அயோத்தியா. சர்ச்சைக்குரிய பூமி. நாங்கள் ஒரு மதியம் அங்கு போய்ச் சேர்ந்தோம். நுழையும் இடத்திலேயே ஒரு பெரிய கோவில்(படம் மேலே). நாங்கள் தங்கிய இடம் நகரத்தார் சத்திரம். அது ஒரு பழங்காலக் கட்டிடம். பொருட்களை வைத்துவிட்டு சரயூ நதியில் தீர்த்தமாடச் சென்றோம். அங்கே கரையோரம் பிணம் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அகண்ட காவிரியை நினைவு படுத்தும் பெரிய ஆறு. அதில் புதிய பிரம்மாண்டமான சாலைப் பாலம். அங்கிருந்து பிர்லா மந்திர் என்று நினைக்கிறேன். சலவைக் கல்லில் ஆன ராமர் ஆலயம். அப்போது சொன்னார்கள். அயோத்திய முழுவதும் இது போன்று பல பேர் கோவில்களையும், சாத்திரங்களையும் கட்டி வைத்துள்ளனர். யாத்ரீகர்களுக்கு இலவச தங்குமிடம் மற்றும் இலவச உணவு. அப்படியென்றால் தேவையில்லாமல் ஏன் பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டத் துடிக்கிறார்கள்? புரியவில்லை. அடுத்து அங்கேதான் சென்றோம் - பாபர் மசூதி. கதவு சாத்தப்பட்டு அரக்கு சீல் வைத்திருந்தார்கள் வெளியிலிருந்தே பார்த்தோம். அருகே பந்தலில் அகண்ட நாம பஜன் - ராமர் மேல் பக்தர் கூட்டம் பஜனை செய்துகொண்டிருந்தது. எவ்வளவோ ஆண்டுகளாக இடைவிடாமல், தினமும் இருபத்து நான்கு மணி நேரமும் பக்தர் கூட்டம் மாறி மாறி வந்து பஜனை செய்வதாக. எப்படியாவது பாபர் மசூதியை அழித்து, அங்கே ராமர் கோவிலைக் கட்டவேண்டும் என்று அவர்கள் போராடுவதாகச் சொன்னார்கள். (பின்னர் நரசிம்ம ராவ் பிரதமராக இருந்த காலத்தில் மசூதியை அழித்தே விட்டார்கள். அதனால் எத்தனை வன்முறைகள். உலக அரங்கில் இந்தியாவின் பெயர் எவ்வளவு தாழ்ந்தது! மக்களின் அறியாமையும், கண்மூடித்தனமான பக்தியையும் பயன்படுத்திக் கொண்டு அரசியல்வாதிகள் எப்படியெல்லாம் பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவர்களுக்கு தங்கல் சுய லாபம்தான் முக்கியம், வேறு எதுவே முக்கியமில்லை. மற்ற விளைவுகளைப் பற்றி அவர்கள் நினைப்பதும் இல்லை, கவலைப் படுவதும் இல்லை. இது இந்த நாட்டின் சாபக் கேடு.
அடுத்து பதான்கோட் வழியே ஜம்மு சென்றோம் என்று நினைக்கிறேன். ஜம்முவில் இரவு தங்கல். எனக்கும் என்னுடன் வந்த இரு அன்பர்களுக்கும் தோசை சாப்பிடும் ஆசை வர, ஜம்முவில் கிடைக்கும் என ஒருவர் கூற, நாங்கள் தென்னிந்தியா உணவு கிடைக்கும் விடுதியைத் தேடி அலைந்து ஒரு வழியாகக் கண்டுபிடித்து, தோசை ஆர்டர் செய்தோம். புளித்த தோசை, ரெடிமேட் தேங்காய் சட்னி, தண்ணீர் சாம்பார் என்று ஒரு பாடாவதி டிஃபனை சாபிட்டோம்.
மறுநாள் காலை அரசு மினிப்பேருந்தில் இரண்டு பிரிவாகப் பிரிந்து ஸ்ரீநகருக்குப் பயணமானோம். வழியில் உத்தம்பூரில் சீஸ் வடை சாப்பிட்டு, வாழ்வில் முதல்முறையாக பேருந்தில் வாந்தி எடுத்தேன். கடுகு எண்ணெயில் செய்த வடை. ஒரே எண்ணெய் திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படுவதால் எல்லோருக்கும் ஒத்துக்கொள்வதில்லை என்று சொன்னார்கள். வழியில் பாசுமதி அரிசி உணவு. ஸ்ரீ நகர் சென்றபோது இருட்டிவிட்டது. ஜீலம் நதிக்கரையில் ஒரு விடுதியில் டார்மிட்டரியில் முன்பதிவு செய்திருந்தார்கள். கம்பளி வாடகைக்குக் கொடுத்தார்கள். எனினும் அந்தக் கோடையிலும் குளிர் கொன்று எடுத்துவிட்டது.
அடுத்த நாள் காலை வெந்நீரில் குளித்துவிட்டுக் கிளம்பினோம். அதற்குள் சீதோஷ்ணநிலை மாறி சுகமான இளம் வெயில். ஷிகார் எனப்படும் சிறு படகுகளில் இருவர் இருவராக பயணம் செய்தோம். சுகமான அனுபவம். (படம் மேலே) ஜீலம் நதியில் தொடங்கி தால் ஏரிக்குப் படகு சென்றது. இரண்டுக்கும் நீர் மட்ட வேறுபாடு காரணமாக இரட்டை மதகுகள். முதல் மதகு திறக்கப்பட்டவுடன் படகுகள் உள்ளே செல்லும். அந்த மதகு மூடப்படும். நீர் மட்டத்தை மாற்றி அடுத்த மதகைத் திறப்பர். படகுகள் ஏரிக்குள் செல்லும்.
வழியெங்கும் படகு வீடுகள். எல்லாமே படகில்தான். சுத்தம் என்றால் என்னவென்று கேட்கும் நிலை. ஏரி நடுவில் ஒரு பூங்கா. (நேரு பூங்கா?) அங்கே ஒரு சிற்றுண்டி விடுதி. அங்கே தேநீர் அருந்தினோம். பின்னர் அங்கிருந்து ஷாலிமார் பாக் எனப்படும் ஷாலிமார் பூங்காவிற்குச் சென்றோம். படகு சவாரியை முடித்துவிட்டு விடுத்திக்கு வரும்போது மாலையாகி விட்டது. ஏதாவது வாங்கலாம் என்று சக பயணிகளுடன் கடைவீதிக்குச் சென்றோம். நான் ஒன்றும் வாங்கவில்லை. வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன். அங்கே ஒரு வியாபாரியின் வீட்டில் குங்குமப்பூ தேநீர் அருந்தியதை மறக்க முடியாது.
அடுத்த நாள் காலை ஜம்மு செல்ல, வேரிநாக் எனப்படும் ஜீலம் நதி உற்பத்தியாகும் இடம் வழியே சென்றோம். ஒரு தடாகத்திலிருந்து ஊற்றாக நதி உருவாகிறது. வழியெங்கும் சிற்றோடைகள் சேர பெரிய நதியாக உருவெடுக்கிறது. (அந்தத் தடாகத்தின் அருகே எடுத்த படம் மேலே). ஜம்முவில் இராத் தங்கல். மறுநாள் காலை தில்லி பயணம். அதை நாளை எழுதுகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக