13 ஆக., 2010

சூரியின் டைரி-29: புதுவையில் பாரதி


பாரதி  நான்  போற்றி  வணங்கும் பெருந்தகைகளுள், மகான்களுள்  ஒருவர்.  அவரைப் பற்றிய நூல்களைத் தொகுத்து வருகிறேன்.  சமீபத்தில்  குருவாயூர்  விரைவு வண்டியில் குளிர்சாதன படுக்கை வசதி பெற்று திருச்சியிலிருந்து சென்னை வந்தேன்.  ரயிலில் புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.  தொல்லையில்லாத சூழல், குறிப்பாக கூட்டமில்லாமல், எந்த இடையூறும் இல்லாமல் இருந்தால் நன்றாகப் படிக்கலாம்.  அதிலும்  தற்போது படிப்பதே சிரமமாகிப் போன இந்தத் தருணத்தில் ரயில் பயணத்தில் மட்டும் என்னால் நன்றாகப் படிக்க முடிகிறது. 

திரு.ப.கோதண்டராமன் அவர்கள் எழுதி பழனியப்பா பிரதர்ஸ்  வெளியிட்ட புதுவையில் பாரதி என்ற புத்தகத்தை முழுவதுமாக ரசித்துப் படிக்க முடிந்தது.  ஏற்கனவே 2007ல்  நான் படித்ததுதான் என்றாலும் மறுபடி படிக்கும்போது உன்னிப்பாக பல தகவல்களை அறியமுடிந்தது.  நிறைய ஆய்வு மேற்கொண்டு ஆசிரியர் சிறப்பாக எழுதியிருக்கிறார் என்பதை முதலில் கூறிவிட வேண்டும்.  பாரதி அன்பர்கள், பக்தர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு அருமையான நூல் இது.  

புதுவையில் பாரதி சில காலம் தங்கியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  ஆனால் அவர் கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் அங்கே இருந்தார் என்பதை அறிய ஆச்சரியமாக இருந்தது.  அவர் உயிர் வாழ்ந்ததே முப்பத்தொன்பது ஆண்டுகள்தான் என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.  அந்தப் பத்து ஆண்டுகளும் அவர் படைப்பாற்றலில் உச்சத்தில் இருந்த காலம்.  அவரது முக்கியமான படைப்புகள், அமர சிருஷ்டிகள் அனைத்தையும் அவர் உருவாக்கியது இந்தக் காலத்தில்தான்.  வேதாந்தப் பாடல்கள், சக்திப் பாடல்கள், பெண் விடுதலைப் பாடல்கள், சுய சரிதை, வசன கவிதை, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை அங்கேதான் படைத்தார்.  

அரவிந்தர் பாரதியாரைவிட பத்து வயது மூத்தவர்.  பாரதியார் அவரிடம் ரிக் வேதத்திலிருந்து  200 பாடல்கள் முறையாகக் கற்றுக் கொண்டு  அவற்றை  அடிப்படையாகக் கொண்டு தமிழில் பல பாடல்களை எழுதியுள்ளார்.  பாரதியார் அரவிந்தருக்குத்  தமிழைக் கற்றுக் கொடுத்தார்.  இருவரும் வேதாந்த  சிந்தனைகளைப்  பற்றி உரையாடினர்.  பாரதியார் ஆழ்வார்களின் பாடல்களைப் பாட, அரவிந்தர் அவற்றைக் கேட்டு மகிழ்வார்.  இப்படி அவர்களுக்குள்ளே ஒரு இனிய நட்பு இருந்தது. 

அரவிந்தர், வ.வே.சு.ஐயர், மண்டயம் ஸ்ரீநிவாச்சாரியார் ஆகியோருடன் உரையாடுவது பாரதியாருக்கு உற்சாகத்தை அளித்தது.  இவர்கள் கூடிப் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது.  வறுமை, இரகசிய போலீஸ் இடைஞ்சல்கள் இவைகளால்  மனமுடைந்திருந்த தருணத்தில் இவர்களது தொடர்பு பாரதிக்குப் பெரும் ஆறுதலாக இருந்தது.

இந்நூலில் பாரதியின் படைப்புகள் பலவற்றிலிருந்து பகுதிகளை எடுத்து இந்நூலாசிரியர் சிறப்பான  ஆய்வு செய்துள்ளார்.  இந்த ஆய்வுக் கருத்துக்கள் அனைவருக்கும், குறிப்பாக பாரதி பற்றி ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகும்.

என்னிடமுள்ள இப்பிரதி இரண்டாம் பதிப்பு, 1990ம்  ஆண்டு வெளியிடப்பட்டது.  அப்போது அதன் விலை ரூபாய் இருபத்துஒன்று மட்டுமே.  நூற்று எண்பது பக்கங்கள் கொண்ட  இந்த நூல் அனைவரும் படித்து மகிழவேண்டிய ஒன்று. 

கருத்துகள் இல்லை: