6 ஆக., 2010

சூரியின் டைரி-24: அகில இந்தியப் பயணம்-1


1978 ம் வருடம் ஏப்ரல் அல்லது மே மாதம் என்று நினைக்கிறேன்.  மதுரையிலிருந்து பேருந்தில் காஷ்மீர் ஸ்ரீநகர் வரை 23 நாட்கள் பயணம் என்று மதுரை ஸ்ரீகுமரன் ட்ராவல்ஸ் ஏற்பாடு செய்திருந்தனர்.  அவர்கள் முப்பது நாற்பது முறை இதுபோன்ற பயணங்கள் நடத்தியிருக்கின்றனர் என்று அறிந்து, அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த யாத்திரையில் கலந்துகொள்வது என முடிவெடுத்தேன்.  அப்போது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை.  இந்த பயணத்தில் முக்கியமான குறை ஒரு நல்ல கேமராவும், ஒரு குறிப்பேடும் எடுத்துச் செல்லாததும், எதையுமே உடனுக்குடன் பதிவு செய்யாததும்.  எத்தனையோ இனிய காட்சிகள், சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்.  பதிவு செய்யாததால் பெரும்பாலானவை விடுபடுகின்றன.  முற்றிலும் நினைவிலிருந்தே இந்த அனுபவங்களை எழுதுகிறேன். ஆகவே தவறுகள் இருக்க வாய்ப்புண்டு, பொறுத்தருள்க! 

முதல் நாள் இரவே மதுரை சென்று வடக்குச் சித்திரை வீதியில் (?) இருந்த அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றேன். அடுத்தாற்போலிருந்த   விடுதியில் தங்கினேன். காலை நான்கு மணிக்கு முன்னதாக எழுந்து குளித்துத் தயாரானேன்.  கேரளாவிலிருந்து ஒரு சூப்பர் டீலக்ஸ் பேருந்து வந்திருந்தது. (அந்தப் பேருந்தின் முன்னே  ஏதோ ஒரு  ஊரில்  எடுத்துக்கொண்ட படம் மேலே)  இரண்டு ஓட்டுனர்கள். இருவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.  காலை ஐந்து மணிக்கு மதுரையைவிட்டு பேருந்து கிளம்பியது.  கிளம்பும்போதே ட்ராவல்ஸ் உரிமையாளர் (அவரும் எங்களுடன் பயணித்தார்) கூறினார்.  இனிமையான பயணத்தை முடித்து நல்லபடியாக ஊர் திரும்ப இறைவனைப் பிரார்த்திப்போம் என்று.  இறை நம்பிக்கை உள்ளவர்கள் அவரது பிரார்த்தனையில் கலந்துகொள்ளலாம் என்றார்.  "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என்ற முழக்கத்தோடு பேருந்து கிளம்பியது.  வழியில் எங்காவது விபத்துக்களைக் கண்டாலும் உடனே இந்த வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம்தான்.

திருச்சியில் காலை உணவு.  மதிய உணவு வந்தவாசியில்.  அங்கிருந்து காஞ்சீபுரம்.  காமாட்சி அம்மன் கோவில் நடை திறக்க தாமதமாகும் என்பதால் வெளியிலிருந்தே கும்பிட்டுவிட்டு, திருத்தணிக்குக் கிளம்பினோம்.  திருத்தணி தேவஸ்தான விடுதியில் பொருட்களை வைத்துவிட்டு, திருத்தணி முருகனை வழிபாட்டு வந்தோம்.  இரவு உணவிற்குப்பின் உறக்கம்.  அதிகாலை குளித்துவிட்டுக் கிளம்பினோம்.  நேரே காளஹஸ்தி.

இங்கே நான் ஒன்றைக் குறிப்பிடவேண்டும்.  அப்போதெல்லாம் எனக்கு பக்தி என்று பெரிதாக எதுவும் இல்லை.  எல்லாமே அரைகுறைதான்.  காளஹஸ்தியில் வழிபாட்டிற்குப்பின் வெளியே வரும்போது எங்களுடன் வந்த அன்பர் ஒருவர்  கோபுரங்களில்  (பிரகாரத்தில்?) காமசூத்திரத்தின் அறுபத்து நான்கு கலைகளும் சிற்பங்களாக இருப்பதாகக் கூறவே அதைப் பார்க்க தனியே ஒரு கூட்டம் சேர்ந்தது.

காலை உணவு காளஹஸ்தியில்.  அங்கிருந்து நெல்லூர்.  அங்கு மதிய உணவு.  ஆந்திரா காரம் என்றால் என்னவென்பதை அங்கேதான் உணர்ந்தேன். மற்றபடி  பொடி அரிசி, சுவையான காய்கறிகள்  என்று சிறப்பான சாப்பாடு.  அங்கிருந்து இரவு தங்க நாகார்ஜுனசாகர் அணைக்கட்டில் ஒரு திறந்தவெளி மணடபத்தில் தங்கல். உணவும் அங்கேயேதான்.

காலை எழுந்து, துங்கபத்திரா நதியில் புனித நீராடி, காலை உணவு முடித்துக் கிளம்பினோம்.  நேரே ஹைதராபாத் சாலார் ஜங் அருங்காட்சியகம்.  பிரமிக்கவைக்கும் ஒரு  அரும்பொருள் திரட்டு.  முழுமையாகக் காண்பதற்கு எங்களுக்கு நேரம் போதவில்லை.  அடுத்து சார்மினார்.  சார்மினார் என்றால் நான்கு கோபுரங்கள் என்று பொருள்.  உலகப் புகழ்பெற்ற இதை அனைவரும் அறிந்திருப்பீர்கள், படங்களில் பார்த்திருப்பீர்கள்.  நாங்கள் மேலே செல்லவில்லை.

இரவு வழியில் எங்கோ தங்கினோம்.  மறுநாள்  ஏதோ ஓடையில் குளித்தோம்.  அடுத்து என் நினைவிற்கு வருவது காசி நகரை நோக்கிய பயணம்.  இருள் சூழ ஆரம்பித்திருந்தது. பெரிய, அகண்ட சாலை.   வழியில் பல சாலை உணவு விடுதிகள் (இன்றைய 'தாபாக்கள்?').  ஒவ்வொரு உணவு விடுதியின் முன்னும் நிறைய கயிற்றுக் கட்டில்கள். லாரி ஓட்டுனர்கள் இரவில் தூக்கம் வந்தால் ஏதாவது ஒரு உணவு விடுதியின் கயிற்றுக் கட்டிலில் படுத்துறங்கிவிட்டு, விழித்தபின் அங்கேயே உணவருந்திவிட்டு பயணத்தைத் தொடர்வது வழக்கம் என்று சொன்னார்கள்.  இரவு ஒன்பது மணி சுமாருக்கு காசியை அடைந்தோம். அங்கே முத்துக்குமாரசாமி மடம் என்று நினைக்கிறேன்; அங்கே தங்கினோம்.   காசி, வாரணாசி, பனாரஸ் என்று பல பெயர்களில் வழங்கும் இந்துக்களின் மிகப் புனித நகர்.  அங்கே இறந்தால்  மறுபிறவியில்லை    என்ற நம்பிக்கை.  கங்கைக் கரையில் பல படித்துறைகள்.  ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு 'காட்' (ghat) என்று பெயர்.  அரிச்சந்திராகாட், தசாஸ்மேவகாட்   என்று பல படித்துறைகள்.  நான் கடவுள் திரைப்படத்தில் பல வருகின்றன.

மறுநாள் காலை புனித கங்கையில் குளித்துவிட்டு, படகு சவாரி.  ஆலய தரிசனங்கள்.  வழிபாடுகள்.  தர்ப்பணம் செய்வோர் தர்ப்பணம்.  அப்புறம் காசியில் சிறப்பாகக் கிடைக்கும் காசிப்பட்டு போன்ற பொருட்களை வாங்க சிறு சிறு குழுக்களாகக் கிளம்பினர்.  நாங்கள் ஒரு சிறு குழு குதிரை வண்டியில்  வாரணாசி ரயில் நிலையம் சென்றோம்.   வழியில் சாலப் பராமரிப்பு நடந்துகொண்டிருந்தது.  அங்கே  'உங்கள் வரிப்பணம், இங்கே செயல்படுகிறது'  என்று  அறிவிப்புப் பலகை.

அடுத்த நாள் சாரநாத் சென்றோம்.  புத்த பிரான்  நிறுவிய சங்கம்.  புகழ்பெற்ற சாரநாத் ஸ்தூபி.  வற்றலாற்றுப் பாடத்தில் படித்த பலவற்றை கண்கூடாகக் கண்டோம்.

காசியில் இரண்டு நாளோ, மூன்று நாளோ  குமாரசாமி மடத்தில்(?) தங்கினோம்.  அடுத்து அலஹாபாத்.  நேரு குடும்பத்தினரின் ஆனந்த பவனத்தில் அருங்காட்சியகம்.  (அங்கே எடுத்த படம் மேலே)  திருவேணி சங்கமம் நோக்கிச் சென்றோம்.  புனித நதிகளான கங்கையும், யமுனையும் அதோடு கண்ணுக்தெரியாத சரஸ்வதியும் ஆக மூன்று நதிகளின் புனித சங்கமம். புனித நீராடல்.  வழிபாடு.

அடுத்து ஹரித்வாரம்.  ஹரித்வாரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கட்டிய சத்திரத்தில் தங்கல்.  (பெருமாள் செட்டி சத்திரம்?)  கங்கைக் கரையில் அந்த சத்திரம்.  கட்டிடடத்தின்  இரும்புக்கிராதியிட்ட   அடித்தளத்தில் கங்கை நதி வீட்டிற்குள்ளேயே வருகிறது.  அந்தக் கோடையிலும் தொட்டால் கைகள் விறைத்துவிடும் அளவிற்கு நீர் ஜில்லென்று இருந்தது.  பணி உருகி நீராக வருவதால் இருக்கலாம்.  ஹரித்துவாரில் 'ஹரி கி பைரி' (மகாவிஷ்ணுவின் திருவடிகள்) என்ற மிகப் புனிதமான இடத்தில் கங்கையில் குளித்தோம்.  கரை முழுவதும் கடைகள்.  ஹரித்துவார் எனக்கு மிகவும் பிடித்தது.  (பின்னர் பல ஆண்டுகள் கழித்து அருகாமையில் பல நாட்கள் தாங்கும் வாய்ப்புக் கிடைத்தது. நான்காண்டுகளுக்கு முன் மூன்றாம் முறையும் அங்கே செல்லும் அரிய வாய்ப்புக் கிட்டியது.)

அங்கிருந்து  ரிஷிகேஷத்திற்கும்,  லக்ஷ்மண்  ஜூலாவின் மறுபுறமிருந்த ஆலயத்திற்கும் சென்று வந்தோம்.  வழியில் சிவானந்தரின் அஷ்ராமத்தை வெளியிலிருந்தே பார்த்தோம்.  கால அவகாசம் கருதியும், யாருக்கும் அதிலே ஆர்வமில்லாததாலும்  உள்ளே சென்று பார்க்கவில்லை.  இரவு உணவிற்கும், உறக்கத்திற்கும் மறுபடியும் ஹரித்துவார்.(மேலே முதல் படத்தில் லக்ஷ்மண்ஜூலாவில்  சூரியும் ஒரு சக பயணியும்)  

அடுத்து சர்ச்சைக்குரிய  அயோத்தியா.  இப்பதிவு நீண்டுவிட்டபடியால் இங்கே நிறுத்திக்கொண்டு, நாளை புதிய பதிவாகத் தொடர்வேன்.  (இரண்டாவது படத்தில் அயோத்யாவில்  ஒரு  கோவில்).
 

கருத்துகள் இல்லை: