இரவில் தில்லிக்குச் சற்று வெளியே ஒரு பெட்ரோல் பங்கில் உறக்கம் . பொழுது புலருமுன் கிளம்பினோம். பொழுது புலரும் அந்த இனிய காட்சியை என்னால் மறக்க முடியாது. புது தில்லியின் அந்த பரந்த வெளிகளில், இதமான இளம் பனியில் நடை பழகுவோர், குதிநடை புரிவோர் என்று ஆங்காங்கே மக்கள். முதலில் ராஜ் காட் சென்று காந்தி மகானது சமாதியில் வழிபட்டோம். அடுத்து நேரு, சாஸ்திரி சமாதிகள் முடித்து தங்குமிடமான ஹிந்து மகா சபாவிற்குச் சொந்தமான ஒரு இடம். குளித்துக் காலை உணவை முடித்து பிரதமர் இல்லம் சென்றோம். அங்கே பார்வையாளர்களை தனித்தனி குழுக்களாக அமரச் செய்தனர் பாதுகாவலர்கள். ஒவ்வொரு குழு அருகிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் வந்து நிற்க புகைப்படம் எடுக்கப்பட்டது. எங்கள் குழு அருகே அவர் வந்ததே தெரியாது. புகைப்படம் அதற்குள் எடுத்து முடித்துவிட்டார்கள். படத்தை மதுரை வந்துதான் பார்த்தேன். (எங்களுக்கு முன்னதாக படம் மதுரை வந்துவிட்டது). (அப்படம் மேலே).
அடுத்து திருமதி இந்திரா காந்தியின் இல்லம். தேர்தலில் தோற்று அப்போது அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை. முன்னால் பிரதமர் என்ற அந்தஸ்து மட்டும்தான். ஆனால் அங்கும் பார்வையாளர் கூட்டம், பிரதமர் இல்லம்போல். சிறிது நேரத்தில் அவர் வந்து எங்களது குழு மேலாளரிடம் சிரித்துப் பேசினர், விசாரித்தார். ஸ்ரீநகர் சென்று வந்ததைக் கேட்டதும், பஹல்காம் சென்றீர்களா என்று கேட்டார். அடுத்த முறை கண்டிப்பாகப் பாருங்கள், பார்க்க வேண்டிய இடம் என்றார். நாங்கள் அழைத்துச் சென்றிருந்த புகைப்படக்காரர் மூன்று முறை படம் சரியாக எடுக்க முடியாமல் கோட்டை விட, அதற்கு மேல் அவகாசமில்லாமல், 'ஸாரி!' சொல்லிவிட்டு, சிரித்தபடியே அடுத்த கூட்டத்தை நோக்கி நகர்ந்தார் இந்திரா.
அடுத்தது காந்தி நினைவு வளாகம். கோட்சேயால் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடம். அங்கே அந்த இடத்தில் வரைந்து வைத்திருந்தார்கள். புரியாமை, சகிப்புத்தன்மையின்மை, வன்முறை, தீவிரவாதம் இப்படிப்பட்ட கொடுமைகளால் உலகில் எவ்வளவு துன்பம். சிறு சிறு கூட்டங்கள் மனித சமுதாயத்தையே அச்சுறுத்தும் கொடுமை, அதற்குப் பதில் தரமுடியாத துயரம். இந்தக் கொலைகாரர்களுக்கு ஆதரவாக சில மேதைகள். வன்முறையாளர்களின் மனித உரிமை பற்றி இந்த அறிவாளிகள், பெரியவர்கள் பேசும்போது, இந்தத் தீவிரவாதிகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள், இந்த தீவிரவாதச் சம்பவங்களால் அல்லலுறும் அப்பாவிப் பொதுமக்கள் இவர்களுக்கெல்லாம் உரிமை எதுவும் கிடையாதா என்று கேட்கத் தோன்றுகிறது.
அடுத்த நாள் தில்லி செங்கோட்டை, குதுப்மினார், தீன்மூர்த்தி பவன். இதை நாளைப் பதிவு செய்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக