள்ளம் மேடுகளை மட்டும் சரிசெய்துவிட்டு மொத்தமாக சாலை போட்டதாக கணக்கு காட்டுதல், அதிக நிதியை வாங்கிக்கொண்டு குறைந்த செலவில் சாலை போடுதல் போன்ற முறைகேடுகள் இதன் மூலம் தடுக்கப்பட்டிருக்கும். அடுத்ததாக, தமிழகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை மேம்பாட்டுத் திட்டம், தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தின் கீழ் பல ஆயிரம் கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பணிகளால் அரசியல்வாதிகள் பலருக்குத்தான் கோடிகள் கிடைக்கும் என்ற மக்களின் சந்தேகத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
நன்றி: தினமலர் சிறப்பு நிருபர், தினமலர், மதுரை, 7.12.2008.

கருத்துகள் இல்லை: