இன்று ஜூன் 14-ம் நாள் 'இரத்த தான தினம்' . இரத்த குரூப்களை கண்டுபிடித்த அறிவியல் மாமேதை கார்ல் லேண்ட்ஸ்டெய்னர் பிறந்தநாள். இந்நாளை உலக சுகாதார அமைப்பு 'உலக இரத்த தான தினமாக' தேர்ந்துள்ளது. இதுவரை இரத்த தானம் லட்சக்கணக்கான மனிதர்களைக் காத்துள்ளது; இன்னும் எத்தனையோ லட்சம் பேரை காப்பாற்றும். இவ்வாறு உயிர்களைக் காப்பாற்றும் அரும்பணி ஆற்றும் அனைவருக்கும் நன்றி நவிலுமுகமாக இத்தினம் கொண்டாடப் படுகிறது.
எங்கள் வீட்டைப் பொறுத்தவரை, நானறிந்த வரையில், என் தம்பி நெல்லையப்பன் கல்லூரியில் பயிலும் காலத்தில் இரத்த தானம் செய்திருக்கிறான். ஆனால் அவன் வீட்டிலோ அல்லது வெளியிலோ யாரிடமும் அதைப்பற்றி சொல்லிக்கொண்டதில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய பேப்பர்களை புரட்டிக் கொண்டிருந்தபோது தற்செயலாக இரத்த தானத்திற்காக அவனக்கு வழங்கப்பட்ட சான்றிதழைக் கண்டபிறகுதான் அவன் ரத்த தானம் செய்த உண்மை எனக்குத் தெரிந்தது.
அடுத்து எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் ரோட்டரியன் திரு முத்து.பழனியப்பன் அவர்களை இன்று நினைத்துப் பார்ப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நூறு முறைக்கும் மேலாக இரத்த தானம் செய்த சாதனையாளர் அவர். அவரது துணைவியாரும் பலமுறை ரத்த தானம் செய்துள்ளார். காரைக்குடி நகரிலுள்ள பல சேவை அமைப்புகளும் ஒருங்கிணைந்து அவருக்கு 'குருதிக்கொடை வள்ளல்' என்ற பட்டம் வழங்கி பாராட்டிச் சிறப்பித்தது நினைவிற்கு வருகிறது.
காரைக்குடி நகரில் எந்த பொதுநல நிகழ்ச்சி நடந்தாலும் அதில் திரு முத்து.பழனியப்பனின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். காரைமா நகரின் தொழில் வணிகக் கழகத்தின் நெடுநாள் தலைவர் அவர். காரைக்குடி புத்தகத் திருவிழா மூலம் அவரது இனிய நட்பு எனக்குக் கிடைத்தது. எத்தனையோ முறை நான் உதவி வேண்டி அவரிடம் சென்றிருக்கிறேன். அத்தனை முறையும் அன்போடு அவர் செய்த உதவியை எந்நாளும் என்னால் மறக்க முடியாது.
திரு முத்து.பழனியப்பன் அவர்களையும், தம்பி நெல்லையப்பனையும், அவர்களைப்போன்று தன்னலமில்லாமல் பிற உயிர்காக்க குருதிக்கொடை வழங்கிய நல்ல உள்ளங்கள் அனைவரையும் இந்நாளில் போற்றி மகிழ்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக