27 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-84: தும்பை விட்டு


தும்பை விட்டு

பள்ளி வாகனங்கள்
விதிகள் சீரமைக்க
பலிகொடுக்க வேண்டி இருக்கு
ஒரு சுருதியை.

மாநிலம் விட்டு
மாநிலம் வரும்
கூலி தொழிலாளர்
நல விதிகள் சீரமைக்க
பலிகொடுக்க வேண்டி இருக்கு
பத்து தொழிலாளர்களை.

மருத்துவமனைகளில்
எலி, பூனை, நாய்கள்
வலம் வருவது தடுக்க
கடிபட வேண்டி இருக்கு
ஒரு இறந்த குழந்தை முகம்

ஆசிரியர் மாணவர்
உறவுமுறை பற்றி
விமர்சனம், விவாதங்கள்
விழிப்புணர்வு ஏற்பட
எங்கோ ஒரு மாணவன்
அருந்த வேண்டி இருக்கு
ஆசிரியர் கையால் சிறுநீர்.

பட்டாசு தொழிலகத்தில்
பாதுகாப்பு விதி மீறல்
நாற்பது என கண்டு சொல்ல
நாற்பது பேர் உடல் சிதறி
மடிய வேண்டியிருக்கு.

பெரிதாய் விபரீதம்
நடந்த பின்தான்
அரசு விழிக்குமா?

எந்த விபத்தில்
யார் இறந்தாலும்
ரூபாய் இரண்டு லட்சம்
கியாரண்டி என்பதோடு
முடிந்து விடுமா அரசின் கடமை.?

கருத்துகள் இல்லை: