31 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-7:

எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப்படுவது நீறு பாக்கியமாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தமதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத்து திருவாலவாயான் திருநீறே.

என்ன நடக்கிறது?-11: "குடோனா, பள்ளியறையா?"

.... இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளை வகுப்பறையில் அடுக்கிவிட்டு, குழந்தைகளை வெட்டவெளியில் உடகாரவைத்து பாடம் நடத்திய பள்ளியை, தமிழகத்தில்தான் பார்க்க முடியும். .....

"இது உங்கள் இடத்தில்" 'வியப்பான தகவல்!' என்ற தலைப்பில் சென்னையிலிருந்து திரு கே.என்.ஸ்ரீதரன் அவர்கள் எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி. (தினமலர், ஜனவரி 30, 2010)

நன்றி: திரு கே.என்.ஸ்ரீதரன் மற்றும் தினமலர் நாளிதழ்.

சூரியின் டைரி-2: ஜனவரி 30, 2010

1. இன்று தைப்பூசம். பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருப்பர். பதின்மூன்று ஆண்டுகள் பழனிக்குப் பாதயாத்திரை சென்றிருக்கிறேன். அதில் ஏழெட்டு ஆண்டுகளாவது தைப்பூசத்தன்று அதிகாலை நான்கு மணிக்கு முன்னர் அங்கப்பிரதட்சணம் செய்து, அதன் பின் முருகப் பெருமானை வழிபட்டு வந்திருக்கிறேன். தைப்பூசத்தன்று மலையில் அங்கப்பிரதட்சணம் செய்வது எளிதல்ல. லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம். விடியுமுன் செய்வதால், மின் வெளிச்சம் மட்டுமே. கூட்டத்தில் மிதிபடும் ஆபத்து நிறையவே இருந்தது. ஆனால் நண்பர்கள் பாதுகாவலாக சுற்றிவர நின்று, உற்சாகமூட்டி, நல்லபடியாக அங்கப்பிரதட்சணம் செய்துமுடிக்க உதவியதை மறக்கமுடியாது. குறிப்பாக நண்பர் திரு வி.சுப்பிரமணியன் அவர்களையும், நண்பர் வி.சி.யையும் மறக்கமுடியாது. தைப்பூசத்தை ஒட்டி, இரண்டு அல்லது மூன்று நாட்கள் பழனியில் இருப்போம். அந்த இனிமையான நாட்களை நினைவுகூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

2. இன்று நான் நெஞ்சில் போற்றி வழிபடும் காந்தி மகானின் நினைவு நாளும்கூட. சில நாட்களாக, அண்ணலின் சுயசரிதையிலிருந்து (ஆங்கில மூலம்) ஒரு அத்தியாயமாவது படித்து வருகிறேன். ஏற்கனவே எப்போதோ படித்ததுதான் என்றாலும்கூட, அறுபது வயதுக்குமேல் அதைப் படிக்கும்போது சிலிர்க்கிறது. அவர் ஏதோ திடீரென்று மகாத்மா ஆகிவிடவில்லை. சிறுவயதிலிருந்தே சீரிய பண்புகள், மேன்மையான சிந்தனைகள் அவரிடம் இருந்தன என்பது அவரது சுயசரிதையைப் படிக்கும்போது புரிகிறது. அவரது பெற்றோர்களின், குறிப்பாக அவரது அன்னையாரின், ஒப்பற்ற முன்மாதிரி வாழ்க்கையின் தாக்கம் அவரிடம் இருந்தது தெரிய வரும்.

எங்கோ படித்த, காந்திமகானின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. காந்தியடிகள் தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய புதிதில் நடந்தது என்று நினைக்கிறேன். அப்போது சாதாரண மக்களிடையே அவர் பிரபலமாகவில்லை. அவர் ரயிலில் ஒரு மூன்றாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்துகொண்டிருந்தார். அந்தப் பெட்டியில் ஒரு பெரிய மனிதர் அடாவடியாக இடத்தை அடைத்து அமர்ந்துகொண்டு, மேலும் வெற்றிலைபோட்டு, மற்றவர்கள் சிரமத்தைப் பற்றி சிறிதும் கவலைப்படாது, உள்ளேயே துப்பிக் கொண்டிருந்தார். காந்தியடிகள் அவரிடம் குழந்தைகள், பெண்டிர் பயணம் செய்கிறார்கள்; அனைவருக்கும் நல்லதல்ல; அவ்வாறு செய்யவேண்டாம் என்று பல முறை வேண்டிக்கொண்டார். அந்தப் பெரிய மனிதரோ சற்றும் பொருட்படுத்தாது தொடர்ந்து உள்ளேயே துப்பிக்கொண்டிருந்தார். பெட்டியிலிருந்த மற்ற பயணிகள் பெரிய சண்டை, பிரச்சினை உருவாகப் போகிறது என்று பயந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் காந்தியடிகள் செய்தது அனைவரையும் வியக்க வைத்தது. அவர் தன்னுடைய கைப்பையிலிருந்த ஒரு பழைய செய்தித்தாளை எடுத்து, அதைச் சிறுசிறு துண்டுகளாக கிழித்து வைத்துக்கொண்டு, ஒவ்வொருமுறை அந்தப் பெரிய மனிதர் துப்புவதைஎல்லாம் துடைத்து பொறுமையுடன் சுத்தம் செய்துகொண்டிருந்தார். அந்த மனிதரை கடிந்து கொள்ளவோ, அவருடன் சண்டையிடவோ முயலவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தப் பெரிய மனிதருக்கு மனதில் உறுத்தியதோ என்னவோ, துப்புவதை நிறுத்திவிட்டார். அண்ணல் இறங்க வேண்டிய ஊர் வந்தபோது, அங்கே பல பெரிய மனிதர்கள் அண்ணலுக்கு மாலையிட்டு வரவேற்றதைப் பார்த்தபோதுதான் அவர் சாதாரண மனிதரல்ல என்பதை அந்தப் பெட்டியில் பயணம் செய்த மற்றவர்கள் உணர்ந்து கொண்டனர்.

காந்திமாகானின் திருவடிகளைப் போற்றி இன்றைய பதிவை நிறைவு செய்கிறேன்.

30 ஜன., 2010

இன்றைய சிந்தனைக்கு-79:

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும்.... இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான். தேடித் தேடி அலையும் மனது தொலைகிறதே.

"துள்ளாத மனமும் துள்ளும்" திரைப்படப் பாடல் வரிகள்.

திருநீற்றுப்பதிகம்-6:

அருத்தம் தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானமளிப்பது நீறு
பொருத்தம் தாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருவாலவாயான் திருநீறே.

27 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-5:

பூச இனியது நீறு புண்ணியமாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத்தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாது நீறு
தேசம் புகழ்வது நீறு திருவாலவாயன் திருநீறே.

26 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-4:

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந்தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேனந் தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.

20 ஜன., 2010

சூரியின் டைரி-1: ஜனவரி 20, 2010

ஜனவரி 20, 2010.

பனிக்காலத்தில் உணவு விஷயத்தில் சிறிது அலட்சியமாக இருந்தாலோ, அல்லது பனியிலிருந்து காக்கும் உடைகளை அணியாமல் வெளியே சென்றாலோ, அல்லது தூசி, நெடி போன்றவற்றாலோ ஆஸ்துமா தோன்றி, மூச்சு விடமுடியாமல் சிரமப்பட நேரிடும். சாதாரணமாக அக்டோபர் இறுதியிலிருந்தே இந்தத் தொல்லை ஆரம்பித்துவிடும். ஆனால் இம்முறை எச்சரிக்கையோடு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம் டிசம்பர் இறுதிவரை எந்தத் தொல்லையுமில்லாமல் இருந்தேன். டிசம்பர் இறுதியில் சென்னை செல்ல நேரிட்டது. உணவுக் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றையும் கைவிட்டதால் கடுமையான சிரமத்திற்கு ஆளானேன். இன்றுவரை முழுமையாக குணமானபாடில்லை. சில நாட்களாக தெளிவாகச் சிந்தித்ததன் விளைவாகவோ அல்லது இறை அருளாலோ சரியான மருந்தைத் தேர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய முக்கிய குறிகள் பலவற்றை உள்ளடக்கிய ஹோமியோ மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் என்ற மருந்தை மில்லெசிமல் வீரியத்தில் எடுத்துக் கொண்டேன். நோய் படிய ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் நேற்றிரவு என்னவோ தூக்கம் அடிக்கடி கேட்டது. அதன் விளைவாக காலி எழுந்திருப்பது தாமதமாகி, ஆறு மணிக்கு எழுந்தேன்.

அந்தக் காலத்தில் "கோடை மறைந்தால் இன்பம் வரும்" என்று புகழ் பெற்ற தமிழ் திரைப்படப்பாடல் உண்டு. அதைச் சற்றே மாற்றி "கோடை பிறந்தால் இன்பம் வரும்" என்று பாடத் தோன்றுகிறது.

காலைக் காப்பியைப் பருகியபின், கம்ப்யூட்டரை 'ஆன்' செய்தேன். மெயில் பாக்சைத் திறந்தேன். நான் பல மின்னஞ்சல் செய்தித்தாட்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். அவற்றில் ஒன்றன் பின் ஒன்றாக, படிக்க ஆரம்பித்தேன்.

முதலில் கேரளத்திலுள்ள பட்டம் நகரில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா நூலகத்திலிருந்து மின்னஞ்சல். அவர்களது வலைப்பூவைப் பார்வையிட்டேன்.
ஒரு அற்புதமான வலைப்பூ அது. இந்தியாவில், அது ஒரு பள்ளியின் வலைப்பூ இவ்வளவு சிறப்பாக, மேன்மையாக இருப்பது பெருமகிழ்ச்சியைத் தந்தது. உடனுக்குடன் மாற்றங்கள் செய்யப்பட்டு என்றும் புதிதாக இருப்பது முதல் சிறப்பு. எனக்குத் தெரிந்து பல அரசு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தளங்களில் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் மாற்றங்கள் செய்யப்படாமல், ஓய்வு பெற்றவர்கள், மறைந்தவர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிலிருப்பவர்கள் பட்டியலில் இருக்கும். அனைத்திற்கும் மேலாக உருப்படியாக ஒரு தகவல் இருக்காது. ஆனால் இந்த வலைப்பூவில் அவ்வளவு பயனுள்ள தகவல்கள், குறிப்பாக மாணவர்களுக்குத் தேவையான அனைத்தும்! அதன் பயன்பாடிற்குச் சிறந்த சான்று நான் அதன் 619,095-வது பார்வையாளன்!

மிகச் சிறந்த தளங்களின் இணைப்புக்கள் ('NASA Videos', 'Karan Thapar Videos', 'ஆன்லைன் டிவி', 'eBooks', 'eLibraries', 'eJournals', மேலும் பல), 'Question Banks', 'Tutorials for Various Subjects' போன்ற பல சேவைகள். எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான, தோழமையான அணுகுமுறை. இந்த வலைப்பூவின் முகவரி: http://librarykvpattom.wordpress.com.

நூலகர் எஸ்.எல்.ஃபைசல் அவர்களுக்கும், பட்டம் கேந்திரிய வித்யாலயா நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுபோல் மேலும் பத்து மின்னஞ்சல்கள் வெவ்வேறு அமைப்புகளிடமிருந்து. ஒரே நாளில் அவற்றிப்பற்றிஎல்லாம் இங்கே கூறமுடியாது. வரும் நாட்களில் சொல்கிறேன்.

அடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களது நூல், விகடன் பிரசுரமான "ஆயிரம் ஜன்னல்களிலிருந்து" ஒரு அத்தியாயமும் (சிறைச்சாலைகளைப் பற்றியும், கைதிகளைப்பற்றியது), 'இன்போசிஸ் பௌண்டஷன்' திருமதி சுதா மூர்த்தி அவர்களது 'அனுபவம் தந்த பாடங்கள்' என்ற நூலிலிருந்து ஒரு அத்தியாயம் படித்தேன்.

குளியலுக்கும், காலை உணவிற்கும் பின் எனது வலைப்பூக்களில் சில பதிவுகளைச் செய்தேன்:

SURiMOUNT: 'இன்றைய புகைப்படம்', 'இன்றைய சிந்தனை' மற்றும் 'எனது குறிப்பேடு'
சூரியோதயம் தமிழ்: 'திருநீற்றுப்பதிகத்திளிருந்து' ஒரு பாடல். மற்றும் 'இன்றைய சிந்தனைக்கு'
Ideal Education: கேரளாவிலுள்ள பட்டம் நகரில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா நூலகத்தின் வலிப்பு பற்றிய குறிப்பு.

காலை 10 மணி முதல் 12 மணி வரை 'பவர் கட்'.

'சுடோகு' போட்டேன்.

வங்கிக்குச் சென்று பணம் எடுத்தேன். BSNL அலுவலகம் சென்று போன் பில் கட்டினேன். திரும்பும் வழியில் புதிய பேருந்து நிலைய புத்தகக் கடையில் சஞ்சிகைகள் வாங்கினேன்.

வீடு திரும்பியதும் 'திருப்பாவை' சீரியல் பார்த்தேன்.

மதிய உணவிற்குப் பின் சிறிது ஓய்வு. 'World Public Library Association' அமைப்பில் நான் ஒரு சந்தா செலுத்தும் உறுப்பினன். அந்த தளத்திலிருந்து நிறைய புத்தகங்கள் 'டவுன்லோட்' செய்தேன். (இலக்கியம், கல்வி தொடர்பான நூல்கள்).

ஒரு குட்டித் தூக்கம்.

மாலையில் காந்திஜியின் 'சத்திய சோதனை' ஆங்கில நூலிலிருந்து ஒரு அத்தியாயமும், வினோபாஜியின் 'கீதைப் பேருரைகள்' ஆங்கில வடிவிலிருந்து ஒரு சில பகுதிகளையும் படித்தேன். இங்கிலாந்தில் காந்திஜி மேற்கொண்ட சுயகட்டுப்பாட்டு முயற்சிகள் படிக்க பிரமிப்பாக இருந்தன. கீதைப் பேருரைகளிளிருந்து 'சுயதர்மம்' பற்றிய தெளிவான விளக்கவுரை.

இன்றைக்கு இது போதுமென நினைக்கிறேன்.

திருநீற்றுப்பதிகம்-3:

முத்தி தருவது நீறு முனிவரணிவது நீறு
சத்தியமாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருவாலவாயான் திருநீறே.

இன்றைய சிந்தனைக்கு-78:

லட்சக்கணக்கானவர்கள் பசியிலும், அறியாமையிலும் கிடந்து உழலும்போது, அவர்கள் செலவில் கல்வி பயின்று, அவர்களை அலட்சியம் செய்கின்ற ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்பேன் - சுவாமி விவேகானந்தர்

19 ஜன., 2010

திருநீற்றுப்பதிகம்-2:

வேதத்திலுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந்தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத்தருவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப்புனல் வயல்சூழ்ந்த திருவாலவாயன் திருநீறே.

18 ஜன., 2010

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-10:



Grateful thanks to Na.Muthukumar, Udit Narayan, 'sudhan0072005'. Indiaglitz, and YouTube.

திருநீற்றுப்பதிகம்-1:

திருஞானசம்பந்தர் அருளிய திருநீற்றுப்பதிகம்

மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவாலவாயன் திருநீறே.