செய்தித்தாட்களிளிருந்து பயன்படும், பயன்படும் என்று நிறைய கத்தரித்து சேர்த்துவிட்டேன். எக்கச்சக்கமாய் குவிந்துவிட்டது. எப்போது அவற்றை படித்து, எப்போது அவை பற்றி என் கருத்துக்களை எழுதுவது? பார்க்கலாம், பார்க்கலாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து விட்டேன். இப்போது பல செய்திகள் பழையனவாய், சுவாரஸ்யம் குறைந்து போய்விட்டது. அவற்றை குப்பையில்தான் போடவேண்டும். உடனுக்குடன் எழுதாதது எவ்வளவு தவறு என்று இப்போது உணர்கிறேன்.
லஞ்சம், ஊழல், பொய், பித்தலாட்டம், அராஜகம், அக்கிரமம் என்று பார்த்தால் மலைபோல் செய்தி குவிந்து கிடக்கிறது. அனைவரும் அறிந்தது. மேலும் கிட்டத்தட்ட யாராலும் எதுவும் செய்யமுடியாது என்ற வகையைச் சேர்ந்தவை. ஐ.பி.எல். ஊழல்கள், பித்தலாட்டங்கள்; இந்திய மருத்துவக் கவுன்சில் தலைவர் கேதான் தேசாய் மீது இரண்டாயிரம் கோடி ஊழல் புகார் (ஆயிரத்து எண்ணூறு கோடி ரூபாய் ரொக்கம்! ஒன்றரை தன் தங்கம் பறிமுதல்!! - அடப்பாவிகளா!!! இப்பொழுதெல்லாம் ஊழல்களெல்லாம் ஆயிரம் கோடிக் கணக்கில்தான்.); சென்னையில் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூபாய் ஆயிரத்து ஐந்நூறு கோடி மதிப்புள்ள நிலங்கள் ஆக்கிரமிப்பு; ஏரிகள் மற்றும் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு; எஞ்சியுள்ள ஏரிகளையாவது மீட்க நடவடிக்கை எடுக்கப்படுமா? தேர்தல்கள் முடிந்து எவ்வளவோ காலம் கடந்தபின்னும், பதினாறு அரசியல் கட்சிகள் இன்னும் தேர்தல் செலவு கணக்குகளைக் கொடுக்கவில்லை (நம்மூர் பாட்டாளி மக்கள் கட்சி உட்பட); வெளிநாடுகளில் வசூலித்த கோடிக்கணக்கான பணத்தை எப்படி நாட்டுக்குள் கொன்று வருவது என்று இடது சாரிக் கட்சிகள் சில தவிக்கின்றன; மின்திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு ரூபாய் நாற்பத்தெட்டு கோடிக்கு மேல் வசூலிக்கப் பட்டது (வசூலிக்கப் படாமல் போனது எவ்வளவோ?) தமிழக எல்லையில் பகிரங்க மின்திருட்டு. இப்படி எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் கசப்புணர்வும், வெறுப்புணர்வும்தான் மிஞ்சும். அவை ஊழல் பெருச்சாளிகளைப் பாதிக்கிறதோ இல்லையோ, நம்மை பாதிக்கும், நம் உடல் நலனைப் பாதிக்கும். எனவே, நல்ல விஷயங்களை மட்டும் பார்ப்போம்.
சூரிய சக்தியால் பகலிலும், இரவிலும் இயங்கும் விமானம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பிக்கார்டு என்பவரின் மகத்தான சாதனை இது. தொண்ணூறு நிமிடங்கள் ஒரு பெரிய விமானத்தை பறக்கவைத்து - பாதுகாப்பாக மேல ஏறவும், கீழே இறங்கவும் செய்து - சாதனை படைத்துள்ளார். குறைந்த வேகத்தில் பறந்தாலும், சாதனை சாதனைதான். விமானங்களை இயக்கும் செலவு பெரிதும் குறைவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாகக் குறையும். இதனால் விமானப் பயண வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் தருகிறது இச்செய்தி. (நன்றி: தினமலர், மதுரை, ஏப்ரல் 24, 2010).
மும்பையில் மானோ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி. போக்குவரத்து நெரிசல் என்பது மும்பை போன்ற பெருநகரங்களில் மிரட்டுகின்ற பிரச்சினை. பதினைந்து லட்சத்திற்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் மும்பைக்கு இது ஒரு வரப்பிரசாதம். டிசம்பர் முதல் மானோ ரயில் இயங்கும் என்ற தகவல் மும்பைவாசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. (நன்றி: தினமலர், மதுரை, ஏப்ரல் 25, 2010).
ஞாயிறுதோறும் தினமணியில் வெளியாகும் தமிழ்மணி என்ற சிறப்புப் பகுதி மிக மிக அருமையாக வந்துகொண்டிருக்கிறது.
மே இரண்டாம் நாள் தமிழ்மணியில் சிவப்பிரகாசர் அருளிய நன்னெறியிலிருந்து ஒரு பாடலும், அதன் விளக்கமும். தறிகெட்டு, முறைகேட்டு தாறுமாறாய்ப் போய்க்கொண்டிருக்கும் இன்றைய வாழ்க்கையில் இது போன்ற மேன்மைதரும் இலக்கியம் மிகத் தேவை. பெரும்பாலோர் நன்னெறி என்றொரு ஒப்பற்ற நூல் இருக்கிறது என்பதையே அறியாமல் இருக்கலாம்; படித்த பேரும் மறந்துகொண்டிருக்கலாம். தமிழ்மணியின் இச்சேவை பாராட்டுதற்குரியது.
அடுத்து புலவர் இரா.ராமமூர்த்தியின் "தமிழ்க்கடல் இராய.சொக்கலிங்கனார்" என்ற அற்புதமான கட்டுரை. காரைக்குடியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாய் வசித்துவரும் எனக்கே அவர் பற்றி தெரியாதிருந்த பல ஒப்பற்ற செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பை நல்கியது. கவிஞராய், இதழாசிரியராய், சொற்பொழிவாளராய், நூலாசிரியராய், நினைவுக் கலைஞராய், சமுதாயத் தொண்டராய், அரசியல் போர்வீரராய், பன்முகப் பரிமாணம் கொண்ட இராய.சொ. அவர்களின் தேசபக்தியும், மதப்பற்றும், தமிழ் இலக்கியத்திற்கு அவர் ஆற்றிய பெருந்தொண்டும் நினைவுகூறப்பட்டுள்ளது. (புலவர் இரா.ராமமூர்த்தி அவர்களுக்கும், தினமணிக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்).
மாதம் ஒரு இலக்கிய விவாதம் என்ற பிரிவில், 'கம்பனுக்கு முன்பே தமிழில் ராமாயண நூல்கள் உண்டு' என்ற புலவர் முத்து.வெங்கடேசன் அவர்களின் கட்டுரை. நிறையச் சான்றுகளை அள்ளி வழங்கியுள்ளார். சிறப்பான கட்டுரை. ஆனால் காலவெள்ளத்தால் இந்நூல்கள் அழிந்துபோயிருக்கலாம் என்பது வருத்தமான செய்தி.
அடுத்து நான் தமிழ்மணியில் மிகவும் ரசிக்கும் பகுதி: கலாரசிகனின், "இந்த வாரம்". லட்சியப் பத்திரிகை, லட்சியப் பிரசுரம் இவற்றுடன் லட்சிய வாழ்க்கை வாழ்ந்த மாமனிதர் சக்தி வை.கோவிந்தன் பற்றி பல பயனுள்ள தகவல்களைத் தந்துள்ளார். அவரது இறுதிக் காலம் வறுமையில் கழிந்தது என்பதைப் படிக்க வேதனையாக இருந்தது.
அடுத்து பாரதியையே சுவாசிக்கும் எழுபத்தாறு வயது மாமனிதர் சீனி.விசுவநாதன் அவர்கள் பற்றிய குறிப்புகள். பாரதி பற்றி விடைகிடைக்காத பல கேள்விகளுக்கு விடையளிக்கும் அவரது நூலான, "பாரதி ஆய்வுகள் - சிக்கல்களும், தீர்வுகளும்' பற்றி நாமறியத் தந்துள்ளார். நன்றிகள்! எப்போது இப்புத்தகம் என் கைக்கு வரும் என்று ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்.
அடுத்து பாரதி பற்றியும், காந்தியடிகள் பற்றியும். முதல்வரியே எனக்கு மிகவும் பிடித்து விட்டது: "என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தும் எழுத்தாளர்கள் இருவர். ஒருவர் மகாத்மா காந்தி. மற்றொருவர் மஹாகவி பாரதியார். " என்னுடைய உணர்வுகளை இந்த வரிகள் அப்படியே பிரதிபலிக்கின்றன. இப்பகுதியில் லா.சு.ரங்கராஜன் அவர்களின் 'சத்யாக்கிரகி மகாத்மாகாந்தி' என்ற நூல் பற்றியும் கூறியுள்ளார். இதுவும் நான் பிடிக்கவிரும்பும் புத்தகங்கள் பட்டியலில் சேர்ந்துவிட்டது.
இறுதியாக, 'சௌந்தர சுகன்' என்ற சிற்றிதழ் பற்றி. காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் முதல்முறையாக 'சிற்றிதழ் கண்காட்சி நடத்தியவன் என்று பெருமைப்படுபவன் நான். சிற்றிதழ்களின் இலக்கிய சேவையை பெரிதும் போற்றுபவன் நான். இந்த சிற்றிதழ் பற்றி அறிவதில் மகிழ்கிறேன். இந்த இதழிலிருந்து ஒரு அருமையான கவிதையையும் தந்துள்ளார் கலாரசிகன் அவர்கள். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
செய்தி என்றாலே வெட்டு, குத்து, கொலை, விபத்து, லஞ்சம் போன்ற மனதை வருத்தி, சோர்வுறச் செய்யும் தகவல்களுக்கு மத்தியில், தரமான தமிழ் இலக்கியம் பற்றி வாசிக்க விரும்புவோர் தினமணியின் இந்த ஒப்பற்ற தமிழ்மணி வாசிக்கத் தவறக்கூடாது. மீண்டும் தினமணி இதழுக்கு நன்றி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக